islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கம்ப்யூட்டர் படிப்புகளை கண்ணை மூடி தேர்வு செய்யலாம் : வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்



"கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப படிப்புக்கு பிரமாதமான எதிர்காலம் உள்ளதால், மாணவர்கள் இப்படிப்புகளை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்' என்று, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.



இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்ட, "தினமலர்' நாளிதழ் சார்பில், "உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது. எஸ்.வி.எஸ்.இன்ஜி., கல்லூரியுடன் இணைந்து, வடகோவை கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் தெளிவான விளக்கம் அளித்தனர்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: "கட்-ஆப்' மதிப்பெண் 198க்கு மேல் பெறும் அனைத்து மாணவர்களும் "டாப்' கல்லூரிகளில் சேர்வதையே விரும்புவர். படிப்பை தேர்வு செய்வதற்கு முன், கோர் இன்ஜினியரிங் படிப்புடன் ஐ.டி., படிப்பை ஒப்பிடக் கூடாது. கோர் இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்பவர்கள், "கேட்' தேர்வுக்கும் தயார் ஆவது நல்லது.
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னுரிமை கிடைக்கும். எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜி., படிப்பை முடித்து விட்டு ஐ.டி., படிக்க நினைப்பது முட்டாள்தனம். மெக்கானிக்கல் இன்ஜி., துறையை பொறுத்தவரையில், அத்துறையில் டிப்ளமோ படித்தவர்களையே நிறுவனங்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு இருந்த மவுசு, இன்னும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. எதிர்கால வேலை வாய்ப்புக்கேற்ற படிப்புகளை தேர்வு செய்வதே சிறந்தது. கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி., படிப்புகளை முடிப்பவர்களுக்கு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. அதனால், ஐ.டி., படிப்பை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்.

"மொபைல் கம்ப்யூட்டிங்', "கிளவுட் கம்ப்யூட்டிங்' பணிகளுக்கு மூன்று லட்சம் பேர் தேவை என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2009ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போல் மீண்டும் வந்தால், இத்துறையில் வேலை கிடைக்காது என நினைப்பது தவறு. ஒரு சுனாமியோ, பூகம்பமோ வந்தால் கூட பொருளாதாரத்தை புரட்டிப் போடலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கும் ஐ.டி., படிப்புக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லூரியை, படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அக்கல்லூரியில் நடந்த வளாக நேர்காணல்களில் தேர்வு பெற்ற மாணவர் எண்ணிக்கை விவரம், பங்கேற்ற நிறுவனங்கள் குறித்து விசாரித்துக் கொள்வது நல்லது.

இந்த ஆண்டு இன்ஜி., இடங்கள் அதிகமாக உள்ளதால் கட்-ஆப் மதிப்பெண் 1-1.15 உயரவுள்ளது. ஒரே கட்-ஆப் மதிப்பெண்ணில் 450-500 பேர் களத்தில் உள்ளதால் போட்டி அதிகம். கட்-ஆப் மதிப்பெண் 198க்கு மேல் பெற்றவர்கள், கல்லூரியை விட படிப்பை தேர்வு செய்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். கட் -ஆப் மதிப்பெண் 195 உள்ளவர்கள் குறைந்தது நான்கு கல்லூரிகளை தேர்வு செய்து கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்பதே நல்லது. "டாப்' கல்லூரிகளில் இரண்டாம் நிலை படிப்புகளை கூட தேர்வு செய்யலாம். தகவல் தொடர்பு துறையில் நாம் இன்று ஒரு நிலையான இடத்தை அடைந்து விட்டோம். அடுத்தபடியாக மின்சாரம் மற்றும் ஆற்றல் துறைக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை பெரிதாக வளர்ச்சி பெறவுள்ளது. ஏரோநாட்டிக்கல் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிதாக இல்லை. இதே படிப்பை ஐ.ஐ.டி.,யில் படித்தால் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில்(டி.ஆர்.டி.ஓ.,) வேலை கிடைக்கலாம். பயோ டெக்னாலஜி துறையிலும் குறைந்த வேலை வாய்ப்புகளே உள்ளன. கணித பாடத்தில் 190 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இயற்பியலில் 600 பேர் சென்டம் பெற்றுள்ளனர். வேதியியலில் ஏராளமானோர் 195க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மூன்று பிரதான பாடங்களிலும் சென்டம் பெற்றவர்கள் 65 பேர்.

இந்த முறை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் கடினமாக உள்ளதால், இன்ஜினியரிங் படிப்பை விட போட்டி அதிகம். ஆகவே பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், ஓராண்டு மட்டும் நன்கு படித்தால், அடுத்த 50 ஆண்டுகள் ஜாலியாக இருக்கலாம். ஓராண்டு ஜாலியாக இருந்தால், அடுத்த 50 ஆண்டுகள் சிரமப்பட வேண்டும் என்பதை உணர்ந்து படிப்பது நல்லது. இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.

பங்கேற்ற அனைவருக்கும் "தினமலர்' சார்பில் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த விளக்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. எஸ்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மோகன்தாஸ், துணைத் தலைவர் ராகவேந்திரன், இன்ஜி., கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

100 சதவீத ஒளிவுமறைவின்றி இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள படிப்பு மற்றும் கல்லூரிகள் குறித்த தெளிவான விவரங்களுடன் வர வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவது நல்லது. இன்ஜி.,கவுன்சிலிங் 100 சதவீதம் ஒளிவு மறைவின்றி நடைபெறும். விரும்பிய இடம் பெற்றுத் தருவதாக கூறி திரிபவர்களை நம்ப வேண்டாம். "கட்-ஆப்' மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே படிப்பு ஒதுக்கப்படும்.
பொதுப் பிரிவினர் 5,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 1,000 ரூபாயும் டிபாசிட் செலுத்த வேண்டும். மொத்த கட்டணத்தில் இருந்து இத்தொகை "அட்ஜஸ்ட்' செய்து கொள்ளப்படும். டிபாசிட் தொகையை வரைவோலை எடுக்க, கவுன்சிலிங் நடைபெறும் வளாகத்திலேயே வங்கி வசதி உள்ளது.

கல்லூரி வாரியாக காலியாக உள்ள படிப்புகள் குறித்த விவரம், கவுன்சிலிங் நடைபெறும் அறைக்கு வெளியே உள்ள பெரிய திரையில் ஒவ்வொரு நிமிடமும் "டிஸ்ப்ளே' செய்யப்படும். கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளே செல்வதற்கு முன், குறைந்தது நான்கு கல்லூரிகளை "சாய்ஸ்' அடிப்படையில் தயாராக வைத்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் கல்லூரி, படிப்பை தேர்வு செய்து விட வேண்டும். ஒருமுறை தேர்வு செய்து விட்டால் மாற்ற முடியாது.

ஒரே பெயரில் பல கல்லூரிகள் உள்ளதால், கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பின்பற்றுவதே நல்லது. நண்பர்கள், பக்கத்து வீட்டார், விளம்பரங்களை நம்பாமல் கல்லூரிகளுக்கே நேரில் சென்று உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர், வேலை வாய்ப்பு விவரங்களை விசாரிக்க வேண்டும். அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை விசாரித்தாலே கல்லூரியின் தரம் விளங்கி விடும்.

அனைத்து படிப்பும் சிறந்த படிப்புதான். ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்படிப்புக்கான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்த பின், அவர்களிடம் நண்பர்களைப் போல் பழகுவது நல்லது. அதிகமாக கண்டித்தால், கல்லூரியில் நடைபெறும் பல விஷயங்கள் பெற்றோருக்கு தெரியாமலே போய் விடும். இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.
dinamalar

No comments:

Post a Comment