ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இயக்கத்தின் சார்பில் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனது கட்சியினரை நம்பவைக்க 3-4 ஆண்டுகள் ஆனதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் சுனில் ஜோஷியின் கொலைவழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்காததற்கு பாஜகவின் மத்தியப் பிரதேச அரசுக்கு திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதத்தின் திறவுகோல் சுனில் ஜோஷியின் கொலையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்காவிட்டால் உண்மை ஒருபோதும் வெளிச்சத்துக்கு வராது என திக்விஜய் சிங் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தானை இணைக்கும் ரயிலான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி 2007-ல் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008-ம் ஆண்டு தில்லி போலீசின் பாட்லா என்கவுன்ட்டரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆடிஃப் அமீன் மற்றும் முகமது சஜீத் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து திக்விஜய் சிங் சந்தேகங்களை எழுப்பினார்.
நான் அந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு என்கவுன்ட்டரில் 5 குண்டுகளை ஒருவரின் தலையில் நாம் சுட முடியுமா? அது என்கவுன்ட்டர் அல்ல. இதுதொடர்பாக பிரதமரிடம் முறையிட்டேன். விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
பாட்லா என்கவுன்ட்டரில் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்படும் நபர்கள் உள்ள உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் நகருக்கு நான் சென்றபோது, ஆர்எஸ்எஸ், உலமா கவுன்சில் என இருதரப்பைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment