islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மூடநம்பிக்கைகளைச் செய்திகளாக்கி முந்தித் தரும் மலர்கள்!



நாளிதழ்களில் அன்றாடச் செய்திகளினிடையே சில சுவாரஸ்யத் துணுக்குகளும் இடம்பெறுவதுண்டு.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (03-07-2011) அன்று வெளியான தினமலர் நாளிதழில், "823 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலையில் விநோதம்" என்ற தலைப்பில் வெளியான ஒரு துணுக்கில் "2011 ஜூலை மாதம் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப்போகிறது. காரணம் இதுபோன்ற அனுபவம் 823 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைப்பதே. அதாவது ஒரே மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை, ஐந்து சனிக்கிழமை, ஐந்து ஞாயிற்றுக்கிழமை என்று ஒரே மாதத்தில் மூன்று நாட்கள் ஐந்து தடவை வருவதுதான்" என்றொரு துணுக்கு காணப்பட்டிருந்தது.



தினமலர் போன்ற பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுவதில் பொறுப்பில்லாமல் செயல்படுவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். துணுக்குச் செய்தியிலுமா இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியிடுவது? தினமலர் பத்திரிக்கைக்கு எடிட்டர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் இதேபோன்று ஒரே மாதத்தில் ஐந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் அநேகமாக எல்லா ஆண்டுகளிலும் குறைந்தது ஒருமுறையாவது வருகிறது.

இனி, ஒரே மாதத்தில் ஐந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் வருவது "ஜூலை" மாதத்தில் என்றால் அதுவும் 1988, 1994, 2005 ஆகிய வருடங்களிலும் வந்துள்ளது. அதேபோல் 2022, 2033 மற்றும் 2039 ஆகிய வருடங்களிலும் வரும். இதை ஐந்தாம் வகுப்பு மாணவன்கூட கணினி உதவியால் கணித்துவிட முடியும் என்பதுதான் வேடிக்கை.

மலர் என்ற பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ? தினமலரைப் போன்று அதே நாளில் வெளியான மாலைமலரிலும், "இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டுள்ளது. 823 ஆண்டுக்கு ஒருமுறை தான் இது போன்று 5 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவது நிகழும் என்று ஜோதிடர்களும், எண்கணித ஜோதிடர்களும் தெரிவிக்கின்றனர்." என்றும் அத்துணுக்கில் கூறப்பட்டிருந்தது.




மேலும், "கணித ரீதியாக காலெண்டரில் இப்படி வருவது அரிதானது என்றாலும், ஜோதிடத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்று எண் கணித ஜோதிடரான சஞ்சய் ஜுமானி தெரிவித்துள்ளார்." என்றும் கூறப்பட்டிருந்தது.

சோதிடர்களும் எண்கணித சோதிடர்களும் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி அப்படியே அதனை வெளியிட்டுவிடுவதா? முன்னர்தான் கணினி இல்லை. காலண்டர்களைப் புரட்டிக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுதான் கணினி வந்துவிட்டதே! சோதிடர்கள் சொல்வது சரியா தவறா என்பதை நொடிப் பொழுதில் நாம் பார்த்துவிடலாம்.

மேலும், இந்த வருடம் மற்ற மாதங்களைவிட அதிகளவில் பணத்தை ஈட்டமுடியும் என்றும் தெரிவித்துவிட்டு இறுதியாக எது எப்படி இருப்பினும் இந்த மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகியவை ஐந்து தடவை வருவதால் ஜாலியாக என்ஜாய் பண்ணுவோமே! என்று வேறு தினமலர் தெரிவித்துள்ளது! அதாவது விடுமுறை நாட்களில் வீட்டில் தூங்குவதுதான் தினமலருக்கு என்ஜாய் போலும்! தினமலரின் செய்தியைப் பார்த்துவிட்டு, சேட்டிலைட் சானல்கள் தங்கள் பங்குக்கு விநோத நாட்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று எதையும் விளம்பரம் செய்யாமலிருக்க வேண்டும்!

சோதிட சிகாமணிகள் சொன்னது சரிதானா என்பதையும் இந்த மூடநம்பிக்கை வியாபாரிகள் செய்தது சரிதானா என்பதையும் அறிய நாம் 823 ஆண்டுகள் வரை காத்திருக்கத் தேவை இல்லை. நாம் இதனை அறிய செலவழித்தது இரண்டே நிமிடங்கள்தான்.படத்தைக் கவனியுங்கள்.




மேலும், உலகம் முழுவதற்கும் ஒரே காலண்டர் மட்டுமே இருப்பதுபோல் தினமலர், மாலைமலர் நினைத்துக் கொண்டுள்ளனர். உலகின் பல நாடுகளைத் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்ததால் ஆங்கிலேயரின் காலண்டர் பிரபலமாக உள்ளது. தமிழருக்குத் தமிழ் மாதங்களும், அரபு நாட்டில் ஹிஜிரா முறையிலான மாதங்களும் உள்ளன. இவையன்றி சீனா, எகிப்து, பாரசீகம் ஆகியவை தனித்தனி நாட்காட்டியையும் பின்பற்றுகின்றன என்பதெல்லாம் தெரியுமோ என்னவோ?

இனிமேல், "மூடநம்பிக்கைச் செய்திகளை முந்தித்தருவது தினமலர்" என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

ஊடகங்களில் வெளிவருவது உண்மையா பொய்யா என்று மக்கள் ஆராயத் தொடங்கிவிட்டார்கள் என்பதை மக்களின் மூடநம்பிக்கையை முதலீடாக வைத்து காசு பார்க்கும் இத்தகைய ஊடகங்கள் புரிந்து கொண்டு, இனிமேலாவது சோதிட மாயையின் பின்னால் சென்று தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற வைக்காமல் தம்மைத் திருத்திக் கொள்ளட்டும்.

அதிரைக்காரன்

No comments:

Post a Comment