islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மத்ஹபையாவது பின்பற்றுவார்களா?

 
அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும்.

உங்கள் மத்ஹப் நூற்களிலேயே பித்அத், தடுக்கப்பட வேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத் தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல! மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தராவீஹ் 20 ரக்அத்கள் என்பது பலவீனமான செய்தியாகும்
தராவீஹ் இருபது ரக்அத்கள் தான் தொழவேண்டும், எட்டு ரக்அத்களுக்கு ஆதாரங்கள் இல்லை, இதைச் செய்பவர்கள் புதுமைவாதிகள், குழப்பவாதிகள் என்று கூறி வரும் மத்ஹபுவாதிகள் பின்வரும் செய்தியைப் படித்து, தெளிவு பெறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் வித்ருத் தொழுகை உட்பட பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. இது புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு அபீ ஷைபா, தப்ரானி, பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள, நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும். (ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியா தஹ்தாவி, பாகம்: 1 பக்கம்: 269)

தொழுகையில் நெஞ்சில் கைகட்டுதல்
தொழுகையில் நெஞ்சில் கை கட்டக் கூடாது, தொப்புளுக்குக் கீழ் அல்லது வயிற்றில் தான் கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள், மத்ஹப் நூல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கட்டும்.

இமாம் ஷாஃபி அவர்களிடத்தில் (தொழுகையில்) இரு கைகளை நெஞ்சின் மீது வைப்பது தான் சிறப்புக்குரியதாகும். நூல்: ஹிதாயாவின் விரிவுரை நூலான அல்இனாயா, பாகம்: 1, பக்கம்: 468. (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தொழக் கூடியவன் நெஞ்சில் கைவைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நெஞ்சில் கைகளை வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்று அறிவிக்கப்படும் ஹதீஸ் இதற்குரிய ஆதாரமாகும். ஏனென்றால் நெஞ்சின் மீது கை வைத்தல் என்பது (தொப்புளுக்குக் கீழ்) மறைவுறுப்பின் மீது கை வைப்பதை விட இது பணிவிற்கு மிகவும் நெருக்கமானதாகும். நூல்: கன்ஸுத்தகாயிக் என்ற நூலின் விரிவுரை நூலான தப்யீனுல் ஹகாயிக் பாகம்: 1 பக்கம்: 107 (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

வாயில் மொழியும் நிய்யத் இல்லை
தொழும் போதும், நோன்பு நோற்கும் போதும் வாயால் சில வார்த்தைகளை கூறி நிய்யத் செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தி வரும் மத்ஹப்வாதிகள் இச்செய்தியை படிக்கட்டும்.

பொதுவாக அனைத்து வணக்கங்களிலும் நிய்யத்தை வாயால் மொழிதல் என்பது பித்அத்தான காரியமாகும். ஹனபி மத்ஹப் நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 346

"நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் நான் இவ்வாறு தொழகிறேன் என்று (நிய்யத்தை வாயால்) கூறுபவர்களாக இருந்தார்கள் என ஸஹீஹான, லயீஃபான எந்த ஹதீஸ்கள் வழியிலும் உறுதியாகவில்லை. மேலும் ஸஹாபாக்களிலும் தாபியீன்களிலும் ஒருவர் கூட இவ்வாறு செய்தார் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை'' என்று சில சிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவித்துள்ளதாக ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹில்யா என்ற நூலில் "நான்கு இமாம்களிடமிருந்தும் இவ்வாறு எடுத்துரைக்கப்படவில்லை என்றும், நபியவர்கள் தொழுகைக்காக நின்றால் அல்லாஹு அக்பர் என்று தான் கூறுவார்கள்'' என்ற விவரம் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது. ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியது இப்னி ஆபிதீன், பாகம்: 1 பக்கம்: 416
--p.j.--

No comments:

Post a Comment