தொண்டர்கள்..!
அரசியல் கட்சிகளின் அஸ்திவாரங்கள் என்றால் அது மிகையாகாது.!
கொடியைப் பிடிக்கத் தொண்டர் இல்லாவிட்டால், எந்தவொரு தலைவரும் கோட்டையைப் பிடிக்க கனவுகூட காண முடியாது..!
தொண்டர்கள் இன்றிக் கட்சியும் கிடையாது; ஆட்சியும் கிடையாது; சொந்த பந்தங்களுக்குப் பதவிகளும் கிடைக்காது.
கடந்த காலங்களில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முழக்கத்துடன் தொண்டர்களை ஓர் அணியாகத் தலைவர்கள் திரட்டினர்.
இதில் பல்வேறு போராட்டங்களில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்தது மறக்கடிக்கப்பட்ட வரலாறு.
அப்போதைய தலைவர்களின் எளிமை, தொண்டர்களை அரவணைக்கும் போக்கு, கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களாகப் புத்திசாலித் தொண்டர்களை அடையாளம் காட்டியவிதம் குறித்து, பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம்.
அத்தகைய தலைவர்கள் மறைந்தபோது, அவர்களது வங்கிக் கணக்கில் சில ஆயிரம்கூட சேமிப்பு இல்லை என்பது ஆச்சரியமளிக்கும் தகவல். ஆனால் இன்று.. அத்தகைய தியாகத் தலைவர்களும் இல்லை..! கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் செயல்படும் தொண்டர்களும் குறைந்துவிட்டனர்...!
ஊழல் புகார்களில் தலைவர்கள் கைது செய்யப்பட்டால், பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கும் குண்டர்கள்தான் கட்சிகள்தோறும் பெருகி நிற்கின்றனர்..!
தொண்டர்களின்றி லெட்டர் பேடுடன் கூட கட்சியை நடத்திவிடலாம்..! ஆனால், குண்டர்கள் இல்லாமல் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது என்பதே இப்போதைய நிலைமை..!
தேர்தல்கள்தோறும் அரங்கேறிவரும் அச்சத்தை விளைவிக்கும் அராஜகங்களே இதற்கு சாட்சி....! (தயவுசெய்து கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் எனக் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் நிலையில்தான் தேர்தல் ஆணையங்களும், நீதிமன்றங்களும் உள்ளன.)
இப்போது சுயநலமும், பதவி வெறியுமே அரசியல் என்றாகிவிட்டதால், தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான இடைவெளி அதிகரித்து விட்டது. இதற்கு, மேலும் பல காரணங்களைக் கூறலாம்.
கட்சிகளின் கொள்கையற்ற நிலைப்பாடு, தொண்டர்களின் மனநிலையை அறியாமல் தேர்தலுக்கு, தேர்தல் அணி மாறும் சந்தர்ப்பவாதம், குடும்ப அரசியல், பதவியைப் பயன்படுத்தி சொத்துகளைக் குவித்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது. தலைவர்களை எளிதில் அணுக முடியாத நிலை.. வட்டார அளவில்கூட கட்சிகளில் செல்வாக்கு பெற்றவர்கள், மற்றவர்களை வளரவிடாத துவேஷ மனப்பான்மை எனக் காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இப்போதெல்லாம் கட்சிகளின் செயல்வீரர் கூட்டங்களுக்கே ஆள்களைத் திரட்ட நிறையச் செலவழிக்க வேண்டியிருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் நெருங்கும்போது மட்டும் நன்கு கவனித்து (?) தொண்டரின் உழைப்பை ஒட்டச் சுரண்டுவது, வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தபின், அவர்களைக் கண்டுகொள்ளாமல்விடுவது என இரட்டைவேடம் போடும் தலைவர்களின் சுயநலப் போக்கை, இன்னும் எவ்வளவு காலம்தான் தொண்டர்கள் சகித்துக் கொண்டிருப்பர்..!
தனது கட்சியின் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த வயதான தொண்டரைச் சந்தித்தபோது, அவரது உள்ளக்குமுறல் அனலாக வெளிப்பட்டது..!
கண்மூடித்தனமாக ஆதரித்த தனது கட்சித் தலைமையின் அப்பட்டமான சுயநல அரசியலைப் பார்த்து வெறுத்துப்போய், அந்தக் கட்சியைவிட்டே விலகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வளவு ஆண்டுகளாக, கட்சிக்காக உழைத்து வீணாகிப் போனதாக வருத்தப்பட்ட அவர், இனி தானும், தனது குடும்பத்தினரும் எந்தக் காலத்திலும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றார்.
பொதுவாக மாநாடுகள், பிறந்தநாள், பாராட்டு விழாக்கள், ஆர்ப்பாட்டங்களின்போது கூட்டம் சேர்க்க மட்டுமே தங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது பெரும்பாலான தொண்டர்களின் குற்றச்சாட்டு.
குறிப்பாக, தமது தொண்டர்களுக்காக, இலவச மருத்துவமுகாம்களை நடத்தக்கூட எந்தக் கட்சியும் முன் வருவதில்லை. தலைவர்களுக்கு நேர்ந்த இழுக்கை, தமக்கே நேர்ந்ததாகக் கருதி வெகுண்டெழுந்து பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவது, உச்சகட்டமாகத் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது போன்ற செயல்களில் இறங்கும் தொண்டர்களை, எந்தவொரு தலைவரும் இதுவரை தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை.
ஏதோ ஒப்புக்கு அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர்..!
ஏதோ ஒரு தலைவரைக் கைது செய்துவிட்டதாகத் தகவல் பரவினால் பஸ் நிலையத்துக்குள் திடீரென நுழையும் ஒரு கும்பல் எதிர்ப்படும் பஸ்களை எல்லாம் அடித்து நொறுக்கினால் எவ்வளவு பதற்றம் ஏற்படும்..!
கண்முன்னே நடக்கும் அராஜகத்தால், உயிர் தப்ப அலறியடித்து ஓடும் பொதுமக்கள் "இவர்களுக்கு ஓட்டு போட்டதற்கும் இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்' என நொந்துகொள்வதைத் தவிர, வேறு வழியில்லை..
பொதுவாகத் தொண்டர்களுக்குக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும் எனக் கூறுவர். ஆனால், அதற்கு இவ்வாறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம்..!
தலைவர் மீது ஊழல் கறை படிந்துவிட்டாலும், கடமையே கண்ணாக அவரை ஆதரிக்க வேண்டும்.
தலைமை எப்படி வேண்டுமானாலும் அநாகரிகமாகப் பேசலாம்; தரம் தாழ்ந்து அறிக்கை விடலாம்; ஆனால், தொண்டர்கள் கண்ணியம் இழத்தலாகாது.
பதவிக்கு ஆசைப்படவே கூடாது. கடைசிவரைக்கும் கட்டுப்பாடுடன் தொண்டராகவே இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி வருவதாகத் தெரிகிறது.
இதை, உணர்ந்து விட்டதாலோ என்னவோ, அரசியல்வாதிகள் புதிய புதிய பார்முலாக்களுடன் நேரடியாகப் பொதுமக்களிடமே பேரத்தைத் தொடங்கிவிட்டனர் போலும்..!
dinamani
No comments:
Post a Comment