islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு: யுனிசெஃப் தகவல்


இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் "யுனிசெஃப்' மற்றும் "மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டி' ஆகிய அமைப்புகள் இணைந்து எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கை கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடத்தின. கருத்தரங்கில் பேசியவர்கள் "தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு வாரியத்தின்' ஆய்வில் 70,000 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வந்ததைக் குறிப்பிட்டுப் பேசினர். மேலும் அந்த ஆய்வில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரிடமிருந்தே இந்த நோய் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கில் பேசிய இந்தியாவுக்கான யுனிசெஃப் அமைப்பின் தலைவர் இவோன் காமரோனி தெரிவித்ததாவது:

யுனிசெஃப் அமைப்பு எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு உதவும். குறிப்பாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவதைத் தடுக்க உதவும். வருடத்துக்கு 21,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெறுகின்றனர். இந்நோயைத் தடுக்கத் தேவையான மருந்துகள், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், கண்காணிப்பை முறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகளுக்கு இந்நோய் வருவதற்கான காரணம், தாயிடமிருந்து தொற்றுதல், இரத்தம் செலுத்தும்போது தொற்றுதல், நோய்க்கிருமி பாதிப்புள்ள தாய் கர்ப்ப காலத்தில் உரிய தடுப்பு முறைகளை கடைபிடிக்காதது ஆகியவையாகும். இந்நோய் பற்றிய கள ஆய்வின் மூலம், சமூகப் பொருளாதார அடிப்படையில் பாதிப்படைந்தவர்களுக்கான உதவிகள், முந்தைய நடவடிக்கைகளில் மேம்படுத்த வேண்டியவை மற்றும் உரிய மருத்துவ வசதிகளைத் தருதல் ஆகியவற்றில் செய்ய வேண்டிய முன்னேற்றம் பற்றிய புதிய பார்வை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

யுனிசெஃப் அமைப்பு மேற்கு வங்கத்தில் "எச்ஐவி/எய்ட்ஸ் நோயுள்ளவர்களுக்கான வங்காள அமைப்பு' என்ற அமைப்புடன் இணைந்து, எய்ட்ஸ் நோய் பாதிப்படைந்த 995 குடும்பங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் எய்ட்ஸ் பாதித்தவர்களில் பெரும்பாலோனோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலோனோர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, கிழக்கு மிதுனபுரி, ஜல்பைகுரி, டார்ஜிலிங், 24 தெற்கு பர்கானா மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
dinamani

No comments:

Post a Comment