islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இமாம் அபு ஹனிபா



இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.
தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.
ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். "உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி" எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.
அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி "முஅத்தா முஹம்மது" என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் "இமாமுல் அஃலம்" எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.
ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.


நூல்கள் ஹிஜ்ரி நூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
9.ஜாமிஉல்ருமூஸ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
13.சல்பீ 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
14.பஹ்ரு ராயின் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
15.தன்வீர் அப்ஸார் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
16.தகீரா 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
17.துர்ருல் முக்தார் 11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
18.ஃபதாவா ஆலம்கீரி 12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்


இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள "ஃபதாவா ஆலம்கீரி" மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் "ஃபத்வா" (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.
இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய "முஅத்தா மாலிகி" நூலுக்கு விளக்கம் தந்து "அவ்ஜஜுல் மஸாலிக்" என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் "முஹன்னஃபுல் மாலிகி" மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.
அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment