islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தினம் ஒரு தகவல் ( மருத்துவ இளவரசன்)



மருத்துவ இளவரசன்


மருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும்.


மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு.அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன.

கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது.

அலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிபா'வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன. பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

அலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித் திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் காலமானார்.

No comments:

Post a Comment