islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

ஒருவரையொருவர் விஞ்சும் விதத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் தற்காலம் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity), நீரிழிவு(சர்க்கரை நோய்) ஆகியவற்றுக்கு குழந்தைகள் எளிய இலக்காகிறார்கள்.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு முதல் தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் பிரிக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அதிரடி உணவு ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவதும் அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா?

நமது இந்தியத் திருநாட்டிலும் இந்த அவசர உணவுகளால் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகளின் மூலம் அறிய முடிகிறது

மும்பையில் வசிக்கும் அந்த இல்லத்தரசியின் பெயர் சுஜாதா. இரு பிள்ளைகளுக்குத் தாயான அவருக்கு மருத்துவர்கள் ஓர் அதிர்ச்சி செய்தியினைச் சொன்னார்கள். அவருடைய இரு பிள்ளைகளுக்கும் (Type 2) இரண்டாம் ரக நீரிழிவு முற்றி வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி. “நமக்கெல்லாம் இந்த வெளிநாட்டுக்கார நோய்கள் வராது என்றல்லவா நினைத்திருந்தேன்” என்கிறார் இந்தத் தாய்.

சத்தான உணவுகள் பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்று ஒருபக்கம் துயருறும் இந்தியாவில்தான் அதிஉணவு, உடல்பருமன் போன்ற பிரச்னைகளும் வளர்ந்து வருகின்றன என்பது கசப்பான முரண்பாடு.

“உடற்பயிற்சி, பாரம்பரியமான கள விளையாட்டுகள் யாவும் குறைந்துபோய், மாறிவரும் நாகரீகத்துக்கேற்ப, தொலைக்காட்சி, கணினியில் விளையாடி, கடைத்தெருவில் சுற்றி ஓடி, கடைசியில் ஜங்க்ஃபுட் எனப்படும் அவசர உணவுகளை அள்ளிக் கொறித்துவிட்டு உறங்கச் செல்கிறார்கள் இன்றைய சிறுவர்கள்” என்று வருத்தப்படுகிறார் டாக்டர் பவுலா கோயல். மும்பையின் ஃபெய்த் கிளினிக் மருத்துவர் இவர்.

இந்த அவசர உணவுகளால் நீரிழிவு நோயும் எளிதாகத் தாக்குகிறதாம். உலகளவில் மக்கள்தொகையில் 1.2 பில்லியன் என்றிருந்து சைனாவை முந்தாவிட்டாலும் கூட, அவர்களுள் 51 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகள் என்ற புள்ளிவிவரத்தின் மூலம் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.

இப்படியே போனால், இன்னும் இருபதே வருடங்களில் இந்த நோயால் தாக்கப்படுபவர்களின் தொகை 150 சத வளர்ச்சியைப் பெறும் என்பதில் தான் இன்னும் திகைப்பு.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், நாலாயிரம் குழந்தைகளிடம் 15 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஐந்திலிருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட நகரக் குழந்தைகளில் 23 சதமானம் பேருக்கு அதிக உடல் எடை உள்ளதாம். அதனால் உடல் பரும வியாதிக்கு எளிதில் ஆளாகும் சாத்தியதை உண்டாம்.

ஆக, ஆபத்தைத் தவிர்க்க, அவசர உணவை அறவே தவிர்ப்போம் என்பதே அறிய வேண்டிய செய்தி.
inneram

No comments:

Post a Comment