islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

200-க்கு 200 பெற்ற 66 பேர் எம்.பி.பி.எஸ். சேர ஆர்வம்: ரேங்க் பட்டியல் வெளியீடு



தமிழகத்தில் பிளஸ் 2 இறுதித் தேர்வில் மருத்துவ பாடங்களில்

ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 பெற்ற 66 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.


தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டார்.

மாணவிகளே அதிகம்: இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 20,769 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 7,478 பேர் மாணவர்கள்; 13,291 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விகிதம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர வந்த 20,769 விண்ணப்பங்களில், 646 நிராகரிக்கப்பட்டது போக ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,123 ஆகும். இவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 8,198 பேர். அதாவது, ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் 20,123-ல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் விகிதம் சுமார் 40 சதவீதமாகும். இதனால்தான் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 197.75 என அதிகமாக உள்ளது.

இலக்குடன் படித்துள்ள 34 மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ எடுத்துள்ள 66 மாணவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்ததில், 34 மாணவர்கள் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய 4 பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

66-ல் 10 மாணவர்களுக்கு முன்னுரிமை: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் 66 மாணவ-மாணவியர் 200-க்கு 200 பெற்றிருந்தாலும், ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) அடிப்படையில் ராசிபுரம், நாமக்கல், சென்னை, சின்ன சேலம், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்த 10 மாணவர்களின் பெயரை வரிசைப்படுத்தி மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு தொடங்கும் தினத்தன்று (ஜூன் 30) இந்த 10 மாணவர்களுக்கு மட்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் எம்.பி.பி.எஸ். சேர்க்கை கடிதத்தை அளிப்பார்.

முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ள மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் விவரம்:--1. க.சிவரஞ்சனி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ராசிபுரம்; 2. எல்.எஸ்.தக்ஷினி, கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, பொதுபட்டி, நாமக்கல்; 3. ஸ்ருதி கணேஷ், டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை; 4. மோ.சுரேஷ் பால்ராஜ், ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கீழ்க்கட்டளை, சென்னை; 5. ஆ.ஹரிநிவாஸ், ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி; 6. ம.ஜே.துனஷீபா சௌந்தர்யா, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை; 7. பூ.அகிலா, ஆதர்ஷ் வித்யாலய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர்; 8. இரா.மணிகண்டன், ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி; 9. ச.சிவசக்திவேல், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்; 10. ஜெ.அருண்குமார், ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி. இவர்களில் 2 பேர் அனைத்துப் பிரிவை (ஓ.சி.) சேர்ந்தவர்கள்; 7 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்; ஒரு மாணவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

கள்ளக்குறிச்சி பள்ளி சாதனை: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சின்னசேலத்தைச் சேர்ந்த மாணவர் ஆ.ஹரிநிவாஸ் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 5-வது இடத்திலும், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் இரா.மணிகண்டன் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 8-வது இடத்திலும், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.அருண்குமார் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 10-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ஜூன் 30-ம் தேதி கலந்தாய்வு: மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் 5 தினங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment