இந்த ஆண்டு முதல், நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
மருத்துவம், `என்ஜினீயரிங்' போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு பல்வேறு மாநிலங்களில் தனியாக நுழைவு தேர்வு நடைபெற்று வந்தது.
தமிழ்நாட்டில், இந்த நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மற்ற மாநிலங்களிலும், நேரடியாகவோ அல்லது நுழைவு தேர்வு மூலமாகவோ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது வருகிறது. தனியார் மற்றும் சிறுபான்மையோர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளிலும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் `எம்.டி.', `எம்.எஸ்.' போன்ற பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்காக மாநிலங்களிலும், மத்திய அரசு சார்பிலும், தனியார் கல்லூரிகள் சார்பிலும் பல்வேறு நுழைவு தேர்வுகள் நடைபெறுவதால், மாணவர்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்துவது என்ற முடிவை மருத்துவ கவுன்சில் எடுத்து இருந்தது.
இந்த முடிவுக்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. தமிழக அரசு மற்றும் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டு இருந்தன.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் பொது நுழைவு தேர்வுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதே நேரத்தில், இந்த பிரச்சினையில் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கோரிக்கை பற்றியும் விசாரிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
இதற்கிடையில், மத்திய அரசு சார்பில், கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த பிரச்சினையில் கருத்து வேறுபாடுகளை களைவதற்காக, மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மருத்துவ கவுன்சில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் வழக்கை விசாரித்து, இந்த கல்வி ஆண்டில் இருந்தே நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு பொது நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான மேல் நடவடிக்கையை இந்திய மருத்துவகவுன்சிலும் மத்திய அரசும் தொடரலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவு தேர்வு நடத்தினால் `சி.பி.எஸ்.சி.' மற்றும் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிடுவதில் சிரமம் என்பதற்காகவே, நுழைவு தேர்வை தமிழக அரசு ரத்து செய்து இருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே பொது
நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவினால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment