islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இலவங்கப் பட்டை - சில தகவல்கள்


இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை. சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்ற பட்டை மரம், வெப்ப மண்டல பசுமை மாறா மரமாகும்.

இது 10 -15 மீட்டர் உயரம்வரை வளரும். இது லாரேசியா என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. சின்னமோமம் வேறம்(Cinnamomum verum) மற்றும் சின்னமோமம் சைலானிகம் (cinnamomum zeylanicum) என்ற முக்கியமான இரு வகைகளும் இலங்கை, இந்தியா, ஜாவா, சுமத்திரா, போர்னியோ, மடகாஸ்கர், வியட்நாம், பிரேசில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 250 வகை இலவங்க மரங்கள் காணப்படுகின்றன. இதில் மிக உயர்ந்த தரம் இலங்கையின் இலவங்கமே..! சீன பட்டை கொஞ்சம் தரம் தாழ்ந்தது, தடிமனானது. இலவங்கப் பட்டை மரம் ரொம்ப சுகவாசி. இதற்கு ரொம்ப வெப்பமோ அதிக குளிரோ ஆகவே ஆகாது. மிதமான வெப்பம், ஈரப் பதமான சீதோஷ்ணநிலை பட்டை மரம் வளமாக வளர அவசியம் தேவை.

பட்டை மரம்அறுவடை செய்யப்படாத நிலையில் இலவங்கமரத்தின் அடிமரம் 30 -60 செ.மீ அகலத்தில் இருக்கும்; மேல் பட்டை கனமாக சாம்பல் படர்ந்த நிறத்தில் இருக்கும்; கிளைகள் தாழவே தொங்கும். இலைகள் எதிரெதிரே காணப்படும். இலையின் துளிர் சிவந்த வண்ணத்தில் துளிர்க்கும். இலவங்கத்தின் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால் அற்புத மணத்தைக் கொண்டிருக்கும். பழம் கருப்பாக, 1.5 -2 செ.மீ நீளத்தில், நீள்வட்டமாக அமைந்திருக்கும். இலவங்கப் பட்டை இலவங்க மரத்தின் உள்பகுதி பட்டையிலிருந்தே பெறப்படுகிறது. நன்கு முதிர்ந்த மரத்தின் பட்டையை உரித்து வெயிலில் உலர வைப்பார்கள். பட்டை மெலிதாக சூரிய வெப்பத்தில் காயும்போதே சுருள் சுருளாக மெல்லிய குழல் போல சுருண்டுவிடும். இதனை 5 -10 செ.மீ நீளமுள்ள சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிவிடுவார்கள். இதுவே இலவங்கப் பட்டை/குச்சி எனப்படும். இதுவே விற்பனைக்கு வரும் லவங்கப் பட்டை..!

பட்டையை மென்பானங்களிலும், மருந்துப் பொருளிலும், அழகு சாதனப் பொருள்களிலும், ஏன் கழிப்பறைப் பொருள்களிலும் இதன் வாசனைக்காவே கலக்கின்றனர். உணவுப் பொருளில், மசாலாவின் நாயகன் இலவங்கப் பட்டைதான். குஜராத் மற்றும் வட மாநிலங்களில் காதி (Khadi) எனப்படும் தயிர் பானத்தில் பட்டையைக் கலப்பது மிகவும் பிரசித்தம். இலவங்கத்தை தேநீரிலும் கலப்பது உண்டு.

பட்டை உணவுப் பொருள்களை, பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் (Phenol) என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை, உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கின்றது. பட்டை பரவலாக, நறுமணத்திற்காக சின்ன துண்டுகளாக/ பொடியாகவே கலக்கப்படுகிறது. இனிப்பின் சுவையை அதிகரித்துக் காண்பிக்க, இலவங்கப்பட்டை, இனிப்பில் கலக்கப்படுகிறது. மதுவிலும், மருந்திலும், சோப் மற்றும் பல்லுக்குத் தயாரிக்கும் பசை மற்றும் மருந்து, தைலம் போன்றவற்றிலும் இலவங்கம் கலக்கப்படுகிறது. இது மிட்டாய், சூயிங்கம் மற்றும் உடலுக்குத் தெளிக்கும் வாசனை திரவியங்களிலும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கேக், ரொட்டி, பிஸ்கட், சாக்லேட் போன்ற பொருள்களிலும் பட்டை மணம் மற்றும் சுவைக்காக கலக்கப்படுகிறது.

இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.



இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.

லவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.

ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும்.

அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.

பட்டையை நுகர்ந்து பார்ப்பதனால், மூளையின் ஆராய்ந்து அறியும் மனப்பாங்கையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது என ஓர் ஆய்வு சொல்கிறது. தொடர்ந்து பட்டை சாப்பிட்டால் அதுவே நல்ல குடும்ப கட்டுப்பாட்டு மருந்தாகும். இது இயற்கையான பிறப்புக் கட்டுப்பாட்டு பொருள். குழந்தை பிறந்து ஒரு மாதம ஆனபின்பு, தினம் இரவு ஒரு துண்டு பட்டை சாப்பிட்டால், அது அடுத்த குழந்தையின் பிறப்பை 15 -20 மாதம் தள்ளிப் போடுமாம்.

இது உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.. முக்கியமாக தாய்மையுற்ற பெண்களின் எடையை..!

பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம்.

பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம்.

சிறு நீர் உபாதை, சிறு நீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.

பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.

பட்டை பொடி+ தேன்+ சூடான ஆலிவ் எண்ணெய் கலந்து வழுக்கை விழுந்த தலையில் தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் முடி முளைக்கும் என சொல்லப்படுகிறது. (காரியம் நடக்காவிட்டால், என் மேல் கல் வீசாதீர்கள்).

கிட்டத்தட்ட ஆயுர்வேதம், சித்தா மற்றும் அலோபதி கூட லவங்கப்பட்டை பல நோய்களின் நிவாரணி என்று சொல்கின்றன.

100 கிராம் பட்டையில் உள்ள சத்துப்பொருள்கள்

முக்கியப் பொருள்கள் +-சத்து மதிப்பு-+தினத் தேவையின்%

ஆற்றல் 247 Kcal 12%

மாவுப் பொருள் 50.59 g 39%

புரதம் 3.99 g 7%

மொத்த கொழுப்பு 1.24 g 4.5%

கொலஸ்டிரால் 0 mg 0%

நார் சத்து 53.1 g 133%

வைட்டமின்கள்: போலேட் 6 mcg 1.5%

நியாசின் 1.332 mg 8%

பான்டோதனிக் அமிலம் 0.358 mg 7%

பைரிடாக்சின் 0.158 mg 12%

ரிபோபிளேவின் 0.041 mg 3%

தையாமின் 0.022 mg 2%

வைட்டமின் A 295 IU 10%

வைட்டமின் C 3.8 mg 6%

வைட்டமின் E 10.44 mcg 70%

வைட்டமின் K 31.2 mcg 26%

Electrolytesசோடியம் 10 mg <1%

பொட்டாசியம் 431 mg 9%

தாது உப்புக்கள் கால்சியம் 1002 mg 100%

தாமிரம் 0.339 mg 38%

இரும்பு 8.32 mg 104%

மக்னீசியம் 60 mg 15%

மாங்கனீஸ் 17.466 mg 759%

பாஸ்பரஸ் 64 mg 9%

துத்தநாகம் 1.83 mg 17%

பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment