islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

காப்பகங்களால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்

                                       
பல குடும்பங்களில் ஒருவர் சம்பாதிப்பது போதவில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிளிகளுக்கு இறக்கை முளைச்சு, கூட்டுக் குடும்பத்தை விட்டு ஏற்கனவே பறந்து விட்டதால் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இல்லை.


இதற்கு வழியாக குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததுமே காப்பகங்களில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். நேரடியாக ஆரம்பப் பள்ளியில் 5 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த கலாசாரம் எப்போதோ மலையேறிவிட்டது.
நாலு குழந்தைகளோட பழகணும் என்று காரணம் சொல்லி 2 ஆண்டு முன்னதாகவே கே.ஜி பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இப்போது அதையும் தாண்டி முன்னேறி விட்டார்கள் பெற்றோர்.

தங்களை பொறுப்புள்ள பெற்றோராக கருதிக் கொண்டும், காட்டிக் கொண்டும் தவறாமல் 2 வயதில் பிளே ஸ்கூலில் போட்டுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மனநல நிபுணர்கள்.

இதுதொடர்பாக லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆராய்ச்சியாளரும் மனநல நிபுணருமான டாக்டர் அரிக் சிக்மன் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. "டே கேர்" காப்பகங்களில் விடப்படும் குழந்தைகள், தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் என 200 குழந்தைகள் தொடர்ந்து 6 வாரம் கண்காணிக்கப்பட்டனர்.

இதில் அவர்களின் மன உளைச்சலுக்கு காரணமான கார்டிசால் என்ற சுரப்பியில் அதிக வித்தியாசம் இருந்தது கண்டறியப்பட்டது. பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு இந்த சுரப்பியில் பாதிப்பு இருந்தது.

இதுபற்றி டாக்டர் அரிக் சிக்மன் கூறியதாவது: 2, 3 வயது குழந்தைகளை காப்பகங்களில் விடுவதும் பிளே ஸ்கூலுக்கு அனுப்புவதும் அவர்களது எதிர்காலத்துக்கு உதவும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. அது உண்மையில்லை என்பதை ஆய்வு நிரூபித்துள்ளது.

அப்பா, அம்மா மற்றும் உறவினர்களின் அறிமுகத்தில் மட்டுமே வளரும் குழந்தைகள் திடீரென புதுமுகங்களிடம் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால் வயதுக்கு மீறி அதிகம் சிந்திக்கின்றனர். இது அவர்களை பெரிதும் பாதிக்கிறது. இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவர்களை எதிர்காலத்தில் நோயாளிகளாக்கி விடும் அபாயமும் இருக்கிறது. முதலில் சளி, இருமல் என்று தொடங்கும் பிரச்னை நாளடைவில் இதய பாதிப்பு வரைகூட போகலாம்.
கார்டிசால் பாதிப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் பல்வேறு நோய்தொற்றுகளால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

உண்மையிலேயே பிள்ளைகளின் எதிர்கால நன்மையை கருதுபவர்கள் முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பது, காப்பகங்களில் விடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பயாலஜிஸ்ட் ஜர்னல் இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment