சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் தொடர்குண்டு வெடிப்புகள் நடக்கும்பொழுது சம்ஜோதா, மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் தேடப்படும் குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு நிபுணர்கள் இன்னமும் போலீசாரை ஏமாற்றி தலைமறைவாகவே இருந்துவருகின்றனர்.
மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்ற ராம்ஜி ஆகியோரின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தபோதிலும் போலீசாரை ஏமாற்றிவருகின்றனர். வெடிக்குண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவர்கள்தாம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டுள்ளார்கள் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏ மற்றும் ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் கண்டறிந்துள்ளன.
கொலைச்செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியின் உத்தரவின்பெயரில் குண்டுகள் நிர்மாணித்ததும், அதனை பல்வேறு பகுதிகளில் வைத்ததும் இவர்கள்தாம் என குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கிய முக்கிய ஹிந்துத்துவ தீவிரவாதியான சுவாமி அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சார்ந்த ராம்சந்திர கல்சங்கரா 2008 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகவே உள்ளார்.
மலேகான், மொடாஸா உள்பட பல்வேறு இடங்களில் டிசம்பர் 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் மாதம் வரை நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களில் ஒருவர் 40 வயதான கல்சங்கரா என கண்டறியப்பட்டுள்ளது. இந்தூரில் ஷாஜாபூரைச்சார்ந்த சந்தீப் டாங்கேயின் தலைக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்சங்கராவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள்தாம் டாங்கேயின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் புரோகிதிடமிருந்தும் இதர நபர்களிடமிருந்தும் வெடிப்பொருட்களை வாங்கி குண்டுகளை தயாரித்து பல்வேறு இடங்களில் வைத்தது கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும்தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் பஞ்ச்குலா என்.ஐ.ஏ நீதிமன்றமும் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
ஆனால் சி.பி.ஐயும், பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தீவிரவாத எதிர்ப்புப்படையினரும், தேசிய புலனாய்வு ஏஜன்சியும் ஒன்றிணைந்து முயன்றபொழுதும் இவர்களை இதுவரை கைதுச் செய்ய இயலவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் உயர்தலைவர்களின் உதவியுடன் இவர்கள் குஜராத் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment