islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

                                       
இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.


புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயில்தான் முதன்மையான வாயிலென்பதால் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும், சேதம் அதிகமிருக்கும் என்று முன்னறிந்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக நிகழும் குண்டு வெடிப்பின் அரசியல் பரிமாணங்களை வினவில் பலமுறை எழுதியிருக்கிறோம். பொதுவில் அரச பயங்கரவாதம் மற்றும் இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர் விளைவுதான் இத்தகைய பயங்கரவாதங்கள். எனினும் இதை யார் வைத்தார் என்று தேசவெறி ஊடகங்கள் சந்தேகமில்லாமல் எழுப்பும் இலக்குகளைத் தாண்டி பல குண்டுவெடிப்புகள் இந்துமதவெறி அமைப்புக்காளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ஜிகாதி பயங்கரவாதம் இல்லை என்பதல்ல.

ஆனால் எந்த குண்டு வெடித்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் உடனடியாக கைகாட்டப்படுபவை இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள்தான்.
தற்போதைய குண்டு வெடிப்பிற்கு கூட அர்கத் அல் ஜிகாத் இசுலாமி எனும் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட கையோடு அவர்கள்தான் சந்தேகத்திற்கிடமற்ற குற்றவாளிகள் என்பதாக குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் டைம்ஸ் நௌ அம்பி ஆர்னாப் கோஸ்வாமி சாமியாடவே ஆரம்பித்து விட்டார்.குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா, இல்லை வேறு யாரும் வைத்தார்களா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? ஒரு மின்னஞ்சல் மட்டுமே போதுமானது என்றால் இந்த நாட்டில் பலரும் ‘தேச விரோத’ கருத்தை பேசியதற்காக உள்ளே போக வேண்டும். ஒரு பாரிய குண்டு வெடிப்பின் பின்னே யார் வைத்தார்கள் என்பதை மட்டும் சுலபமாக சொல்ல முடியுமா? அல்லது அப்படி சொல்ல வேண்டுமா? இது யாருக்கு ஆதாயம்?
இந்த குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை என்றும், அந்த மின்னஞ்சலை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும் தேசிய புலனாய்வுத்துறை நிறுவன தலைமை அதிகாரி கூறிய பிறகும் ஊடக அம்பிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி வில்லன். அந்த வில்லன் இசுலாமிய அமைப்பென்றால் அவர்களுக்கு கல்லா கட்டுவது சுலபம்.

 குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்று இருக்கிறதாம். இது தெரியமலேயே இந்த குண்டு வெடிப்பு செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே பலரும் மூவர் தூக்கு நிறுத்தி வைத்ததற்காக கடும் கண்டனங்களை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ராஜிவ் கொலைக்கான குண்டு வெடிப்பை நடத்தியவர்களையெல்லாம் தூக்கில் போடக்கூடாது என்பதுதான் இத்தகைய தீவிரவாதிகளுக்கு குளிர் விடக் காரணமென்று அவர்கள் ஆங்கில, தமிழ் ஊடகங்களில் ஆவேசம் பொங்க கத்துகிறார்கள்.
அப்சல் குருவுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. அவரை இந்த வழக்கில் சிக்க வைத்தது இராணுவ, துணை இராணுவ படைகள்தான். அவரது வழக்கில் கூட உச்சநீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும், தேசத்தின் மனசாட்சியை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனை விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்த மனசாட்சியைத்தான் இப்போது ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை அள்ளி வழங்குகிறார்கள்.

அதில் அம்பி அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நௌ முன்னிலை வகிக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்த அந்த தொலைக்காட்சிக்கு அடுத்த சென்சேஷனாக இந்த குண்டுவெடிப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் அச்சு பிசகாமல் நடுத்த வர்க்கத்தின் மேலோட்டமான இந்துத்வ மற்றும் பாசிச அரசியல் பார்வையை திருப்திபடுத்தும் வகையில் பேசுகிறார்கள். இதுதான் சமூகத்தை பாசிசமாக்கும் நடவடிக்கை என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்?
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் வேலை செய்ய வில்லை என்பதை உலகமகா கண்டுபிடிப்பாக எடுத்துக் காட்டும் டைம்ஸ் நௌ குத்தாட்டம் போடுகிறது. 120 கோடி மக்களை காப்பாற்ற ஒரு சில வேலை செய்கின்ற மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் மட்டும் போதுமா? ஆனால் அவர்களது நோக்கம் மக்களை காப்பது அல்ல. ஆளும் வர்க்கத்தின் கேந்திரமான இடங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் உயிரைத் துச்சமென மதிக்கும் ஒருவன் இந்த கண்காணிப்புகளுக்கு ஏன் பயப்படப் போகிறான்?

குண்டு வெடித்து மக்களிடமிருந்து சிந்தும் இரத்தம் கூட நிற்கவில்லை. அதற்குள் குண்டில் என்ன ரசாயனம் இருந்தது, யார் வைத்தார்கள், என்று ஊடகங்களின் மொக்கை நிருபர்கள் கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள். இது அமெரிக்காவாகவே இருந்தாலும் சோதனைச்சாலையில் ஆய்வு செய்த பிறகுதானே என்ன வகை குண்டு என்பதை சொல்ல முடியும்? அவர்களது நோக்கம் உடனடி நீதி வேண்டுமென்பதால் ஆதாரங்களை அவர்களே ஜோடிக்க முயல்கிறார்கள்.

வங்கதேசத்திற்கு சென்றிருக்கும் பிரதமர் நாட்டு மக்கள் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களுக்கு பலியாகக்கூடாது என்கிறார். அப்படி பலியாகக்கூடாது என்றால் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருக்கும் செயல்கள், சக்திகளை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். அதை விடுத்து இந்த ஃபார்முலா அட்வைசு சாதிப்பதென்ன?

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்த உரிமையை வைத்துக் கொண்டுதான் இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கிலும், இந்துமதவெறியர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தி மாநிலங்களிலும் மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த நிறுவன பயங்கவரவாதத்தை வேரறுக்காமல் நாம் குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியாது.

இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

ஊழல் வழக்குளில் பிரதமர் உள்ளிட்ட பெரும் தலைகளெல்லாம் சிக்கியுள்ள நிலையில் முதல் ஆசுவாசமாக அண்ணா ஹசாரே இருந்தார், இரண்டாவதாக இந்த குண்டு வெடிப்பு! 11 பேர் உயிரிழந்ததை விட இதுதான் பெரிய இழப்பு!!
 vinavu

No comments:

Post a Comment