வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள துணை நிலை ராணுவ பயிற்சி மையத்தில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 69 பேர் இறந்தனர் என பொலிசார் தெரிவித்தனர்.
முதல் குண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை நபரால் வெடிக்கப்பட்டது. இரண்டாவது குண்டு வெடிப்பு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் ஏற்பட்டது என தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாத துவக்கத்தில் அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளோம் என பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
பயிற்சி முடித்து வாகனத்தில் புதிய வீரர்கள் அமர்ந்து இருந்த போது குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. குண்டு வெடிப்பில் இறந்த 65 பேர் துணை ராணுவ நிலையத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மிகச்சிறிய அளவில் பொது மக்களும் இறந்துள்ளனர் என அதிகாரிகள் கூறினர்.
குண்டு வெடிப்பில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த வீரர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடிப்பு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பெஷாவரின் வடமேற்கில் 35 கி.மீ தொலைவில் உள்ள சாபகதர் பகுதியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த இடம் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது. குண்டு வெடிப்பில் வாகனங்களும் சேதம் அடைந்தன.
No comments:
Post a Comment