நைஜீரியாவின் வடக்கில் சட்டத்திற்கு புறம்பாக தோண்டப்பட்ட சுரங்கங்களில் இருந்து, வெளியான ஈயம் கலந்த விஷ மண் மற்றும் தண்ணீரில் விளையாடிய 400க்கும் அதிகமான குழந்தைகள் இது வரை பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய அவசர நிலை மேலாண்மை ஏஜன்சி இயக்குனர் ஜெனரல் முகம்மது சானி சிதி ஈயம் கலந்த விஷம் மற்றும் இதனுடன் தொடர்புடைய, தங்க சுரங்கம் பற்றிய தேசிய கருத்தரங்கில் பேசினார். அப்போது, "ஈயம் கலந்த விஷத்தால் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 400க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஜம்பாரா மாநில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் உடம்பில் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சில குழந்தைகளின் கை, கால்கள் முடக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது' என்றார்.கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டத்திற்கு புறம்பாக, சுரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஈயம் கலந்த பொருட்களை நுகர்ந்து பார்த்த 163 பேர் பலியாயினர் என்று மூத்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் சுகாதார துறை தலைமை கொள்ளை நோய் ஆராய்ச்சியாளர் ஹென்றி ஆக்பன் கூறுகையில், "சட்டத்திற்கு புறம்பான சுரங்கங்கள் அருகே ஓடி கொண்டிருக்கும், தண்ணீரில் விளையாடும் மற்றும் ஈயம் கலந்த மண்ணில் விளையாடி விட்டு விரல்களை வாயில் வைக்கும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.நாட்டின் வடக்கில் உள்ள, கிராம மக்களின் உடம்பில் அதிகளவில் ஈயம் பாதிப்பு இருப்பதை சுகாதார அதிகாரிகள் பரிசோதனையில் கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment