islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ளதங்க,வைர நகைகள், நவரத்தினங்கள்
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி கோயிலிலுள்ள பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் உள்ளிட்டவை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சாமி கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்று.மிகவும் புராதனமான இக்கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் சிறப்புடன் விளங்கியது.
1750-ம் ஆண்டு அப்போதைய அரசர், மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்யம்,செல்வம் அனைத்தையும் தானமாக இக்கோயிலுக்கு எழுதி வைத்தார். இதனால், பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது.
நம்மாழ்வாரின் பாடல்கள் மூலம் இக்கோயில் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்துள்ளதாக தெரியவருகிறது. சேரமான் பெருமான் இதை கட்டி, திருவிழாக்களுக்கும், பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. 1686-ல் தீப்பிடித்து கோயில் சேதம் அடைந்துவிட்டது. திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மரின் முயற்சியால் மரத்தாலான மூலவர் அகற்றப்பட்டு, 12,000 சாளக்கிராமத்தினால் "கடுசர்க்கரா' என்ற அஷ்டபந்தனக்கலவையால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜ வம்சனத்தினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயிலில் பாதாள அறைகள் உள்ளதாகவும், அவற்றில் ஏராளமான விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கில், 2 கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து பாதாள அறைகளில் உள்ள பொருள்களை கணக்கிட உத்தரவிட்டது.
இக்குழு அனந்த பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6 பாதாள அறைகளை திறந்து சோதனையிட முடிவு செய்தது. இதையடுத்து, 3 பாதாள அறைகளில் உள்ள பொருள்களை அக்குழு கணக்கெடுத்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்த கணக்கெடுப்பில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், விலை மதிப்பற்ற அரிய ரத்தினக் கற்கள், பாத்திரங்கள், அரியவேலைப்பாடுடன் கூடிய நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட குடைகள் மற்றும் கலைநுணுக்கம் மிகுந்த பொருட்கள் பாதாள அறைகளில் இருந்தன. எஞ்சிய 3 அறைகளில் உள்ள பொருட்களை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment