islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத் முஸ்லிம்களை புறக்கணிக்கும் மோடி!




குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாக திறனால் அம்மாநிலம் அபார வளர்ச்சியை எட்டிபிடித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து கொண்டிருக்கையில், சத்தமில்லாமல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அம்மாநிலத்தின் ஒரு அங்கமான இஸ்லாமிய மக்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரம் வெகுவாக பின்தங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தன.

மேலும் அவரது அரசியல் வாழ்வில்,குஜராத் கலவரம் ஒரு கரும் புள்ளியாகவே அமைந்தது.

இந்நிலையில் குஜராத் கலவர சர்ச்சை ஓய்ந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி,தம் மீதான கலவர கொலை களங்கத்திற்கு ஈடுகட்டும் விதமாக நிர்வாகத்தில் வெகுவாக கவனம் செலுத்தினார்.

சாதுரியமாக பேசியும்,செயல்பட்டும் குஜராத்திற்குள் முதலீட்டாளர்களையும்,தொழிலதிபர்களையும் கொண்டு வந்ததால் இன்று அம்மாநிலம் பொருளாதாரத்தில் மட்டுமின்றி பல துறைகளிலும் அபார வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

ஆனால் இந்த அபார வளர்ச்சியால், அம்மாநில மக்கள் தொகையில் கணிசமாக உள்ள வறுமையில் வாடும் நலிந்த பிரிவு மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இவர்களுக்கும்,இதர பெரும்பான்மை இந்துக்களுக்கும் இடையே வருவாய் விடயத்தில் மிகப்பெரிய அளவிலான இடைவெளியும், ஏற்ற இறக்கமும் - அதாவது வருவாய் சமத்துவின்மை- காணப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட ஆய்வில் தெரியவந்துள்ளது.

'குஜராத்தின் வளர்ச்சியும், சமூக-மத வேறுபாடுகளும்' என்ற தலைப்பில் பிரபல பொருளாதார வல்லுனர் அபுலேஷ் ஷரீப், இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை விளக்கும் சச்சார் கமிட்டி அறிக்கை, தேசிய பொருளாதார ஆய்வு செயல்முறை குழு (National Council for Applied Economic Research -NCAER) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையம் (National Sample Survey Organisation -NSSO) போன்றவற்றின் அறிக்கைகளின் துணை கொண்டு இந்த ஆய்வை நடத்திய அவர், குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை பட்டியலிட்டுள்ளார்.
ஒரிஸ்ஸா மற்றும் பீகாரை ஒட்டியுள்ள ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பட்டினி அளவு அதிகமாக காணப்படுவதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்திலும் பட்டினி அளவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கும் அபுலேஷ், இது அச்சமூட்டுவதாகவும், வியப்பூட்டுவதாகவும் உள்ளது என்கிறார்.

மேலும் குஜராத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களிடையே காணப்படும் வறுமை அளவு, உயர் சாதி இந்துக்களைவிட எட்டு மடங்கு அதிகமாகவும்,இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட 50 விழுக்காடு அதிகமாகவும் காணப்படுகிறது.

மேலும் கல்வி ரீதியாகவும் இஸ்லாமியர்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர்.ஆரம்ப பள்ளிக்கூடங்களில் முஸ்லிம்கள் குழந்தைகள் 75 விழுக்காடு அளவிற்கு சேர்ந்தாலும், அவர்களில் வெறும் 26 விழுக்காட்டு குழந்தைகளே பத்தாம் வகுப்பை எட்டி பிடிக்கின்றனராம்.

அதே சமயம் எஸ்.சி./எஸ்.டி. யினரை தவிர்த்த இதர பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளில் 79 விழுக்காட்டினர் ஆரம்ப பள்ளிகளில் சேர்வதாகவும்,அவர்களில் 41 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பை எட்டி பிடிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கல்விக்கு அடுத்தபடியாக குஜராத் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை திருட்டு மற்றும் கொள்ளை.வீட்டிற்கு தேவையான பொருட்களில் வெறும் 11 விழுக்காடு மட்டுமே அவர்களிடம் உள்ளபோதிலும், அதிலும் 2 விழுக்காடு முஸ்லிம்கள் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை எதிர்கொள்வதாகவும், இதுவே தேசிய அளவில் 11 விழுக்காடாக உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் நகர்ப்புறங்களில் மொத்த மக்கள் தொகையில் 11 விழுக்காட்டினராக மட்டுமே இஸ்லாமியர்கள் உள்ளபோதிலும்,முஸ்லிம் இளம்பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலும் மிக அதிகமாக, அதாவது 17 விழுக்காடாக உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

அடுத்தப்படியாக வேலைவாய்ப்பு பெறுவதிலும் குஜராத் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றனர்.பாரம்பரியமாகவே குஜராத் முஸ்லிம்கள் மெக்கானிக்கல் வேலை, எலெக்ட்ரிக்கல் வேலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தும் வேலைகளையும், வரைவது போன்ற வேலைகளையுமே அதிகமாக செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தின் வைர மற்றும் கைத்தறி ஜவுளி தொழிலில் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் முன்னர் அதிகமாக ஈடுபட்டிருந்தபோதிலும், தற்போது தயாரிப்பு மற்றும் அமைப்பு ரீதியான துறைகளில் அதிக அளவில் தொழிலாளர்களாக காணப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குஜராத்தில் செய்யப்படும் அன்னிய நேரடி முதலீடு பெரும்பாலும் அமைப்பு ரீதியான துறைகளுக்கே திருப்பிவிடப்படுகின்றன.சுய வேலைவாய்ப்பு மூலம் தங்களது வாழ்க்கையை ஓட்டும் பிரிவினரில் அதிகமாக உள்ள இஸ்லாமியர்கள் சார்ந்திருக்கும் அமைப்பு சாரா துறைகளுக்கு பெரிய அளவில் அது செல்வதில்லை என்பதால் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை.மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், சுயவேலை வாய்ப்பு துறையில் வருவாய் மிக குறைந்த அளவே அதிகரித்துள்ளது.

ஏராளமான வரிச்சலுகைகள், மலிவான விலையில் உரிமங்கள் மற்றும் மிகக்குறைந்த விலையில் நிலம் என பலவிதமான ஆசைகள் காட்டப்படுவதால் அன்னிய நேரடி முதலீடு குவியும் இடமாகவும், என்ஆர்ஐ எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் கார்ப்பரேட் அரசியலுக்கான தோதான இடமாகவும் குஜராத் திகழ்கிறது.

மொத்தத்தில் குஜராத் முஸ்லிம்கள் மிக அதிக அளவிலான பாகுபாடு மற்றும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையையும் சந்தித்து வருவதாக கூறுகிறார் அபுலேஷ்.

வளர்ச்சி என்பது எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.அதனை கருத்தில் கொள்ளாமல் சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் வருவாயிலும், செல்வ செழிப்பிலும் கொழிக்க, இதர பிரிவு மக்கள் மிகப்பெரிய வருவாய் ஏற்ற தாழ்விலும், வறுமையிலும் உழன்றால் அது ஒட்டு மொத்த இந்தியாவானாலும் சரி அல்லது குஜராத் போன்ற மாநிலமானாலும் சரி; ஆபத்தாகவே முடியும்.

மோடி இதை உணர்ந்து செயல்பட்டாலொழிய அவர் மீது குஜராத் கலவரத்தினால் ஏற்பட்ட கரும்புள்ளி போன்று மற்றொரு கரும்புள்ளி ஏற்படாமல் இருக்கும்!
source;webdunia

No comments:

Post a Comment