islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

25 ஆயிரம் "சீட்' இந்த ஆண்டில் காலியாக இருக்கும்:கடந்த ஆண்டை விட பி.இ., சேர்க்கை குறையும்


பொறியியல் சேர்க்கையில், இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு 8,000மாக இருந்த காலியிடங்கள், இந்த ஆண்டு மும்மடங்காக அதிகரிக்கும்.


கடந்த ஆண்டை விட பி.இ., "சீட்' சேர்க்கை வெகுவாக குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் துவங்கியதில் இருந்து இதுவரை, 15க்கும் மேற்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால், கவுன்சிலிங் பிரிவின் கீழ் வரும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

விண்ணப்பித்த அனைவருக்குமே, "சீட்' கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும், கவுன்சிலிங் துவங்கியதில் இருந்தே, "ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.கடந்த 16ம் தேதி நிலவரப்படி, 4,554 மாணவர்கள், "ஆப்சென்ட்'. அன்றைய தேதி வரை 26 ஆயிரத்து 122 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 21 ஆயிரத்து 488 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு, "சீட்' பெற்றுள்ளனர். கவுன்சிலிங்கிற்கு வந்து, 79 மாணவர்கள் எந்தவித பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் திரும்பி சென்றுள்ளனர்.

"ஆப்சென்ட்' சதவீதம் 17.43 ஆக உள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்க இருப்பதால், "ஆப்சென்ட்' மாணவர்களின் சதவீதம் மேலும் அதிகரிக்கும்.இந்த காரணங்களால், இந்த கல்வியாண்டில் 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என, அண்ணா பல்கலை கணக்கிட்டுள்ளது. கடந்த ஆண்டில், 8,000மாக இருந்த காலியிடங்கள், இந்த ஆண்டு மும்மடங்காக அதிகரிக்க உள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, பி.இ., சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

இது குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:தமிழகத்தில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில், பி.இ., படிப்புகளுக்காக, ஒரு லட்சத்து 42 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., மேலும் சில தனியார் கல்லூரிகளுக்கு விரைவில் அனுமதி வழங்க உள்ளது. இக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை சேர்த்தால், பி.இ., படிப்புகளுக்கான இடங்கள் ஒன்றரை லட்சமாக உயரும்.

பி.இ., கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 8,000 இடங்கள், இந்த ஆண்டு 25 ஆயிரத்தை தாண்டும்.தமிழகத்தில், 23 பொறியியல் கல்லூரிகளில் பி.ஆர்க்., பட்டப்படிப்பு உள்ளது. இவற்றில் உள்ள 1,000 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 1,010 பேர் விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும், "சீட்' கிடைக்க வாய்ப்புள்ளது. பிளஸ் 2 உடனடித் தேர்வர்களுக்கு, பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தனியாக நடத்தப்படும், என்றார்.

தரமில்லாத கல்லூரிகளில் சேர்ந்து படித்தால், பணம் வீணாவதுடன், கால விரயம் ஏற்படும் என்று, மாணவர்கள் கருதுகின்றனர். இதனால், எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய படிப்புகளில் சேர மாணவர்கள் முடிவெடுத்திருப்பது தான், பொறியியல் கவுன்சிலிங்கில், "ஆப்சென்ட்' அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment