இரண்டாம் தலைமுறை செல்லிட தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை திங்களன்று தாக்கல் செய்துள்ள முதலாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் வேறு நான்கு பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த ஊழல் விசாரணையில் பெயர் அடிபட்டிருந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்திருக்கவில்லை.
தில்லியில் இவ்வழக்கை விசாரித்து வருகின்ற விசேட நீதிபதி ஓ.பி.சைனியின் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழி தவிர கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத் குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முதல்வர் ஷாகித் உஸ்மான் பால்வாவின் சகோதரரான ஆஸிஃப் பல்வா, குஸெகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குநரான ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் முரானி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஒழிப்பு சட்டம் பிரிவு எண் 7 மற்றும் 11ன் கீழ் கனிமொழியின் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊழல் வழியாக வந்த செல்வத்தை ஏற்றுக்கொண்டது தொடர்பான சட்டப் பிரிவுகள் இவை.
கனிமொழி, ஷரத் குமார், முரானி ஆகியோரை சி.பி.ஐ. இன்னும் கைது செய்திருக்கவில்லை.
இவர்கள் வரும் மே 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றக் காவலில் இருந்துவருகின்ற ஆஸிஃப் பல்வாவும் ராஜீவ் அகர்வாலும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஊழல் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி தொகை வேறு நிறுவனங்கள் வழியாகக் கைமாறியுள்ளது என்று விசாரணைகள் காட்டுவதாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment