islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு: இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை


மருத்துவப் படிப்புகளை முறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அதன் ஒரு பகுதியாக மருத்துவ மேற்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகளை படிக்க விரும்பும் மருத்துவ மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே அனுமதிக்கப்படுவர்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TESTS) என்பதே இந்தப் புதிய தேர்வுமுறையாகும்.

இளநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அல்லது மார்ச் 31,2012-ம் ஆண்டு பயிற்சி மருத்துவம் முடிக்கும் மருத்துவ மாணவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள்.

இதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2011-ல் வெளியிடப்படும். விண்ணப்பங்களை செப்டம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் மாத மத்தியில் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு அனுப்பப்படும். 2012 ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். தேர்வு முறை ஆன்லைன் முறையில் நடைபெறும். எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கான வகுப்புகள் 2012 மே-2 அன்று தொடங்குகிறது.

5 ஆண்டுகள் நரம்பு அறுவைச் சிகிச்சை மற்றும் நரம்பியல் சிறப்பு பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்புவர்கள், முதுநிலை அளவிலான இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

தேர்வுக்கான கேள்விகள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும். 180 கேள்விகள் கேட்கப்படும். இந்தப் படிப்புகள் ஆகஸ்ட் 2012 ல் தொடங்கும்.

சிறப்பு பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு 2012 ஜூன் மாதம் மத்தியில் நடைபெறும். இதற்கான அறிவிக்கை பிப்ரவரி 2012 ல் வெளியிடப்படும். ஏப்ரல் இறுதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

அனுமதிச்சீட்டு மே மாத மத்தியில் அனுப்பப்படும். இத்தேர்வில் 150 முதல் 180 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வும் ஆன்லைனில் நடத்தப்படும்.

தேர்வு முறையிலான மாற்றங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இந்திய மருத்துவ பட்டப் படிப்பிற்கான அங்கீகாரத் தேர்வு

என்ற ஒன்றையும் இந்திய மருத்துவக் கவுன்சில் முதன்முறையாக நடத்த முடிவு செய்துள்ளது.

இது 2013 ல் நடைபெறும். அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பு முடித்து இந்தியாவில் மருத்துவம் செய்ய நினைப்பவர்கள் இந்த அங்கீகாரத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இத்தேர்வும் ஆன்லைனில் நடைபெறும். இந்தத் தேர்வு 2013 ஏப்ரலில் நடைபெறும்.

மேற்கண்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கடந்த வருடம் மாற்றியமைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டவை.

"விஷன் 2015" என்ற தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் இந்த சீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்து சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
dinamani

No comments:

Post a Comment