எகிப்தில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே நடந்த கலவரத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது. ஆனால், எகிப்து உள்துறை அமைச்சகம் இதுவரை எத்தனை பேர் கலவரத்தில் இறந்தார்கள் என்பதுக் குறித்து தெரிவிக்கவில்லை.
எகிப்தில் ஹெல்வான் மாகாணத்தில் ஸோல் நகரில் ஒரு முஸ்லிம் பெண்ணும், கிறிஸ்தவர் ஒருவரும் காதல் வயப்பட்டதில் இப்பிரச்சனை உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸோலில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் கொந்தளிப்பிற்குள்ளான காப்டிக் கிறிஸ்தவர்கள் சர்ச்சை மீண்டும் கட்டக்கோரியும், சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்னால் நிறுத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சனையைத் தொடர்ந்து இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 7 காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 57 பேர் காயமடைந்துள்ளனர். அண்மையில் கிறிஸ்தவ-முஸ்லீம் சமூகங்களிடையே நடைபெறும் இரண்டாவது மோதலாகும் இது. ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரியா நகரில் புதுவருட கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால், இக்குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருந்தபோதிலும், கடந்த ஜனவர் 7-ஆம் தேதி காப்டிக் கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சர்ச்சுகளுக்கு எகிப்தில் பாதுகாப்பு அளித்தனர். மேலும் எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தின் போதும் இரு சமூகமும் இணைந்தே போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
தஹ்ரீர் சதுக்கத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தனித்தனியே வணக்கங்களில் ஈடுபட்டனர்.
எகிப்தில் 10 சதவீத காப்டிக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source:அல்ஜஸீரா
No comments:
Post a Comment