islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எம்.பி.பி.எஸ்.: பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டா?



தமிழகத்தில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர வரும் திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.

பழைய மாணவர்களின் கனவு: எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்று பல மாணவர்களுக்கு ஆசை உள்ளது. தமிழகத்தில் 2006-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, பி.இ.-எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2005-ம் ஆண்டு வரை நுழைவுத் தேர்வு இருந்ததால், நுழைவுத் தேர்வு மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற முடியாமல் பல மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் இருந்தது.

2006-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில் முக்கியப் பாடங்களான உயிரியல்-இயற்பியல்-வேதியியலில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். அல்லாத வேறு படிப்புகளைப் படித்து வரும் பழைய மாணவர்கள் விண்ணப்பித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பி.இ. படிப்பில் சேர்ந்த மாணவர்கள்கூட, ஓர் ஆண்டு வீணாவதை பற்றிக் கவலைப்படாமல் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.

விண்ணப்ப எண்ணிக்கை அதிகரிப்பு: இவ்வாறு பழைய பிளஸ் 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2009-10 கல்வி ஆண்டில் 533 மாணவர்கள் விண்ணப்பித்தனர்; கடந்த கல்வி ஆண்டில் 2010-11 எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த பழைய பிளஸ் 2 மாணவர்களின் எண்ணிக்கை 1,627. எனினும் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்த பிளஸ் 2 மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், பழைய மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.

கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காண்பிப்பதால், இந்த ஆண்டு மொத்தம் 25,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்விக் குழுச் செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில்..: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர ஒரே விண்ணப்பம்தான் விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் வரும் மே 16-ம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பத்தை வரும் ஜூன் 2-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பெறலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.

முதல் கட்ட கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி தொடங்கும். முதல் நாளான ஜூன் 30-ம் தேதியன்று சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

மே 16 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்டவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பம் - மே 16

விண்ணப்பத்தை அளிக்க கடைசி நாள் ஜூன் 2

தர வரிசைப் பட்டியல் ஜூன் 21

முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் நாள் ஜூன் 30

முதல் கட்ட கலந்தாய்வு முடியும் நாள் ஜூலை 7

No comments:

Post a Comment