குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட், 2000ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் என்று அவரது கார் டிரைவர் கூறியுள்ளார்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1,200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம்," என்றார். நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்ஜீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை என்று கோத்ரா வன்முறைச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் குஜராத் டிஜிபியாக இருந்த சக்கரவர்த்தி கூறியிருந்தார்.
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற இவர் இப்போது மும்பையில் வசிக்கிறார். அவர் கூறுகையில், சஞ்சீவ் பட் இளநிலை போலீஸ் அதிகாரிதான். அப்போதைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதை நான் சிறப்பு விசாரணைக் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன். இனி இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது சிறப்பு விசாரணைக் குழுவும் உச்ச நீதிமன்றமும்தான் என்றார் சக்ரவர்த்தி.
ஆனால், நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள சஞ்ஜீவ் பட் சென்றிருந்தார் என்று அவரது டிரைவர் தாராசந்த் யாதவ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், எங்களுடைய காரில் இருந்து சஞ்ஜீவ் பட் இறங்கி, டிஜிபியின் காரிலோ, கூடுதல் டிஜிபியின் காரிலோ ஏறி அமர்ந்தார். கே.டி. பண்ட் அங்கு ஆவணங்களுடன் நின்று கொண்டிருந்தார். சஞ்ஜீவ் பட் அவரை நோக்கி கைகளை அசைத்து எதுவோ கூறினார். அவர் கூறியது எனக்குப் புரியவில்லை. எனவே நான் பண்டிடம் நாம் எங்கு போக வேண்டும் என்று கேட்டேன். அந்த காரை தொடர்ந்து செல்லுமாறு பண்ட் கூறினார் என சஞ்ஜீவ் பட்டின் டிரைவர் தாராசந்த் யாதவ் குறிப்பிட்டார்.
எங்களுடைய கார் காலியாக இருந்தது. அதற்கு முன்னால் 4 அல்லது 5 கார்கள் சென்றன. நான் அந்த கார்களை தொடர்ந்து சென்றேன். அவைகள் முதல்வரின் இல்லத்துக்கு சென்றன. அப்போது காலை 10.30 அல்லது 10.45 மணி இருக்கும். 25 முதல் 30 நிமிடங்கள் வரை சஞ்ஜீவ் பட் அங்கு இருந்தார் என யாதவ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment