islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஸல்வாஜுதூம் என்ற கொலைக்காரப் படை
மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் சட்டீஷ்கர் அரசு உருவாக்கிய ஸல்வாஜுதூம் என்ற ராணுவ படையை வெகு விரைவில் நிராயுதபாணியாக்கி, கலைத்துவிட வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகவும் வரவேற்க தக்கதுமாகும்.
வரலாற்றாசிரியரும், கட்டுரையாளருமான ராமச்சந்திர குஹா, பிரபல மருத்துவர் நந்தினி சுந்தர், இ.எ.எஸ்.சர்மா ஆகியோர் இணைந்து அளித்த மனுவில் உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தந்தேவாடா மாவட்டத்தில் மோர்பள்ளி, தட்மேட்லா, திம்மபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதல் சம்பவங்களைக் குறித்தும், அக்கிராம மக்களுக்கு உதவுவதற்காக சென்ற சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மற்றும் அவரது குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் சி.பி.ஐ விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
சட்டீஷ்கரை ஆளும் பா.ஜ.க அரசுக்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் ஒரே போல பின்னடைவை ஏற்படுத்தும் தீர்ப்பை நீதிபதிகளான பி.சுதர்சன் ரெட்டி, சுரீந்தர் சிங் நிஜ்ஜார் ஆகியோர் அளித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் ஸல்வாஜுதூமை கலைத்துவிட வேண்டும் என பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வந்தனர். சட்டீஷ்கர் மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் சாதாரண நபர்களான படிப்பறிவு இல்லாத இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களை மாவொயிஸ்டுகள் மீது போர்தொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஸல்வாஜுதூம்.
வெளிப்படையாக கூறினால் பழங்குடி இன மக்களை பரஸ்பரம் மோதவிட்டு இரத்தக்களரியை ஏற்படுத்துவதற்காக அரசே ஏற்பாடு செய்த கொடூரமான தந்திரம். குறிப்பிட்ட சூழலில் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை (எஸ்.பி.ஒ) நியமிக்க 2007 சட்டீஷ்கர் போலீஸ் சட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி ஸல்வாஜுதூமை அரசு உருவாக்கியது.
ஸல்வாஜுதூம் எஸ்.பி.ஒ தான் என சட்டீஷ்கர் அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், சட்டத்தின் முன்னால் சமத்துவம், உயிர் பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14, 21 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக ஸல்வாஜுதூம் செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ’தந்தேவாடா மாவட்டத்திலும் சட்டீஷ்கரின் இதர பிரதேசங்களிலும் கொலைக்களங்களில், உண்மையாக கூறினால் வெடிமருந்துகளாக பழங்குடியின இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள்’ என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம் பெற்றுள்ள கடுமையான வரிகள் எவ்வளவு தூரம் நீதிமன்றம் இப்பிரச்சனையை கவனத்தில் கொண்டுள்ளது என்பது தெரியவரும்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பழங்குடியினரும், கிராமவாசிகளும் நடத்தும் போராட்டங்களை க்ரிமினல்களை உபயோகித்து எதிர்கொள்ளும் முறையை லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவை சார்ந்த சர்வாதிகார நாடுகளில் நாம் கண்டுவருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயக நாடாக தன்னை பிரகடனப்படுத்தும் இந்திய தேசத்தில் பழங்குடியின, கிராமிய விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு வலுவாக உள்ள ஆந்திரா, ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைஸ் சார்ந்த அரசுகள், அரசியல் சட்டத்தை பட்டவர்த்தனமாக மீறி குற்றவாளி கும்பல்களுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்து உதவி வருகின்றன.
கஷ்மீரிலும் அரசிடமிருந்து ஆதாயங்களை பெறும் குழுக்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமித்து தாக்குதல்களை நடத்த அரசு உதவுகிறது. முன்பு பிரிட்டீஷார் கென்யாவிலும், மலேயாவிலும் பின்னர் அமெரிக்கா வியட்நாம், ஈராக்கிலும் நடைமுறைப்படுத்திய தந்திரம். ஈராக்கில் ப்ளாக் வாட்டர் போன்ற தனியார் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு அமெரிக்கா பணத்தை இறைத்து கொலை களத்திற்கு அனுப்பியது போலவே இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஸல்வாஜுதூம் போன்ற குழுக்களுக்கு பணத்தை அளித்து சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்க அனுப்புகின்றனர்.
கிராமவாசிகளையும், பழங்குடியினரையும் பிடித்து சென்று கான்ஸெண்ட்ரேசன் முகாம்களில் அடைத்து கண்காணித்துவரும் இத்தகைய குழுக்கள் பயங்கரமான மனித உரிமை மீறல்களை புரிந்துவருகின்றன. ஸல்வாஜுதூமிற்கு பல இடங்களில் தலைமை வகிப்பது பிரசித்திப்பெற்ற கிரிமினல்கள் ஆவர். கிராமங்களை ஒன்றாக சென்று தாக்கி ஆக்கிரமிப்பதற்கும், வீடுகளை தீக்கிரையாக்குவதற்கும், எதிர்ப்பவர்களை சுட்டுக்கொல்வதற்கும் சட்டீஷ்கர் மாநில பாசிச பா.ஜ.க அரசு முழு ஒத்துழைப்பை அளித்துவருகிறது.
ஸல்வாஜுதூம் என்ற கொலைக்கார கும்பலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தேசபக்தி வேடம் போட்டு அலையும் ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் ஆவர். ஆட்சியாளர்களின் தவறான வளர்ச்சி கொள்கைகள் உருவாக்கிய பிரச்சனைகளை வெறும் ஒரு சட்ட-ஒழுங்கு பிரச்சனையாக காணவியலாது என உச்ச நீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த துவங்கியதன் மூலம் மத்திய அரசு அனைத்தையும் விற்பனைக்கு வைக்கும் சந்தையாக மாறிவிட்டது என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
அத்தகைய கொள்கைகளின் உருவாக்கமான இப்பிரச்சனைகளை ராணுவமோ, போலீஸோ அல்லது இதுபோன்ற கொலைக்கார கும்பல்களோ தீர்க்க முடியாது. ஆகையால் சமூகத்தின் அதிருப்தியை குறைப்பதற்கு அடிப்படையான கொள்கை மாற்றம் தேவை என உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் மக்களின் கோபத்தை அதிகரிக்கவே உதவும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஸல்வாஜுதூம் போன்ற க்ரிமினல் கும்பல்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கிறது. ஜனநாயக சமூகத்திற்கு இந்நடவடிக்கைகள் அவமானத்தையே பெற்றுத்தரும்.
மனித உரிமை மீறல்கள், அரச பயங்கரவாதம், அமெரிக்கா போன்ற சர்வாதிகார நாடுகளின் ஆக்கிரமிப்பு, ராணுவம் மற்றும் போலீசாருக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தை வழங்குதல் ஆகியவற்றில் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பா.ஜ.கவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே திகழ்கின்றன. கஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்தினருக்கு எந்த அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிடலாம் என்ற லைசன்ஸை வழங்கும் சிறப்பு அதிகார சட்ட விவகாரத்தில் இரு கட்சிகளும் ஒத்த கருத்தையே கொண்டுள்ளன.மனித உரிமை மீறல்கள், கருத்து சுதந்திரம், மொத்த வியாபாரி அமெரிக்காவிற்கு ஆதரவு ஆகியவற்றில் இரு கட்சியினரும் ‘பாயீ!பாயீ!’ தான்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களை ஆதரிப்பதிலும் இரு கட்சியினரும் துல்லிய பங்கை வகிக்கின்றனர். சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடும் இயக்கங்களையும், மனித உரிமை அமைப்புகளையும், ஆர்வலர்களையும் வேட்டையாடுவதில் இரு கட்சிகளுமே போட்டிப்போடுகின்றன. சுருக்கமாக, ஆளும் தரப்பும், எதிர் தரப்பு அடங்கிய அரசு இயந்திரம் எதிர்ப்புக்குரல்களை அடக்கி ஒடுக்கி நாட்டை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை குறித்து செய்திகள் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் கூட வேட்டையாடப்படுவது வழக்கமாகிவிட்டது. இத்தகையதொரு பயங்கரமான சூழலில்தான் ஸல்வாஜுதூமை கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
தாங்கள் விரும்பும் நியாயத்தை சட்டத்திற்கு புறம்பான வழியின் மூலம் நடைமுறைப்படுத்துவது தான் போலீஸ்/அரச பயங்கரவாதத்தின் அடிப்படை. உதாரணமாக மாவோயிஸ்டுகள் தேசத்திற்கு விரோதிகள் என தீர்மானித்து அரசும், அரசு ஆதரவு ஊடகங்களும் பிரச்சாரத்தை துவக்குகின்றனர். அவ்வாறெனில் ஆபத்தான இத்தகைய தீவிரவாதிகளை அழித்தொழிக்க வேண்டும் என்ற பொதுசமூகத்தின் மனோநிலையை ஊடகங்கள் உருவாக்கி கொடுக்கின்றன.
நாட்டின் பொது நன்மைக்காக மாவோயிஸ்டுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு அழித்தொழிப்பது நாட்டின் நன்மைக்காகத்தான் என பொது சமூகத்தின் காதில் பூ சுற்றுகின்றனர். ஆனால் அதில் நாட்டின் சட்டங்கள் தூக்கி வீசப்படுகின்றன. அதே வேளையில் எவரேனும், சட்டமீறல்களைக் குறித்தோ, அத்துமீறல்களைக் குறித்தோ வாய் திறந்தால் போதும் அவர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாகவோ, லஷ்கர் ஆதரவாளர்களாகவோ சித்தரித்து சிறையில் அடைப்பது அரசுகளின் வாடிக்கை.
மாவோயிஸ்ட்/லஷ்கர் முத்திரைக்குத்தப்பட்ட நபருக்கு பின்னர் தப்ப வழியில்லை என்பது தான் உண்மை. மனித உரிமை மற்றும் சட்டத்தை மீறும் இந்த ஆபத்தான சூழலை சரியாக புரிந்துக்கொள்ள இடதுசாரிகளால் கூட இயலவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் ஆட்சி புரிந்த சில மாநிலங்களில் கூட மனித உரிமை மீறல்களும், சட்ட உரிமை மீறல்களும் நடந்தேறியுள்ளன. ஸல்வாஜுதூம் போன்ற கொலைக்கார கும்பல்களுக்கு எதிராக குரல் எழுப்ப இடதுசாரிகளுக்கு இயலாததற்கு காரணம் இதுதான்.
முக்கிய எதிர்கட்சிகளின் எவ்வித ஆதரவும் இல்லாமலேயே தனிப்பட்ட சில நபர்களும், குழுக்களும், குடியுரிமை அமைப்புகளும் இத்தகையதொரு ஆபத்தான கட்டங்களில் துணிச்சலாக இப்பிரச்சனைகளை கையாளுகின்றனர் என்பது தான் உண்மை. ஸல்வாஜுதூமிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று மனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லர். கல்வியாளர்களான சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆவர். ஆனால், முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மனித உரிமை மீறல்களையும், அரச பயங்கரவாதத்தையும் எதிர்க்கும் மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.செய்யது அலீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment