islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு

                                           
மத்திய அரசு கொண்டு வரவுள்ள மத கலவர தடுப்பு மசோதாவுக்கு 10 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மசோதா மீதான மாற்று கருத்துகளை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.


டெல்லியில், தேசிய ஒருமைபாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார். மத்திய அரசு புதிதாக கொண்டு வரவுள்ள மத கலவர தடுப்பு மசோதா பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தமிழகம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ‘மத கலவர தடுப்பு மசோதா, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடையே உள்ள பிரிவினையை தடுப்பதற்கு பதிலாக, அதை ஊக்குவிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதை தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது’ என்றார்.

ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில், ‘இந்த மசோதா மாநிலங்களின் சுயாட்சியை பறிப்பதாக உள்ளது. மசோதாவில் சில பிரிவுகள் மிகவும் ஆட்சேபகரமாக உள்ளது’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உரையை அம்மாநில அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி வாசித்தார். அதில், மதகலவர தடுப்பு மசோதாவில், ‘பெரும்பான்மையினரே கலவரங்களுக்கு பொறுப்பு’ என்று சொல்லும் வகையில் சில பிரிவுகள் உள்ளன. மசோதா பற்றி மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. பஞ்சாப் முதல்வர் பாதல் உரையில், இந்த மசோதாவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல், மற்ற மாநில முதல்வர்களும், கூட்டாட்சி முறைக்கு மசோதா முரணாக உள்ளதாக குறிப்பிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். உ.பி. முதல்வர் மாயாவதியின் உரையில், மசோதா தங்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் கருத்து சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி பேசுகையில், மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் அரசும் எதிர்ப்பதாக தெரிவித்தார். பல்வேறு கட்சி தலைவர்களும் மசோதா மீது ஆட்சேபங்களை தெரிவித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: மத கலவர தடுப்பு மசோதாவினால், மாநிலங்களின் சுயாட்சி பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்தனர். கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு கிடையாது. எனவே கூட்டத்தில் தெரிவிக்கப் பட்ட மாற்று கருத்துகளை பரிசீலித்து மசோதா நிறைவேற்றப்படும். மத கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் விரைவாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

No comments:

Post a Comment