அல்பைடா : லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க, கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார். அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து, அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து, தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார். இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர், அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது, அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர்.சிறை பிடிக்கப்பட்ட அவர்கள், அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்' நாளிதழ், இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மொத்தம் 325 பேர், அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு, லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர், டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார்.பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர். விமானம் சென்ற இடமோ, லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் தேதி, அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.அப்போது ராணுவம், ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து, "நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டது.இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் தேதி ராணுவப் பிரிவு, பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது. அப்போது, கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர், "உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கொல்லப்படுவீர்கள்' என்று பீதியூட்டியது.ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக, கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம், சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து, சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர். பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
source;dinamalar
No comments:
Post a Comment