islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹதீஸ் நூற்களின் வகைகள்



ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன.

ஸுனன்

தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும்.

புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஸஹிஹ்

புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் அதை ஸுனன் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஸஹீஹ் என்றே குறிப்பிடுகின்றனர். இது போல் இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களும் இவ்வாறே ஸஹீஹ் என்று குறிப்பிடப்படுகின்றன.

முஸ்னத்

அபூபக்ர் அறிவித்த ஹதீஸ்கள், உமர் அறிவித்த ஹதீஸ்கள் என்று ஒவ்வொரு நபித்தோழரும் அறிவித்த ஹதீஸ்களை ஒரு இடத்தில் திரட்டி ஹதீஸ்களைத் தொகுத்தவர்களும் இருந்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூற்கள் முஸ்னத் எனப்படும்.

முஸ்னத் எனப்படும் நூலில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ள ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபீ அவானா, முஸ்னத் தயாலிஸீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னத் அபீஹனீபா, முஸ்னத் ரபீவு, முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் ஹுமைதி, முஸ்னத் ஷிஹாப், முஸ்னத் அப்து பின், முஸ்னத்இப்னுல் ஜஃது, முஸ்னத் ஹாரிஸ் போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஃஜம்

ஒருவர் பத்து ஆசிரியர்களிடம் ஹதிஸ்களைக் கேட்டிருப்பார். எந்தெந்த ஆசிரியர்களிடம் கேட்டாரோ அதையே தலைப்பாக்கியும் நூற்கள் தொகுக்கப்பட்டன. அவை முஃஜம் எனப்படும். இப்ராஹீம் என்ற ஆசிரியர் எனக்கு அறிவித்தவை -

உஸ்மான் என்ற ஆசிரியர் அறிவித்தவை என்பது போல இது வகைப்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய நூற்களில் ஒரு ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
தப்ரானியின் சகீர், தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் கபீர் ஆகிய நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஜாமிவு

மார்க்கச் சட்டதிட்டம், கொள்ளை விளக்கம், வரலாறு போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்டதாக தொகுக்கப்பட்டு பாடத்தலைப்புகளில் அமைக்கப்பட்டவை ஜாமிவு எனப்படும். ஸுனன் என்ற வகையிலான நூற்களில் தொழுகை, நோன்பு போன்ற சட்டதிட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும். ஜாமிவு என்ற வகையில் அதைவிட கூடுதலான பல விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.

முஸன்னப்

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களுடன் நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் ஆகியோரின் சொல், செயல்களையும் சேர்த்து தொகுக்கப்பட்டவை முஸன்னப் எனக் கூறப்படுகிறது.
முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், முஸன்னப் இப்னு அபீஷைபா போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஸ்தத்ரக்

குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் ஒருவர் தொகுத்த நூலில் எல்லா ஹதீஸ்களும் இடம் பெற்றிருக்க முடியாது. அந்த விதிகளின் கீழ் அமைந்த எத்தனையோ ஹதீஸ்கள் விடப்பட்டும் போய்விடும். இவற்றை இன்னொருவர் தொகுத்தால் அது முஸ்தத்ரக் எனப்படும்.

உதாரணமாக புகாரியும் முஸ்லிமும் சரியான ஹதீஸ்கள் எவை என்பதற்கு சில நிபந்தனைகள் வகுத்துள்ளனர். அந்த நிபந்தனைகளின் படி அமைந்த பல ஹதீஸ்களை அவர்கள் விட்டுள்ளதால் அவற்றை ஹாகிம் தொகுத்தார். புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைப்படி சரியான ஹதீஸ்களாக இருக்கத் தகுதியானவை என்று பல ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார். இப்படி தொகுக்கப்பட்டவை முஸ்தத்ரக் எனப்படும்.

(ஆனால் ஹாகிம் இந்தப் பணியை நிறைவாகச் செய்யவில்லை பலவீனமான பல ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு இது புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின் படி ஸஹீஹ் எனும் தரத்திலமைந்துள்ளது எனக் கூறுவார். ஆனால் உண்மையில் இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கும் என்பது தனி விஷயம்).

மவ்ளூஆத்

நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும்.
இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment