islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 7--ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?


பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை.


மசூதிசர்ச் போன்றவற்றின் சொத்துக்கள் கிறித்தவ, முசுலீம் மதத்தினர் வசமே உள்ளது. ஆனால், இந்துக் கோவில்களின் சொத்துக்களை மட்டும் அரசு வைத்திருக்கிறது. கோவிலுக்காக பக்தர்கள் செலுத்தும் வருவாயை அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் செலவழிக்கிறார்கள். வெளிநாட்டுப் பணத்தின் உதவியால் மசூதிகளும், சர்ச்சுகளும் புதிது புதிதாகத் தோன்றும்போது, இந்துக்களின் கோவில்கள் மட்டும் பூசைக்குக்கூட வழியில்லாமல் தவிக்கின்றன. எனவே கோவில் சொத்துக்களை மீண்டும் இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள் அனைத்திற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
- இந்து முன்னணியின் மேடைகளில் இராம.கோபாலன் தவறாமல் முன்வைக்கும் ஒரு முழக்கம்.
ஈரேழு பதினாலு உலகங்களைப் படைத்த கடவுளுக்கு, மனிதன் விளைநிலங்களைப் பட்டா போட்டுத் தருவதும், அதை வைத்து கடவுள் கஞ்சி குடிப்பதும் எத்தகைய வேடிக்கை! பக்தர்கள் சிந்திக்கட்டும். அப்படி கடவுளர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தில் மதப் பாகுபாடு இருப்பது பற்றித்தான் இந்து முன்னணி முறையிடுகிறது.

சொத்துக்ளுக்கு மதங்களில்லை

மதங்களுக்குரிய சொத்துக்களை அந்தந்த மதத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் அளித்திருக்கின்றனர். மசூதிகள், தர்ஹாக்களின் சொத்துக்கள் நவாப்புகள், குறுநில இந்து மன்னர்களால் கொடுக்கப்பட்டன. கிறித்தவ நிறுவனங்களுக்குரிய சொத்துக்கள், இந்து மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தரப்பட்டவை. இந்துக் கோவில்களுக்கு நகையும், நிலமும் இந்து, முசுலீம் மன்னர்களால் அளிக்கப்பட்டன. விளைநிலங்ளில் கணிசமான அளவும், பல ஆயிரக்கணக்கான கிராமங்களின் வருவாயும் – அதாவது கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் – பல்வேறு மன்னர்களால் பெரும் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்து மதவெறியர்களால், இசுலாமிய மத வெறியராகச் சித்தரிக்கப்படும் மொகலாய மன்னரான அவுரங்கசீப், பல இந்துக் கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மானியம் அளித்ததைப் புள்ளி விவரங்களுடன் வரலாறு தெரிவிக்கின்றது.

கோவில் கொள்ளை நிறுத்தப்பட்ட வரலாறு

இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பில் உருவான கோவில் சொத்துக்களை அறங்காவலர் என்ற பெயரில் பார்ப்பன ‘மேல்’ சாதியினர்தான் பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப்படும் கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, 1930களில் நீதிக்கட்சி ஆட்சியின்போது அரசு சார்பிலான இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அப்போதுதான் பல கோவில்களின் வருவாய் எவ்வளவு அதிகமென்பதும், இதுநாள்வரை அவை கொள்ளை போன கதையும் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

அதுவும் தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் மட்டும்தான் அரசு அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டதே ஒழிய, ஏனைய மாநிலங்களில் இன்றளவும் கொள்ளை தொடருகின்றது. இங்கும் கூட அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கூடவே பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் முன்னாள் மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், பார்ப்பன ‘மேல்’ சாதியினர் முந்தையக் கொள்ளையை முடிந்தவரை தொடரத்தான் செய்கின்றனர்.

மேலும் கோவில் சொத்துக்களுக்கு நிகராக சங்கர மடங்கள், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, குன்றக்குடி போன்ற ஆதீனங்களுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இம்மடங்களுக்கு காசி முதல் கன்னியாகுமரி வரை நூற்றுக்கணக்கான கிளை மடங்களும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பல நகரங்களில் கட்டிடங்களும் சொந்தமாக உள்ளன. பார்ப்பன ‘மேல்’சாதியினர் அனுபவித்து வரும் இச்சொத்துக்களை இன்றுவரை அரசு எடுக்கவில்லை என்பது முக்கியம். நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து இம்மடங்கள் மட்டும் விலக்குப் பெற்றுள்ளன. ‘ஊழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற இந்திய விவசாயிகளின் உயிராதாரமான போராட்டத்தை இத்தகைய மத நிறுவன்களுக்கு எதிராகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

மக்கள் பணத்தை வீணடிப்பது யார்?

அரசாங்கம் இந்துக் கோவில்களின் வருவாயை எடுத்துப் பொதுநலத்திட்டங்களுக்குச் செலவழிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; உண்மையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அப்படித்தான் செலவழிக்கப்பட வேண்டும் என்கிறோம். மாறாக தேர்த்திருவிழா, மகாமகம், கும்பமேளா, குடமுழுக்கு போன்ற விழாக்களுக்கும் காசி, பத்ரிநாத்,அமர்நாத் போன்ற யாத்திரைகளுக்கும், இப்போது இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்துக்கும் அரசாங்கம்தான் பொதுப்பணத்தை அள்ளி வீசுகிறது. பாதுகாப்பு, சுகாதாரம், விபத்துக்களுக்கான நட்ட ஈடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுவதைத் தடை செய்வதுதான் சரியானது.

பக்தியில் பிழைப்புவாதம்

பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. திருப்பதி, சபரிமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை. இறைவழிப்பாட்டிலும் பிழைப்புவாதம் வந்து விட்டதற்கு அரசாங்கமோ, சிறுபான்மை மக்களோ என்ன செய்ய முடியும்? மேலும் கோவில் நிலங்கள், கடைகளுக்குரிய குத்தகைவாடகை பாக்கியை வைத்திருப்பவர்கள் பட்டை போட்ட இந்து பக்தர்கள்தான், நாத்திகம் பேசுபவர்கள் அல்ல என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இன்னும் சமீபகாலமாக அறநிலையத்துறையின் பூசாரிகள் – கோவில் ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்கவும், ஊதிய உயர்வுக்காகவும் போராடி வருகிறார்கள்.  வேலை நிறுத்தம் செய்து இறைவனையே பட்டினி போடவும் துணிந்து விட்டார்கள் அர்ச்சகர்கள். அறநிலையத்துறையை ஒழித்து, தனியார் இந்துக்களிடம்தான் கோவில்களை ஒப்படைக்க வேண்டும என்று அவர்களிடம் இந்து முன்னணி தெரிவிக்கட்டுமே! கோவிலையே இடித்து விடுவார்கள்.

மசூதி, சர்ச் இவற்றின் சொத்து மட்டும் அம்மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருக்கலாமா என்ற கேள்விக்கு ‘கூடாது‘ என்பதுதான் நமது பதில். அங்கும் ஒரு பிரிவு மேட்டுக்குடியினர்தான் சொத்துக்களைச் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர். எனவே எம்மதமாக இருந்தாலும், அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்கள் உடைமை ஆக்க வேண்டும்; இறைவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்ய வேண்டும் என்கிறோம்.

மதக் கம்பெனிகள் கோரும் வரிவிலக்கு

பிரேமானந்தா, சாயிபாபா, மேல் மருவத்தூர், ஆனந்த மார்க்கம், அமிர்தானந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ரமண மகரிஷி, யோகிராம் சூரத் குமார், ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்த கேந்திரா, சங்கர மடங்கள், சைவ ஆதீனங்கள் இன்னபிற இந்துமதக் கம்பெனிகள் அனைத்திற்கும் வருமான வரிவிலக்கு வேண்டுமென இந்து முன்னணி கோருகிறது. ஏற்கனவே இக்கம்பெனிகளுக்கு முறையான வரியோ, சோதனையோ கிடையாது; விலக்கு மட்டும் உண்டு. ஹவாலா, அரசியல் தரகு, கல்வி – மருத்துவ வியாபாரம், கற்பழிப்புக்கள், கொலைகள் போன்ற தொழில்களைச் க்ஷேமமாக நடத்திவரும் இவர்கள் அனைவருக்கும் வரிபோடுமளவுக்கு வருமானமோ, சொத்துக்களோ இருக்கக்கூடாது என்கிறோம்.

தமது வாழ்க்கைத் துன்பத்திலிருந்து சுரண்டுபவர்களை ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ளும் மக்கள், மத நிறுவனங்கள் கொள்ளையிடுவதை மட்டும் நேரடியாக உணருவதில்லை. அன்றைய புராதன மதங்கள் அனைத்தும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களைப் போன்று வேர் விட்டிருப்பதும் அதனால்தான். ஆக மத நிறுவனங்கள், மடங்கள், அறக்கட்டளைகள், ஆசிரமங்கள் அனைத்தும் கொள்ளையிடுவதற்கான முகமூடிகள்தான்.
நில உச்சவரம்பு, வருமானவரி, சொத்துவரி, கேளிக்கை வரி ஆகியவை மதமல்லாத நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து ஏமாற்றுவதற்காக பலர் சொத்துக்களை கடவுள் பெயரில் மாற்றி கணக்கு காட்டாமல் அனுபவித்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட வரிகள் எதுவும் மத நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உறுதியாக அறிவித்தால் என்ன நடக்கும்?

ரிலையன்ஸ் முருகன், டாடா கணபதி, ஃபோர்டு துர்க்கை, டி.வி.எஸ். பார்த்தசாரதி, ஸ்பிக் அனுமான் என்று எல்லாக் கம்பெனிகளும் கடவுள் பெயரில் அறக்கட்டளை உருவாக்கி ஜாம் ஜாம் என்று கொள்ளையடிப்பார்கள்.
- தொடரும்--vinavu

No comments:

Post a Comment