இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் ஒரே முழக்கம் ’வளர்ச்சி’. பாசிசவாதிகள் பொதுவுடைமை வாதிகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் ஒரே குரலில் முழங்குகின்றனர். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைக்கு தலைமை வகித்த மோடியும் வளர்ச்சியை பற்றி முழங்குகிறார்.
ஏழைகளின் பாங்காளான், தொழிலாளர்களின் தோழன் என கூறும் கம்யூனிஸ்டுகளும் வளர்ச்சியை பற்றித்தான் பேசுகிறார்கள். பாசிசத்திற்கு நண்பனாக சோசியலிசத்திற்கு பாதுகாவலனாக திகழும் நிதீஷ்குமாரும் வளர்ச்சியைப்பற்றித்தான் பேசுகிறார்.
நமது நாட்டில் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நடத்தப்படும் பைத்தியக்காரத்தனமான நாடகத்திற்கு அப்பாவி மக்களின் உயிர்களை பலிகொடுக்க கார்ப்பரேட் முதலைகளும், அவர்களுக்கு துணைபுரியும் ஆட்சியாளர்களும் தீர்மானித்துவிட்டார்கள் போலும். அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்களும் அதனை தொடர்ந்து நடைபெறும் மோதல்களும் இதனைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து உருவான மோதல் சூழல் இதுவரை அடங்கவில்லை. குவாரி கம்பெனிகள் கங்கை நதியில் மணல் அள்ள தோண்டுவதற்கு எதிராக நிகமானந்தா என்ற சாது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மரணித்த பிறகும் உத்தரகாண்டின் பா.ஜ.க அரசு பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒரிஸ்ஸாவில் கோவிந்த் பூரில் போஸ்கோ இரும்பு உருக்காலைக்கு எதிராக மக்கள் போராட்டம் எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பும் சூழல் உருவாகியுள்ளது.
இவை அனைத்தையும் மிஞ்சும் விதமாக மேற்குவங்காள மாடல் வளர்ச்சி பயங்கரவாதம் அண்மையில் ’நல்லாட்சியின் சின்னமாக’ கொண்டாடப்படும் நிதீஷ்குமாரின் பீகாரில் இம்மாத துவக்கத்தில் நடந்தேறியது.
அங்கு துணை முதல்வராக பதவி வகிக்கும் சுசில் குமார் மோடியின் ஆசியுடன் கார்ப்பரேட் குத்தகையின் வளர்ச்சி ரதம் நிரபராதிகளான மக்களின் நெஞ்சின் மீது தேரோட்டம் நடத்தியது.
ஆறுமாத பிஞ்சுக்குழந்தை, கர்ப்பிணியான பெண்மணி உள்பட 6 பேரை அநியாயமாக சுட்டுத்தள்ளிவிட்டு நிதீஷ்குமாரின் அரசு ‘ஆரோ சுந்தரம் இண்டர்நேசனல் ப்ரைவட் லிமிட்டட்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு மக்கள் பயன்படுத்தும் சாலையை தாரைவார்க்க தீர்மானித்தது. பெயரளவில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டதை தவிர வேறு எதனையும் செய்ய நீதீஷ்குமார் முன்வரவில்லை.
விசாரணை முடியும்வரை பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழஙகத் தேவையில்லை என தீர்மானித்துவிட்டு சீனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நிதீஷ்குமார். ராம்தேவ் மற்றும் அன்னா ஹஸாரேவுடன் கார்ப்பரேட் ஊடகங்கள் கட்டிப்பிணைந்த நாட்களில் பட்டப்பகலில் நடந்த அரச பயங்கரவாதத்தை ’ஊடக சூட்சித்திறன்’ மூலம் மூடி மறைத்தார் நிதீஷ்குமார்.
கார்ப்பரேட் குத்தகைகளின் வளர்ச்சிக்கு ராஜபாதையை உருவாக்க நொய்டாவிலும், ஒரிஸ்ஸாவிலும் ஆட்சியாளர்கள் வலுக்கட்டாய நடவடிக்கைக்கு தயாரானார்கள். ஆனால் பீகாரின் அராரியா மாவட்டத்தின் போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் பஜன்பூர் கிராமவாசிகளின் நடமாடும் சுதந்திரத்திற்கே தடை விதித்து கார்ப்பரேட் குத்தகைகளை பாதுகாக்க அரசு அவசரம் காட்டியது.
பீகார் இண்டஸ்ட்ரியல் ஏரியா அதாரிட்டி 2009-ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்த 35 ஏக்கர் நிலத்தில் 130 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கும் தனியார், தொழிற்சாலை இரண்டு கிராமங்களுக்கு இடையேயான முக்கிய சாலையை அடைத்துவிட்டு நடத்திவரும் கட்டிடப்பணிகள் தாம் பிரச்சனைகளுக்கு காரணமானது.
அருகிலுள்ள கிராமங்களான பஜன்பூரையும், ராம்பூரையும் இணைக்கும் முக்கிய சாலையை வளைத்து கடந்த டிசமபர் மாதம் தனியார் நிறுவனம் நிர்மாண பணிகளை துவக்கியதைத் தொடர்ந்து முந்தைய சாலைக்கு மாற்றுவழிச் சாலை என்ற குறைந்த பட்ச கோரிக்கையை முன்வைத்து இரு கிராமவாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் 1-ஆம் தேதி மாற்று வழியை ஏற்பாடு செய்கிறோம் என வாக்குறுதி அளித்த தனியார் நிறுவனம் அதனை நிறைவேற்றாமல் தொடர்ந்து நிர்மாணப்பணிகளை நடத்திவந்ததால் கிராமவாசிகள் மீண்டும் தனியார் நிறுவனத்தின் வளாகத்திற்கு அருகே போராட்டத்தை துவக்கினர்.
அவர்கள் மீது தான் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் என குற்றம் சாட்டி போலீஸ் சரமாரியாக கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. ஆறுமாதம் பருவமுடைய பிஞ்சுக்குழந்தை ஸாஹில் அன்ஸாரி, கர்ப்பிணியான இருபத்தைந்து வயது ஸஸ்மினா ஹாத்தூன், பத்தொன்பது வயதான முஸ்தஃபா அன்ஸாரி, இருபத்திரண்டு வயதான முக்தார் அன்ஸாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
நிதீஷ்குமாருடன் ஆட்சியை பங்கிடும் பா.ஜ.கவின் மேலவை உறுப்பினரான அசோக் அகர்வாலின் மகன் சர்ச்சைக்குரிய தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். போலீசாரின் அராஜகத்திற்கு அசோக் அகர்வாலும் உடந்தையாக இருந்துள்ளார். துணைமுதல்வர் சுசில்குமார் மோடியின் உறவினர் என்பதால் அவருக்கு தெரிந்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஊடகங்கள் காட்டிய மெளன பயங்கரவாதம் மிகவும் வெட்ககேடானதாகும். ஏழ்மையான சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் ஒரு கிராமத்தில் ஜூன் 3-ஆம் தேதி நடந்த போலீஸின் அராஜக வெறியாட்டத்தை சமூக ஆர்வலர்களான பாலிவுட் இயக்குநர் மகேஷ்பட், ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிக்கொணர்ந்ததன் மூலமே தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை ஊடகங்களுக்காக ஒதுக்கிவைக்கிறார் நிதீஷ்குமார். 2010 செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் மட்டும் 1,012,13,999 ரூபாய் மதிப்பிலான விளம்பரங்களை பீகார் அரசிடமிருந்து கைப்பற்றிய ’தைனிக் ஹிந்துஸ்தான்’ என்ற ஹிந்தி பத்திரிகையிலிருந்து ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட தேசிய பத்திரிகைகளும், உருது பத்திரிகைகளும் நிதீஷின் வாடிக்கையாளர்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறிருக்க் நிதீஷின் இமேஜை கெடுக்க ஊடகங்கள் முயற்சி மேற்கொள்ளாது என்பதற்கான தெளிவான ஆதாரம் தான் போர்ப்ஸ்கஞ்சில் மிருகத்தனமான போலீஸ் நடவடிக்கையை குப்பைக்கூடையில் தூக்கி எறிந்த ஊடகங்களின் செயல் அமைந்துள்ளது. இத்தகையதொரு நிர்ணாயக கட்டத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் நிதீஷின் முன்னால் பிரதி உபகாரமாக வளைந்துகொடுத்தது.
வளர்ச்சியை நோக்கிய மரண பாய்ச்சலில் மக்களுக்கும், அவர்களின் உயிர், உடைமைகளுக்கும் எவ்வித மதிப்பும் இல்லை என்பதைத்தான் போர்ப்ஸ்கஞ்ச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. கார்ப்பரேட் முதலைகளும், தரகு முதலாளிகளும், வளர்ச்சி மாயாஜாலத்தின் பங்குதாரர்களாக மாறிவிட்ட ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் கோடிகள் புரளும் வர்த்தகத்தில் கமிஷனை பெறுவதற்கு சாதாரண மக்களின் உயிரை குடிக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை பீகாரில் நடந்த வளர்ச்சி பயங்கரவாதம் எடுத்தியம்புகிறது.
இது துவக்கமல்ல. முன்பு நந்திகிராமிலும், சிங்கூரிலும் நடந்தேறியது தான். இது போர்ப்ஸ்கஞ்சுடன் முடிந்துவிடக்கூடியதும் அல்ல. நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் ப்ராண்ட் அம்பாசிடர்களாக வேடமிட்டு அலையும் வளர்ச்சியின் பிதாமகன்களுக்கு தங்களது பேராசைகளை விதைக்கவும், அறுவடை செய்யவும் நிலம் மட்டும் போதும். அதனை பண்படுத்திட மரங்களை அல்ல மனிதர்களின் மண்டைகளை உடைத்தும் தாங்கள் நினைத்தைதை அடைய முயல்வார்கள் என்பதை புரிந்துக்கொள்ள இனியும் வேறு சம்பவங்கள் நடைபெறவேண்டுமா?
அ.செய்யது அலீ.
No comments:
Post a Comment