islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒசாமா பின்லாடன்:இன்னும் முடியாத ஒரு பயங்கரவாத கனவு



பயங்கரவாத அல் காயிதா இயக்கத்தினரின் மானசீக குருவான ஒசாமா பின்லாடனுக்காக கொஞ்சம் அனுதாபம் காட்டினால் தவறில்லை என்ற நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது அமெரிக்கா. அரச பயங்கரவாதமும் அரசு சார்பு பயங்கரவாதமும் மட்டும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இன்றைய உலக அரசியலில் அல் காயிதா போன்ற அமெரிக்க எதிர்ப்பு பயங்கரவாத அமைப்பு உலகளாவிய பரவலுடன் உயிருடன் இருப்பது சாத்தியமற்றது.


ஏற்கனவே அதன் பெருவாரியான உலகத் தொடர்புகளைத் துண்டித்துவிட்ட சி.ஐ.ஏ., அந்த இயக்கத்தினருக்கு உத்வேகம் கொடுத்து வந்த நிழலை இப்போது அழித்திருக்கிறது. அல் காயிதா அமைப்பு தீவுகளாகத் துண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் அவர்களையெல்லாம் மானசீக குருவாகப் பிணைத்தவர் பின்லாடன். அந்த வசீகரமிக்க நபரின் தலைமை இல்லாத நிலையில் அல் காயிதா ஒரு பிராந்திய சக்தியாக மாறியிருக்கிறது. ஆனால் நிராயுதபாணியாக இருந்த ஒரு நபரை நீதியின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முயற்சிக்காமல் ஒரு சட்டவிரோதக் கொலையை நிகழ்த்தி, தாங்களும் ஒசாமாவுக்கு நிகரான பயங்கரவாதிகள் என நிரூபித்திருக்கின்றன அமெரிக்கப் படைகள். பின்லாடனின் உடலைக் கடலில் தூக்கிப் போட்டதன் மூலமாக பயங்கரவாத இயக்கங்களின் வேர்கள் மீண்டும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதி, போராளி, தியாகி முதலிய வாசகங்களுக்கு அகராதியில் அர்த்தம் கொடுப்பதில் அர்த்தமில்லை. அதன் புரிதல் மனித மனங்களில் உள்ளது. காலத்திடம் உள்ளது. எனினும் மரணத்தில் ஒசாமா, ஒசாமாவைப் போலவே இல்லை. போர்க் கள சீருடையில் உலகையே நடுங்க வைக்கும்படி வீடியோ காட்சிகளில் மிரட்டல்கள் விடுத்தவர் அல்ல சுட்டுக் கொல்லப்பட்ட பின்லாடன். ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில், வெளியுலகத் தொடர்பே பெரிதும் இல்லாமல் மனைவி குழந்தைகளுடன் பல வருடங்களாக வாழ்ந்து வந்த ஓய்வு பெற்ற, பகுதி நேர பயங்கரவாதியை அமெரிக்கர்கள் கொன்றிருக்கிறார்கள். ஒரு மனிதக் கூரியர் மூலம் மட்டுமே வெளியுலகுடன் தகவல் பரி மாற்றம் செய்துகொண்ட ஒருவர் அல் காயிதாவின் பல தாக்குதல்களுக்கு சிறிய வழிகாட்டுதல்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர் என்று சொல்ல முடியாத அளவுக்கு பின்லாடன் அல் காயிதாவிலிருந்தே ஓரங்கட்டப்பட்டிருந்திருக்கிறார்.

பல விஷயங்கள் இப்போது தெளிவடைகின்றன. எல்லோரும் நினைப்பது போல பின்லாடன் ஒன்றும் அல் காயிதாவின் உச்சபட்சத் தலைவர் அல்ல. பல்வேறு வாகாபி மத நம்பிக்கை கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்ததில் அவருக்குப் பங்கு உண்டு. ஆனால் குறுகிய காலத்திலேயே அது சிதறியது. அல் காயிதாவினுள்ளேயே அவரைப் பிடிக்காத சக்திகள் உருவாகின. தீர்த்துக் கட்ட நினைத்த சக்திகள்கூட உண்டு. உலகின் பல் வேறு பகுதிகளில் இயங்கும் அல் காயிதா கிளைகள் அனைத்தும் அவரின் உத்தரவுக்குக் கீழ்படிந்து நடந்தன என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அமெரிக்காவின் ட்வின்டவர் தகர்ப்பு உள்ளிட்ட அல்காயிதாவின் தாக்குதல்கள் அனைத்தும் அவரின் உத்தரவால் நிகழ்த்தப்பட்டன என்ற வாதம் எளிதில் நிரூபிக்க முடியாத ஒன்று. பெரும்பாலான அல் காயிதா இயக்கத்தினர் ஒசாமாவின் பெயரால் இயங்கினார்கள். ஒசாமாவின் கட்டளைப்படி இயங்கினார்கள் என்று சொல்ல முடியாது. உலகளாவிய வாகாபி இஸ்லாத்திற்கு தனது முகத்தை இரவல் கொடுத்தவர் அவர். அதன் கரங்களும் கால்களும் வெவ்வேறு மூளைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க அயல்நாட்டு ரகசிய செயல்பாடுகளை நிகழ்த்தும் சி.ஐ.ஏ., நம்பும்படியான பொய்களைக் கட்ட விழ்த்துவிடுவதற்குப் பேர் போனது. அல் காயிதாவின்மீது சுமத்தப்பட்டுள்ள பல பயங்கரவாத தாக்குதல்களுக்கான சதித் திட்டங்களில் அந்த அமைப்பிற்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது. பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு சி.ஐ.ஏ.வின் உளவாளிகளே வியூகம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்காகப் பிற நாடுகள் தங்களைத் தாக்கியது போன்ற சம்பவங்களை இவர்களே நிகழ்த்தி வருகிறார்கள் என்று அமெரிக்காவிலேயே ஒரு பிரிவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள் (இதை False Flag Operation என அழைக்கிறார்கள்). இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புகிறவர்களை சந்தேகப் பேர்வழிகள் என அமெரிக்க நிர்வாகிகள் ஒதுக்கித் தள்ளினாலும் அமெரிக்கா விளக்காத மர்மங்கள் ஏராளம் உள்ளன.

1990ல் யூத மத குருவான மீர் கஹானேவின் கொலையில் தொடங்கி, அமெரிக்க மண்ணில் வரிசையாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட அதில் அத்தனையிலும் அலி முகமது என்ற சி.ஐ.ஏ. உளவாளிக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. சி.ஐ.ஏ., அல் காயிதா இரண்டுக்குமே உளவாளியாக இருந்தவர் அலி முகமது. 1993ல் உலக வர்த்தக மையத்தின் (ட்வின் டவர்) மீது நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு, 1998ல் நைரோபியிலும் தர் இஸ்லாமிலும் அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்திலும் அலி முகமதுக்குத் தொடர்பு இருப்பது சி.ஐ.ஏ.க்கும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ.க்கும் தெரிந்தே இருந்திருக்கிறது. எகிப்திலிருந்து அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் அலி முகமது. அமெரிக்க சிறப்புப் படை தாக்குதல் முறைகளை அல் காயிதாவுக்குக் கற்றுக் கொடுத்து, அது தொடர்பான ராணுவ ஆவணங்களைக் கொடுத்து அந்த கெரில்லா படை, பாரம்பரிய போர் முறைகளிலும் தேர்ச்சி பெற உதவியவர், ஒசாமாவுக்கான அந்தரங்க பாதுகாவலர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர், 2001ல் ட்வின் டவர் மீது மோதுவதற்காக விமானங்களைக் கடத்தும் உத்திகளைச் சொல்லிக் கொடுத்தவர் முதலிய குற்றச்சாட்டுகள் இப்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. வீடியோக்களில் தோன்றி இந்த தாக்குதல்களுக்கு பின்லாடன் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் இந்தத் தாக்குதல்களுடன் பின்லாடனைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்களைவிட அலி முகமது, கண் பார்வையற்ற ஷேக் என அழைக்கப்படும் ஓமர் அப்துல் ரஹ்மான், பிற முஸ்லிம் ஜிகாதி குழுக்களின் பங்கு குறித்த ஆதாரங்களே அதிகம். சி.ஐ.ஏ.வின் சில அதிகாரிகளுக்காவது தெரியாமல் இது நடந்திருக்கும் என்பது நம்புவதற்குரியது அல்ல. ஆனால் 1998ல் தான் அலி முகமது கைது செய்யப்படுகிறார். அவருடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதியிடமிருந்து விமான வரைபடங்களைக் கைப் பற்றியது அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு. அவற்றையெல்லாம் மீறி 2001 செப்டம்பரில் ட்வின் டவர் தகர்ப்பு எவ்வாறு நடந்தது? நடக் கட்டும் என்றே அவர்கள் அனுமதித்தார்களா அல்லது உண்மையிலேயே கவனக் குறைவுதான் காரணமா?

மும்பை மீது நடந்த லஷ்கர் இ தொய்பாவின் தாக்குதலுக்கும் மற்றொரு சி.ஐ.ஏ. உளவாளியான டேவிட் ஹெட்லி பின்னணி சக்தியாக இருந்திருக்கிறார். தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சி.ஐ.ஏ. அலி முகமது, டேவிட் ஹெட்லி இருவருக்குமே குறைவான தண்டனையைப் பெற்றுத் தர முயற்சிக்கிறது. அவர்களை முழுமையான விசாரணைக்கு அனுமதிக்க மறுக்கிறது. டேவிட் ஹெட்லியை இந்திய அதிகாரிகளின் விசாரணையிலிருந்து காப்பாற்றி வருகிறது. உண்மையில் அவர்கள் எதை மறைக்க முயல்கிறார்கள்? அத்தகைய மர்மங்கள் வெளியே வரும் என்பதாலோ என்னவோ, ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு வைத்தது போன்ற போலி நீதி விசாரணையைக்கூட பின்லாடனுக்கு அவர்கள் வைக்கவில்லை.

கண் பார்வையற்ற ஷேக் (Blind Sheik) என அழைக்கப்படும் ஓமர் அப்துல் ரஹ்மான் எகிப்தைச் சேர்ந்த தீவிரவாத நாட்டம் கொண்ட மத குரு. 1990களில் அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்காவிலேயே பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவுக்கு எதிராகப் போர் தொடுக்குமாறு முதலில் அறை கூவல் விடுத்தது அவர்தான்; பின்லாடன் அல்ல. அமெரிக்காவின் முதல் தலையாய எதிரி அவரே. எனினும் வளைகுடா போரை சாக்கிட்டுக்கொண்டு 1992ல் அமெரிக்க ராணுவம் சவூதியில் தனது ராணுவ முகாமை அமைக்கிறது. ஒரு கட்டத்தில் 60,000 அமெரிக்கப் போர் வீரர்கள் அங்கு நிலை கொண்டிருந்தார்கள். மன்னராட்சிக்கு எதிராக கலகங்கள் சூழ்ந்து வந்த சமயத்தில் அமெரிக்கப் படைகள் தனது பாதுகாப்பிற்கு அவசியம் என சவூதிமன்னர் அப்துல்லாவின் குடும்பத்தினர் கருதினார்கள். தங்களுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்த தங்குதடையற்ற எண்ணெய் வினியோகம் தேவை என்பதால் அமெ ரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் அதுவே சாதகமாக இருந்தது. சி.ஐ.ஏ.யின் மறைமுக உதவியுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ரஷ்யாவை விரட்டியடித்த ஜிகாதி தலைவர்களுள் ஒருவரான ஒசாமாவின் கவனம் அமெரிக்காவின் மீது திரும்பியது இந்த சமயத்தில்தான். மக்கா, மதீனா அமைந்துள்ள புண்ணிய பூமியில் அமெரிக்கப் படைகள் இருக்கக்கூடாது என அவர் கூறினார். ஆனால் 2001ல் ட்வின்டவர் தகர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் சவூதியிலிருந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டன (அப்போதும்கூட அமெரிக்கப் படைகள் மற்றொரு முஸ்லிம் தேசமான ஏமனுக்குதான் இடம் மாறின, ஒட்டுமொத்தமாக வளைகுடாவை விட்டு வெளியேறவில்லை).

அமெரிக்க ராணுவம் சவூதியில்கால் பதிக்காதிருந்தால் பின்லாடன் அமெரிக்காவை இலக்கு வைத்திருப்பாரா என்பது பதில் தர முடியாத கேள்வி. அதற்கு முன்பிருந்தே அவருக்கு அமெரிக்க விரோத மனோ பாவம் இருந்ததா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் யூத ஆதரவு நடவடிக்கைகள், சர்வாதிகார முஸ்லிம் ஆதரவு நாடுகளுக்குக் கொடுத்து வரும் ஆதரவு முதலியவற்றால் ஒசாமாவுக்கு அமெரிக்கா இயல்பான எதிரியாகவே உருவாகியிருக்கும். எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறை ஏற்க முடியாதது என்றாலும்கூட உலக ரவுடியாக மாறிவிட்ட அமெரிக்கா இப்படி ஒரு எதிரியைச் சந்திக்க காத்திருந்தது என்பது உண்மை. போதைப் பொருள் கடத்தல் தொழிலில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டு, அதன் வழியாக உளவுத் தகவல்களோடு பல லட்சம் கோடி டாலரையும் சம்பாதித்த சி.ஐ.ஏ. விரும்புவதும் அத்தகைய மோதல்கள்தான். இது போன்ற மோதல்களின் வழியேதான் சி.ஐ.ஏ.வின் இருப்பு அமெரிக்க அரசியலில் உறுதி செய்யப்படுகிறது.

தங்கள் தேசத்தின் எல்லைக்குள் அத்தனை சிவில் உரிமைகளையும் பாதுகாக்கும் அதே அமெரிக்காதான், உலகெங்கும் அத்தனைவிதமான சிவில் உரிமை மீறல்களிலும் ஈடுபடுகிறது. அமெரிக்கா என்ற எதிரிதான் அல் காயிதாவுக்கு அவர்களின் மனித விரோத வன்முறை சித்தாந்தத்தையும் ஏராளமான போராளிகளையும் அரவணைக்க வைக்கிறது. ஒரு நாகரீக சமூகம் ஏற்க முடியாதபடி பெண்களுக்கு எதிரான, மனித சுதந்திரத்திற்கு எதிரான கருத்துக்களையே தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்தவர் பின்லாடன். ஆனால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த கொடுங்கோல் தேசிய அரசுகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற உலக ரவுடிகளுக்கும் எதிராகத்தான் ஒசாமா ஜிகாத் தொடுத்தார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீறல்களின் பின்னணியில் இந்தியாவும் அதில் இடம் பெற்றது.

வல்லரசு தேசங்களை ஒரு முடிவில்லாத கெரில்லா போருக்குள் இழுத்து, யுத்த செலவுகளால் அவற்றின் பொருளாதார பலத்தைச் சிதைப்பதே ஒசாமாவின் உண்மையான நோக்கம் என சொல்பவர்கள் உண்டு. முஸ்லிம் மக்களை ஒடுக்கும் தேசிய, சர்வதேச ஆட்சியாளர்களுக்கு எதிரான நோக்கத்தை அடைவதற்காக அப்பாவிகளைக் கொல்வதையும் ஜிகாத் அனுமதிக்கிறது என்றும் பின்லாடன் வாதிட்டார். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையே ஜிகாத் குறிப்பிடுகிறது. ஆனால் அடக்கு முறையை எதிர்கொள்ளும்போது கூட வன்முறையைக் கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்க வேண்டும் என்றும் அப்பாவிகளைக் கொல்வதை எந்த இடத்திலும் ஜிகாத் நியாயப்படுத்தவில்லை என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் புரிதலில் இரு வேறு துருவங்களையும் தொட்ட ஒரு வார்த்தை என்றால் அது ஜிகாத். அதில் ஒசாமா பின்லாடனின் அடிப்படைவாத விளக்கத்தைக் கேட்கவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்காவின் நூறு ஆண்டுகளைக் கடந்த உலக ஏகாதி பத்யத்தைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையே காரணம்.
maya

No comments:

Post a Comment