islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

யாருக்கும் வெட்கமில்லை...?





நாக்குக்கு நரம்பில்லை என்பது, சும்மா ஒரு சொல் வழக்கு தான். உண்மையில், நாக்கில் நான்கு வகையான நரம்புகள் உள்ளன. நாக்குக்கு எலும்பு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்; இது சாதாரண மனிதர்களுக்கு. இந்த அரசியல்வாதிகளைப் பார்த்தால், நாக்கில் மட்டுமல்ல, உடம்பிலேயே எலும்பு இல்லையோ என சந்தேகமாக இருக்கிறது.



சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன. மே மாதம் 12ம் தேதிக்குள் புதிய சட்டசபை உருவாகியிருக்க வேண்டும். இப்போது தான் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆனால், கூட்டணிகளுக்கான பேச்சுவார்த்தை, ஒரு மாதத்துக்கு முன்னரே துவங்கிவிட்டது. "அ.தி.மு.க., அணியில் அ.தி.மு.க., இருக்கிறது; தி.மு.க., அணியில் தி.மு.க., இருக்கிறது' என்பதைத் தவிர, வேறு எதுவுமே உறுதியாக இருக்கவில்லை. இந்த ஒரு மாத காலத்துக்குள், "தி.மு.க.,வை கழற்றிவிட்டு அ.தி.மு.க.,வோடு இணையப் போகிறது காங்கிரஸ்; அதுவும் தே.மு.தி.க.,வும் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கப் போகின்றன; தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட உள்ளது; காங்கிரசும் தனித்து தான் போட்டியிட வேண்டும் என, ராகுல் விரும்புகிறார்; அ.தி.மு.க., அணியில் சேரப்போகிறது பா.ம.க.,' என, எந்த சாத்தியக்கூறுகளையும் விட்டு வைக்கவில்லை அரசியல் வல்லுனர்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை; அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் பேச்சும் அப்படித் தான் இருந்தன. நூறு முறை தமிழகம் வந்தும், கூட்டணித் தலைவர் கருணாநிதியை ஒருமுறை கூட ராகுல் சந்திக்கவில்லை. கடைசியாக சென்னை வந்த சோனியாவும், வழக்கத்துக்கு மாறாக, கருணாநிதியை விமான நிலையத்துக்கு வரவைத்து சந்தித்தார். போதாக் குறைக்கு, "தமிழகத்தில் காங்கிரசை முதன்மைக் கட்சியாக மாற்ற வேண்டும்' என, திருச்சி கூட்டத்தில் முழங்கிவிட்டுச் சென்றார். இவையெல்லாம் சேர்ந்து, "தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட திட்டமிடுகிறதோ; மூன்றாவது அணிக்கு முயற்சிக்கிறதோ' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. அதிரடி இளங்கோவனும் தன் பங்குக்கு சரவெடிகளை கொளுத்திப் போட்டார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை; "எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்' என, மேலிடத் தலைவர்கள் அறிவித்து விட்டனர். இளங்கோவன் இருக்கும் இடம் தெரியவில்லை.

இவ்வளவு கூத்துகள் நடந்தபோதும், தி.மு.க., தலைவர் கருணாநிதி அமைதியாக இருந்தார். "எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அசர மாட்டேன்' என சபதமே எடுத்திருந்தார் போல. ராஜா கைது என்ன, ராஜாத்தியின் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு என்ன, கனிமொழியின் கெழுதகை நண்பருக்கு நெருக்கடி என்ன என்று, தமிழகமே அல்லோலப்பட்ட போது, அமைதியே உருவமாக, ஏற்காட்டிலும், மாமல்லபுரத்திலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் முதல்வர். "2004 நம்முடைய முறை; இப்போது அவர்கள் முறை' என தெளிந்திருந்தார் போலும். கடைசி கடைசியாக, எதற்கும் இருக்கட்டும் என்று, தமிழக பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவர் இல.கணேசனின் வீட்டுக்கே சென்று பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார். காங்கிரசுக்கு, "செக்' வைக்கிறாராம்! இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்த போதே அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துச் சொன்னதில்லை என்பது முக்கியம்.

இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார். முதலில், "தி.மு.க., அணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்' என, அறிவுரை வழங்கினார். ஒரு படி மேலே போய், "ராஜா மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டால், தி.மு.க., வசம் உள்ள அதே அளவு எம்.பி.,க்களைத் திரட்டி, மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவேன்' என, பெருந்தன்மை காட்டினார். காங்கிரசை நேரடியாகத் தாக்குவது, மத்திய அரசை விமர்சிப்பது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டார். எல்லாம், காங்கிரஸ் வர வாய்ப்பிருக்கிறது என்ற நிலைமை இருந்தவரை தான். "இல்லை' என்பது உறுதியானதும், மத்திய அரசையும், பிரதமரையும் போட்டு, வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார். "மக்களோடும் தெய்வத்தோடும் தான் கூட்டணி' எனச் சொல்லி வந்தார் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.

கூட்டணி பற்றி அவர் சொன்ன பொன்மொழிகளை எல்லாம் தொகுத்து, ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு பேசினார். பா.ம.க.,வைப் பற்றி சொல்லவே வேண்டாம்... ராமதாசின் கூட்டணி மாற்ற வாஸ்துப்படி, இந்த சட்டசபைத் தேர்தலில் அவர் தி.மு.க., அணியில் தான் இருக்க வேண்டும். அதன்படியே, அவர் அந்த அணியில் ஐக்கியமாகிவிட்டார். ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு வரை, இரண்டு பக்கமும் அவர்கள் நடத்திய பேரம், தலைநகர அரசியல் தெரிந்த அத்தனை பேருக்கும் அத்துப்படி. தி.மு.க.,வை விட கூடுதலாக சீட்டும், நோட்டும் அ.தி.மு.க., கொடுத்திருக்குமானால், தி.மு.க.,வின் சாராய சாம்ராஜ்யத்தை ஒழிக்கக் கிளம்பியிருப்பார். ஒத்துவராததால், தி.மு.க., கூட்டணியை மகத்தான வெற்றி பெற வைக்க முடிவு செய்துவிட்டார். இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரிந்து தான், உலகமே ஸ்பெக்ட்ரம் பிரச்னையை தலைகீழாக உருட்டிக் கொண்டிருந்த போது கூட, அதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தார்.

தமிழ்க்குடி தாங்கி தங்கள் கூட்டணிக்கே வந்ததில், திருமாவளவன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு சந்தோஷம் தான். ஆனால், கட்சியின் கீழ்மட்ட நிலைமை அப்படி இல்லை. அவர்களைக் காட்டிக் காட்டியே வளர்க்கப்பட்ட கட்சி, இன்று அவர்களோடே இணைந்து பணியாற்ற வேண்டுமென்பதால் கஷ்டப்படுகின்றனர். நிச்சயமாக பரஸ்பரம் உள்குத்து வேலைகளை எதிர்பார்க்கலாம். பா.ம.க., தான் என்றில்லை. குட்டிக் கட்சியான கொ.மு.க., கூட ரெண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. "அவர்கள் இவ்வளவு தருகின்றனர்; நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள்?' என, வெளிப்படையாகவே இரு பக்கமும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு, "சீட்' அதிகம் தரும் கட்சி, பரிசுத்த கட்சியாகிவிடுமோ, என்னவோ!

முதலில் இரண்டு, "சீட்'டுக்கு ஒப்புக் கொண்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தற்போது சற்று தாமதமாகத் தலையைச் சொறிகிறார். ஒரு, "சீட்' கூடுதலாகக் கொடுத்தாலும், "ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி தான்' எனச் சொல்லத் தயங்க மாட்டார். அந்தப் பட்டம் வேண்டுமா, வேண்டாமா எனத் தீர்மானிக்க வேண்டியது முதல்வர் தான். சினிமா அடையாளத்தைத் துறந்து, அரசியல் அரிதாரம் பூச விரும்பும் நடிகர்கள் சரத்குமார், கார்த்திக்கின் கட்சிகளும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. கொள்கை என்ன என்பதை விட, குறைவான, "சீட்' வாங்கினால், கவுரவக் குறைச்சலாகிவிடுமே என்று தான் கவலைப்படுகின்றனர். தி.மு.க., கூட்டணியில், "ஹவுஸ் புல்' போர்டு வைத்தாகிவிட்ட நிலையில், அ.தி.மு.க.,வோடு கைகோர்ப்பதா, தனித்தே தற்கொலை செய்வதா என்ற தயக்கத்தில் இருக்கின்றனர் இருவரும். காரணம், இன்றைய தேதியில், அரசியல் நிலைப்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கட்சியோடு ஒப்பீடு முன்னுக்கு வந்துவிட்டது தான். அவர்கள் இவ்வளவு பெற்றுவிட்ட நிலையில், நாம் அவ்வளவு கூட வாங்காவிட்டால், நாளை யாரும் மதிக்க மாட்டார்கள் என கருதுகின்றனர். கட்சிகள் இப்படி, வெளிப்படையாகவே இரு தரப்பிலும் பேரம் பேசும் நிலை வந்ததைப் பற்றி, உளவுத்துறை உயரதிகாரி கூட ரொம்ப நொந்துகொண்டார். இதற்கு காரணம், புற்றீசல் போல முளைத்துவரும் குட்டிக் கட்சிகள் மட்டுமல்ல, "அவற்றை ஆதரிக்காவிட்டால், ஆட்சியைப் பிடிக்க முடியாதோ' என பிரதான கட்சிகள் கருதுவதும் தான். நல்லாட்சி நடத்தியோ, தங்கள் கொள்கையில் நம்பிக்கையோ இருந்தால், கூட்டணிக்கு என்ன அவசியம் வந்தது? இரண்டும் இல்லை எனத் தெரிந்திருப்பதால் தானே, ஆளுக்கு ஒரு பக்கமாய் கட்சிகளை இழுக்கின்றனர்.

என்ன காரணத்துக்கென்றே தெரியாமல், ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிக்கும் மக்களையும் சொல்லியாக வேண்டும். "இந்தக் கட்சியை ஆதரிப்பது; ஐந்து ஆண்டு ஆட்சியில் திருப்தி இல்லையா? தூக்கி எறிந்துவிட்டு அந்த கட்சியை அமர வைப்பது' எனத் தெளிவாக முடிவெடுக்காமல், ஆளுக்கு பத்து ஓட்டு என சிதறடிப்பதால், ஆளாளுக்கு முதல்வர் கனவு காணத் தொடங்கிவிடுகின்றனர். "2011ல் ஆட்சியைப் பிடிப்போம்' என எத்தனை தலைவர்கள் சூளுரைத்தனர் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு எப்படி அந்த ஆசை வந்தது? "நாம் என்ன சொன்னாலும் மக்கள் தலையாட்டுவர்; ஜாதியையோ, முகத்தையோ முன்னிறுத்தினால் போதும்' என்ற நம்பிக்கை தானே! அதை வளர்த்துவிட்டது நாம் தானே. கட்சிகள் என்ன முடிவெடுத்தாலும் சரி; மக்கள் தெளிவான முடிவெடுக்கும் வரை, இத்தகைய அரசியல் குழப்பங்கள் அரங்கேறத் தான் செய்யும். முதுகெலும்பில்லாத கட்சிகளை முதலில் தூக்கி எறிய வேண்டும். அதை விடுத்து, கூட்டணி விட்டு கூட்டணி தாவும் கட்சிகளைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தால், ஜாலியாக இருக்கும். அதற்குள் நம் கஜானா, காலியாகி இருக்கும்!

உரத்த சிந்தனை, ஆர்.ரங்கராஜ் பாண்டே, பத்திரிகையாள

No comments:

Post a Comment