islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மலைக்காட்டின் அதிசயப் பறவை!


நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகப் பயணம் செய்யும் போது பார்க்கக்கூடிய அரிய பறவைகள் இருவாச்சிப்பறவைகள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. ஆங்கிலத்தில் ஹார்ன்பில் என்று அழைக்கப்படுகிறது. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே காஸ்க் எனப்படும் கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும்.

உலகம் முழுவதும் 54 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை ஹார்ன் பில் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை ஹார்ன்பில்கள் காணப்படுகின்றன. கேரள மாநிலத்தில் ஹார்ன்பில்களை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. நம்மில் பல பேர் இந்தப் பறவையைப் பார்த்திருக்க மாட்டோம். காரணம் இது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இப்பறவை மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் முழுவதும் பரவி இருந்தன.

தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை ஹார்ன் பில் பறவைகள் (இருவாச்சிப்பறவைகள்) 1. கிரேட் பைடு ஹார்ன் பில், 2. மலபார் ஹார்ன் பில், 3.கிரே ஹார்ன் பில், 4. மலபார் கிரே ஹார்ன் பில். இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.

1.கிரேட் பைடு ஹார்ன் பில்: அலகு மற்றும் அலகுக்கு மேலே உள்ள காஸ்க் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கருப்பு இறக்கையில் வெள்ளைக் கோடுகள் இருக்கும் சிறிய பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்ற மூன்று வகைகளைக் காட்டிலும் இந்த வகை சற்று பெரிதாக இருக்கும்.

2.மலபார் பைடு ஹார்ன் பில்: இது பார்ப்பதற்குக் கிரேட் பைடு ஹார்ன் பில் போல இருந்தாலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும். அலகில் வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் இருக்கும். காஸ்க் பகுதியில் கருப்பு நிறம் காணப்படும். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடலைப் பெற்றிருக்கும்.

3.இண்டியன் கிரே ஹார்ன் பில்: மேலே குறிப்பிட்ட இரண்டைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். சாம்பல் வண்ணத்தில் காணப்படும்.

4.மலபார் கிரே ஹார்ன் பில்: இவற்றுக்குக் காஸ்க் பகுதி இருக்காது. சாம்பல் நிறத்தில் காணப்படும்.

இவை தவிர, மேலும் 5 வகைகள் இந்தியாவில் உள்ளன. அவை 1. நார்கொண்டான் ஹார்ன் பில், (அந்தமான் தீவுகளில் காணப்படுவன) 2. வ்ரீத்டு ஹார்ன் பில், 3.ரூஃவெஸ்ட் நெக்டு ஹார்ன் பில், 4. பிரவுன் ஹார்ன் பில் (வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவன) 5. இண்டியன் பைடு ஹார்ன் பில் - நேபாளம் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.

ஹார்ன் பில் பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பார்கள்.

சமீப காலத்தில் இப்பறவைகளை மேற்குதொடர்ச்சி மலைகளில் டாப்சிலிப், பரம்பிக்குளத்தில் காண முடிகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். மலபார் பைடு ஹார்ன் பில் என்பது தமிழகத்தில் அரிதாகவே காணப்படுகிறது. இவை கோவை வனக்கோட்டத்தில் முள்ளி வனப்பகுதியில் மட்டும் கணிசமான அளவில் காணப்படுகின்றன. இதில் மலபார் கிரே ஹார்ன் பில் என்பது மேற்குதொடர்ச்சி மலைகளைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த ஹார்ன் பில் பறவைகள் ஃபைக்கஸ் என்கிற ஆல் மற்றும் அத்தி வகை பழங்களையே பெரிதும் விரும்பி உண்கின்றன. இம்மரத்தின் விதை பரவலுக்கு ஹார்ன் பில் பறவையே ஆதாரமாகிறது ஆகிறது. இம்மரம் பல ஜீவராசிகளை வாழவைக்கும் ஒரு ஆதார உயிரினம் என்பது கூடுதல் தகவல்.

வடகிழக்கு இந்தியாவில் சில பழங்குடியினர் இப்பறவைகளை இறகுகாக வேட்டையாடி வந்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் தற்போது இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
dinamanikondattam

No comments:

Post a Comment