islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்


உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன்முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படுத்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் மகன் வில்லியம் காங்கிரீவ் திப்புவின் ராக்கெட் பகுதிகளை இங்கிலாந்து கொண்டு சென்று நவீனப்படுத்தினார். அதுவே பின்னர் காங்கிரீவ் ராக்கெட்டு கள் என்று பெயரிடப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் ஆராய்ச்சிக் குழந்தையென்றால், அதனை பத்திரமாக தன் முதுகில் ஏற்றிச்சென்று, மிகச் சரியான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் ஏவுகலம் (Launch Vehicle) (ராக்கெட்) அதன் தாய் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். கடின முயற்சி, தன்னம்பிக்கை, திறன் ஆகியவை அதிகம் தேவைப்படுகின்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் ஏவு வாகனம் ஒரு முக்கிய பகுதி.

இந்தியாவில் ராக்கெட் (அல்லது) ஏவுகலம் பிறப்பு 1960 காலகட்டங்களில் நிகழ்ந்தது. பிரெஞ்சு நாட்டினுடைய சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பமான கேரியர் ராக்கெட் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில், சுமார் 200 கி.மீ. உயரத்தில் நிகழும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டு வந்தது. அந்நாடு, அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளிக்க முன்வந்தது. இந்தியா அத்தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, சவுண்டிங் ராக்கெட்டுகளை தும்பாவில் தயாரிக்கத் துவங்கியது. இதுதான் ஆரம்பம்.

1970 காலகட்டத்தில் PSLV ராக்கெட்டுகளுக்கு தேவையான விகிங் எஞ்சின் தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இந்தியாவிற்கு அளித்தது. அந்நாடு இத்தொழில்நுட்பத்தை பணம் வாங்காமல், அறிவியல் துறையில் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்படவேண்டி இதனை செய்தது. நம் நாட்டு விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை கற்றறிந்து, மேம்படுத்தினர். பின்னர் நம்முடைய நாட்டிலேயே இயந்திர பாகங்களையும், நவீனப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தினையும் உருவாக்கலானார்கள்.

நம்முடைய அனைத்து ராக்கெட்டுகளின் தாய் சவுண்டிங் ராக்கெட்டுகள். இவை 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 300 முதல் 400 கி.மீ. உயரத்தில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டவை. இந்தியாவில் முதலாவது செயற்கைக்கோள் ராக்கெட்டான நகயலி3ன் வடிவமைப்பும், தொழில்நுட்ப அடித்தளமும் உருவானதற்கு இந்த சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பம் வழிவகுத்தது. உள்நாட்டு வடிவமைப்பு, திறன், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை SLV-3ன் உருவாக்கத்தில் துளிர்விடத் துவங்கியது.

ஒரு ராக்கெட் (அல்லது) ஏவுகலம் என்பது நியூட்டனின் மூன்றாம் விதியினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய இயந்திர வாகன அமைப்பு. ராக்கெட்டின் முன் பகுதியிலிருந்து (தலை) காற்று உள்ளிழுக்கப்பட்டு, திட அல்லது திரவ எரிபொருட்களுடன் எரிகலன் அமைப்பில் எரிக்கப்படுவதனால் அதிக அழுத்தம் கொண்ட வெப்ப வாயு உருவாகிறது. இந்த வெப்ப வாயு பீச்சாங்குழல்(Nozzle) போன்ற அமைப்பின் வழியே (குறிப்பிட்ட விட்டம் வரை குறுகி, பின் அகன்று விரியும் குழல் போன்ற அமைப்பு) செல்லும்போது, குறுகிய பகுதியில் வெப்ப வாயுவின் அழுத்த ஆற்றலானது, அகன்ற பகுதியில் செல்லும் போது இயக்க ஆற்றலாக மாறுகிறது. ராக்கெட்டின் வால் பகுதியில் வெப்ப வாயு அதிக விசையுடன் வெளியேறுகிறது. இதனால் இவ்விசைக்கு சமமான விசை ராக்கெட்டின் மீது செயல்பட்டு, ராக்கெட்டை முன்னோக்கி அதிக வேகத்தில் உந்துகிறது. நாம் தீபாவளிக்கு வெடிக்கும் ராக்கெட் பட்டாசுகூட இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோளின் பயன்பாடுகளைப் பொறுத்துதான் அதற்குண்டான சுற்றுப் பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு நிர்ணயிக்கும் சுற்றுப் பாதையானது ராக்கெட்டுகளின் தேவையான பண்புகளை தீர்மானிக்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் நிச்சயிக்கப்பட்ட பாதையில் பறந்து சென்று குறிப்பிட்ட உயரம் மற்றும் திசை வேகத்தில், சுற்றுப் பாதையில் செயற்கைக்கோளை செலுத்துகிறது. இதற்காக பிழைநிகழ இடமளிக்காத தரம் வாய்ந்த ராக்கெட் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், ஏவுதலுக்கு முன்னர் அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை சோதனை செய்து உறுதி செய்ய தள வசதிகள், ஏவு வாகன திட்ட நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு வசதிகள் ஆகியவற்றின் அவசியம் மிக முக்கியமானது.

செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ராக்கெட்) வடிவமைப்பதில் 1. உந்துசக்தி 3. காற்றியக்கம் மற்றும் உருவாகும் வெப்பம் 3. கட்டுமானம் மற்றும் பயன்படுத்தப்படும் உலோகப் பொருட்கள் 4. செயற்கைக்கோள் ராக்கெட்டினின்றும் பிரியும் தொழில்நுட்பம் 5. ராக்கெட்டுகள் கட்டம் கட்டமாக பிரியும் வழிமுறை 6. ஒருங்கிணைப்பு, ஏவுதலுக்கு முன் பாகங்களின் இயக்கங்களை சரிபார்த்தல் மற்றும் ஏவுதல். 7. நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமான பகுதிகள்.

தள்ளுசுமை எடை (Payload) மற்றும் சுற்றுப்பாதையின் அளவீடுகள் நிர்ணயிப்பதிலிருந்துதான் ராக்கெட் வடிவமைப்பு தொடங்குகிறது. சுற்றுப்பாதையின் அபோஜீ (Apogee) (சுற்றுப் பாதையில் சுற்றிவரும்போது பூமிக்கும் செயற்கைக்கோளுக்கும் உள்ள குறைந்த தூரம்) மற்றும் பெரிஜீ (Perigee) (அதிக தூரம்) உயரங்கள், பூமத்திய ரேகையைப் பொருத்து சுற்றுப்பாதை தளத்தின் சாய்வுக்கோணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது ஆகியவை ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சவுண்டிங் ராக்கெட்

1963- ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி நைக் - அபாசே சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் தும்பா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ராக்கெட் முதல் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது துவங்குகிறது. அன்று தொடங்கிய இப்பயணத்தில் சோதனை ராக்கெட்டுகள், வானிலை ஆய்வு ராக்கெட்டுகள் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஏவுதல்கள் என பல ராக்கெட்டுகளை இந்தியா வடிவமைத்து விண்ணில் ஏவியுள்ளது. இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டுகள் 10 முதல் 100 கி.மீ. வரையிலான தள்ளுசுமை (Payload) எடுத்துச் செல்லும் திறன் படைத்தவை.

அயனோஸ்பியரின் ‘D’ மற்றும் ‘F’ பகுதியைப் பற்றிய ஆய்வு, வாயு மண்டலத்திற்கும் மேல் வாயுக்களின் வேதியியல் பண்புகள் மற்றும் அதன் நிறை பற்றிய ஆய்வு 350 கி.மீ.க்கும் மேல் சூரியனிலிருந்து வரும் ல-கதிர்களின் ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள இவ்வகை ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.



எஸ்.எல்.வி.-3
(Satellite Launch Vehicle3-SLV3)

இது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலம். ராக்கெட் தொடர்பான தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் SLV-3 திட்டத்தின் மூலம் பிறந்தது. ராக்கெட் மற்றும் திட்ட வடிவமைப்பு, புதிய பொருட்கள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு தொழில்நுட்பம், அதிக விசை தரும் திட எரிபொருள்கள், நான்கு வகையான மோட்டார்களுக்கு, கலவை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வெப்பத்தடுப்பு கவசம், கண்ட்ரோல் பவர் பிளாண்ட்கள், இனர்ஸியல் சென்சார்கள், மின்னணு சிஸ்டம் ஒருங் கிணைப்பு, பன்முக வடிவமைப்பு, மாதிரி உருவாக்கம், செயற்கைக்கோள் ஏவுவாகன திட்ட நிர்வாகம் என அத்தனை களங்களும் SLV-3 திட்டத்தின் மூலம் முன் னேற்றம் கண்டது. PSLV மற்றும் GSLV போன்ற ஏவுவாகனங்களுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பு அணுகுமுறை உருவாக்குவதற்கு SLV-3 திட்ட வெற்றிதான், உந்துசக்தி.

SLV-3 E1-இல் இடம்பெற்ற ஒரு வன்பொருள் முறையாக செயல்படாமையினாலும், இரு கட்டங்களை கொண்ட ராக்கெட்டின் இரண்டாவது கட்டுப்பாட்டு அமைப்பின் சோலனாய்டு வால்வில் தூசு படிந்து சரிவர இயங்காமையி னாலும் திட்டம் தோல்வியை சந்தித்தது. அடுத்த முயற்சியான SLV-3E2-வில் குறிப்பிட்ட குறைபாடுகளை களையப்பெற்று 1980-ஆம் ஆண்டு ஜூலை முதல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

எ. எஸ்.எல்.வி. (ASLV- Augmented Satellite Launch Vehicle)

அறிவியல் ஆராய்ச்சிக்கும், வானியல் பயன்பாட்டுக்கும் அதிக எடையுடைய பேலோடுகளை விண்ணில் செலுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, வடி வமைக்கப்பட்டவை இந்த பெரிதாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனத் ஆநகய திட்டம்.

இது SLV-3 ராக்கெட்டுடன் இரு ராக்கெட் மோட்டார் களையும் பூஸ்டர் மோட்டார்களையும் கூடுதலாகப் பெற்றவை. SLV-3 திறந்தச் சுற்று கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் அமைப்பினைப் பெற்றதெனில் ASLV மூடிய சுற்று அமைப்பினைக் கொண்டது. தொகுப்பு பீச்சாங்குழல் (Nozzle), ராக்கெட்டின் பயணப் போக்கை கட்டுப்படுத்தும் அமைப்பு, ஏவுதள ஒருங்கிணைப்பு வசதிகள் ஆகியவை ASLV திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன.

வாயு மண்டலத்தில் ராக்கெட் பயணிக்கும் போது நிகழும் உயர்ந்த காற்றியக்க அழுத்தம், தானாக பறக்கும் அமைப்பு, ராக்கெட்டில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்ட தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பு போன்றவை ASLV - யில் மேம்படுத்தப்பட்டன.

பி. எஸ்.எல்.வி. (PSLV -Polar Satellite Launch Vehicle)

SLV-3 யின் மாடலை அடிப்படையாகக் கொண்டு அதனுடன் தேவைக்கேற்ப பல்வேறு வேலைகளை செய்யக் கூடிய இயந்திரப் பாகங்களை இணைத்துதான், ஏவு வாகனங்கள் நவீனப்படுத்தப்பட்டன. டநகய ராக்கெட்டுகள் 1000.கி.கி. எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை சூரியனை மைய மாகக்கொண்ட வட- தென்துருவ சுற்றுப் பாதையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. PSLV ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை யில் 139 டன் எடையுள்ள உந்து எரிபொருள் கலம், இரண்டாவது நிலையில் 37 டன் எடையுடைய திரவ எரிபொருள் கலம், மூன்றாம் நிலையில் உயர்செயல்பாட்டு மோட்டார், நான்காம் நிலையில் இரட்டை என்ஜினுடன் இணைந்த 2.5 டன் எரிபொருள் கலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. PSLV -யில் டிஜிட்டல் முறையிலமைந்த தானாக பறக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெசின்ஸ் (RESINS) எனும் முப்பரிமாண வழிகாட்டும் அமைப்பு மூலம் செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. PSLV ராக்கெட்டுடன் அதிக சக்திகொண்ட பூஸ்டர்களையும், பெரிய மோட்டார்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட PSLV-XL உதவியுடன் சந்திரயான் -1 நிலவுக்கு பயணமானது.

PSLVயின் உதவியிடன் கொரியாவின் KITSAT-3 மற்றும் ஜெர்மனியின் TUBSAT செயற்கைகோள்கள் வாணிபரீதியாக விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளி திட்டங்களில் இந்தியாவின் வெற்றி சதவீதம் கூடியது.

குறைந்த எடைகொண்ட வெப்பத் தடுப்பு கவசம், காற்றினூடே பறக்கும்போது காற்று மூலக்கூறுகளுக்கும் விண்கலத்தின் மேற்பரப்பிற்கும் இடையே நிகழும் உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கக்கூடிய வடிவமைப்பு, ஹைப்பர் சோனிக் காற்றியக்க வடிவமைப்பு (ராக்கெட் விண்ணில் பறக்கும்போது அதன் வேகம் படிப்படியாக அதிகரித்து சப்சோனிக், டிரான்சோனிக், சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர் சோனிக் போன்ற வேகக் கட்டங்களை அடையும்போது ராக்கெட்டின் உடலமைப்பில் சுற்றியக்கம் ஏற்படுத்தும் தடையினை குறைப்பதற்கான அமைப்பு), வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு, ராக்கெட்டை திரும்பப் பெறுதல் மற்றும் மிதவை அமைப்பு ஆகிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டன.

ஜி. எஸ்.எல்.வி. (GSLV- Geosynchronous Satellite Launch Vehicle)

PSLVயினை படிப்படியாக நவீனப்படுத்தும் அதே வேளையில், உடன் எடையுள்ள தொலைத்தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்த GSLV-யினை ISRO வடிவமைத்தது. இதில் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் நிலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சவால்களை சமாளித்து, அதிக எடையை சுமந்து செல்லும் வகையில் GSLV-யின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வந்தது. தற்போது உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் பகுதி தயாரிக்கப்படுகிறது. ராக்கெட் எதிர்பார்க்கப்பட்ட தன்மையுடன் செயற்கைக்கோளை குறைந்தபட்ச விலகலுடன் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு மூடப்பட்ட சுற்று வழிகாட்டும் அமைப்பு பயன்படுத்தப் படுகிறது. இந்த அமைப்பில் ரேட் இன்டகிரேடட் ஜைரோ போன்ற ஜைரோ சென்சர்கள், வேகத்தை அதிகப்படுத்தும் சர்வோ ஆக்கிலரோ மீட்டர்கள் (வேக முடுக்கி), உயிர்நாடி போன்ற இணைப்பு நுட்பமான வழிகாட்டும் மென்பொருள் அடங்கியுள்ளன. மேலும் புவியிலிருந்து எவ்வளவு உயரத்தில் தனது சுற்றுப்பாதையில் செயற்கைகோள் வலம் வரவேண்டும் என்று தீர்மானிக்கிறோமோ அதில் 10 கி.மீ. அதிகமான (அல்லது) குறைவான உயரத்திலும் தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையின் கோணத்தில் 0.2 டிகிரி அதிகமான (அல்லது) குறைவான வித்தியாசத்தில் ஜைரோ, துல்லியமாக செயற்கைகோளை வலம்வர வைக்கும்.

ஜி. எஸ்.எல்.வி மார்க் . GSLV MK III- Geosyronous Satellite Launch Vehicle Mark III)

நான்கு டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு GSLV MK III உருவாக்கப்பட்டு வருகிறது. 200 டன் எடை திட எரிபொருள் மோட்டார்களும் 110 டன் எடை திரவ எரிபொருள் மோட்டார்களும், இறுதிக் கட்டத்தில், 25 டன் எடை கிரையோஜெனிக் எரிபொருள் நிலையையும் கொண்டதாக இருக்கும். தீ கண்டுபிடிக்கும் கருவி, தொலைதூரக் கண்காணிப்பு, தொலைக்கட்டளை ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன் படுத்தப்படவுள்ளது.
செலுத்தப்பட்ட வாகனம் மீண்டும் பூமிக்கு வருவித்தல், அதற்கான உபகரணங்கள் தயாரித்தலில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விண்கலம் ஏவுதலுக்கான செலவு குறையும். PSLV ராக்கெட்டுகள் மூலம் 600 கி.மீ. எடையுள்ள செயற்கைகோளை 300 கி.மீ. உயரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்துவது, அவ்வாறு செலுத்தப்பட்ட செயற்கைகோள் திட்டமிட்ட பணி முடிவடைந்தபிறகு பூமிக்கே திரும்ப வந்துவிடுவது தொடர்பான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

இஸ்ரோவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கடந்த 40 வருடங்களில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. 1967-இல் 75 மி.மீ. விட்டமுடைய மோட்டார், ராக்கெட்டுகளில் உபயோகிக்கப்பட்டது. இது 4 கி.கி. எரிபொருளை எரிக்கவல்லது. சவுண்டிங் ராக்கெட்டுகளில் 125 மி.மீ. முதல் 560 மி.மீ. விட்டமுடைய திட எரிபொருள் மோட்டார் உபயோகிக்கப்பட்டது. இது 14 கி.கி. முதல் 700 கி.கி வரையிலான எரிபொருளை எரிக்கவல்லது. SLV-3ன் பூஸ்டர் மோட்டாரானது 1 மீ விட்டமுடையதும், 9 டன் எரிபொருளைக் கொண்டதுமாகும். PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த, 2.8மீ. விட்டமுடைய, 139 டன் எரிபொருள் கொள்ளளவு கொண்ட, 4700 கி. நியூட்டன் உந்துசக்தி கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் GSLV MK III ராக்கெட்டுகளில் 3.2 மீ. விட்டமுடையதும், 200 டன் எரிபொருள் கொண்டதுமான மோட்டார்கள் உபயோகப் படுத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

ராக்கெட் மோட்டார்களின் கட்டுமானத்திற்கு தரமான மாராஜிங் எஃகு மற்றும் நவீன வெல்டிங் தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. திரவ உந்து எஞ்சின்களில் ஆன் ஆஃப் இயக்கத்திற்கு பயன்படும் செயல் கட்டுப்பாட்டு அமைப்பில் நைட்ரஜன் ஆக்ஸைடையும் மோனோ மீதைல் ஹைட்ரஜனையும் கலந்து மிக வேகமாக ஆன்- ஆஃப் கட்டுப்பாடு நிகழ்த்தப்படுகிறது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் GSLV -யின் இறுதி நிலையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் - 1820 சென்டிகிரேடிலேயே கொதிக்கக் கூடிய திரவ ஆக்சிஜனும், - 2530 சென்டி கிரேடிலேயே கொதிக்கக்கூடிய திரவ ஹைட்ரஜனும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பாதுகாப்பாக ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தடுப்பதற்கு குறைந்த வெப்பநிலையை தாங்கவல்ல உலோக பாகங்கள் மற்றும் இவற்றை எஞ்சினில் செலுத்தக்கூடிய பம்பிற்கு பிரத்தியோக சீல் (தடுப்பான்கள்) உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. GSLV MKIII-யில் 200KN முடுக்குவிசை கொடுக்கவல்ல கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கத்தில் இஸ்ரோ முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

ஏவுதள வசதிகள், ராக்கெட்டை ஏவுதலுக்கு முன்னர் சோதனை செய்ய தேவையான வசதிகள் ஆகிய அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்துவரும் பன்முக தொழில்நுட்ப வளர்ச்சி, சரியான திட்டமிடல், உள் நாட்டிலேயே இயந்திரப்பாகங்களை உற்பத்தி செய்ய தேவையான தொழிற்சாலை வசதிகள், சரியான மதிப்பீடு மற்றும் சோதனை முறைகள் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் தோற்றத்தை உயர்த்தியதோடு மட்டுமன்றி, வணிக நோக்கில் வெளிநாட்டுத் தேவைகளுக்கேற்ப செயற்கைகோள்களை செலுத்தும் நிறுவனமாகவும் மாற்றியுள்ளது. தற்போது பல நாடுகள் குறைந்த செலவில் விண்ணில் செயற்கைகோளை ஏவுவதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இன்று உலகில் இந்தியாவில் விண்வெளித் திட்டங்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகக்குறைந்த செலவிலேயே நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பது உலக அரங்கில் சாதனையாகும்.

-எஸ். விஸ்வநாதன்
பொது அறிவு உலகம்

No comments:

Post a Comment