islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலநடுக்கம்



சேலம் மாவட்டத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

ஜருகுமலை, வாழப்பாடி, புத்திரகவுண்டம்பாளையம், குரால்நத்தம், பனைமரத்துப்பட்டி, சோமம்பட்டி, ஏத்தாப்பூர், விளாரிபாளையம், சிங்கிபுரம், மங்களபுரம், மல்லியகரை, நாகியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். நில அதிர்வால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கீழே விழுந்தன. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள சீஸ்மோகிராப் கருவில் 2.9 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 60 விநாடிகள் வரை நீட்டித்ததும் பதிவாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் சில வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காலை 8.26 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து வடக்கு திசையில் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சீஸ்மோகிராப் கருவியைப் பார்வையிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் கே.மகரபூஷணம் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என கேட்டுக் கொண்டார்.

ராசிபுரத்தில்... நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிக்கி, வெள்ளக்கல்பட்டி, மங்களபுரம், காமராஜ்நகர், நாரைக்கிணறு, புதுப்பட்டி, திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

ஊத்தங்கரையில்... கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் ஆண்டியப்பனூர் உள்ளிட்ட சில கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.20 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 2 விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஊத்தங்கரை வட்டாட்சியர் பாஸ்கர் கூறினார்.

No comments:

Post a Comment