islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இன்னொரு ரயில் பட்ஜெட்...







இது சராசரி மனிதனுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டுகிற அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்குக் கட்டணமோ உயர்த்தப்படவில்லை என்றாலும்கூட, இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

எதிர்க்கட்சிகள் சொல்வதைப்போல, மேற்கு வங்கத் தேர்தலில் தனக்குச் சாதகமான அரசியல் வாய்ப்பாக இந்தப் பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பது உண்மைதான் என்றாலும், ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள வருவாய் அளவைப் பார்க்கும் எவருக்குமே தற்போதைக்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை என்பது புரியும்.

2010-11-ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான ரயில்வே மொத்த வருவாய் ரூ. 59,804 கோடி. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் அளவு ரூ.55,797 கோடி மட்டுமே. அதாவது, நடப்பாண்டில் பயணிகள் எண்ணிக்கை 9.41 விழுக்காடு அதிகரித்ததாலும், சரக்குப் போக்குவரத்து 5.83 விழுக்காடு அதிகரித்ததாலும் இந்த வருவாய் கூடியுள்ளது. இந்த நிலையில், ரயில்வே கட்டணத்தை- குறிப்பாக பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை.

இந்தப் பட்ஜெட்டில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். பிரிட்ஜ் பேக்டரி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் டனல் அன்டு பிரிட்ஜ் என்ஜினியரிங் பிரிவுகளை ஜம்முவில் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால், இத்தொழில் சார்ந்த துணைத் தொழிற்கூடங்கள் அமையவும் அதனால் பல ஆயிரம் காஷ்மீர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வழி ஏற்படுத்தியுள்ளார். அப்பகுதி மக்களுக்கு இந்த இரு திட்டங்களும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரச்னைகளின் நிலைக்களனாக இருக்கும் நந்திகிராம பகுதியில் ரயில் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று மம்தா அறிவித்துள்ளார். தனக்கு அரசியல் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை தந்த இடம் நந்திகிராமம் என்பதால் ஏற்பட்ட கரிசனமாகவும் இருக்கலாம். தனக்காக மட்டுமே செய்துகொண்டதாக காங்கிரஸ் கட்சி எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, ரே பரேலியில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலை இன்னும் 3 மாதங்களில் தனது முதல் ரயில்பெட்டியை வெளிக்கொணரும் என்றும் அறிவிப்பு செய்துவிட்டார்.

முதியோருக்கு அளிக்கப்படும் கட்டணச் சலுகை 30 விழுக்காட்டினை 40 விழுக்காடாக உயர்த்தியிருப்பது முதியோருக்கு மேலும் பயன்தரும். இருப்பினும், பெண்களுக்கு மட்டும் முதியோர் வயதை 60-லிருந்து 58ஆகக் குறைத்த மம்தா பானர்ஜி, ஆண்களுக்குக் குறைக்க மறந்திருப்பது (மறுத்திருப்பது?) ஏனோ?

பூமியின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்று அறியும் (ஜிபிஎஸ்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பனிமூட்டப் பாதுகாப்பு முறையை இந்த ஆண்டு ரயில்வே அமல்படுத்தியிருப்பதையும் அதனால் ரயில்களின் காலதாமதம் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார் மமதா. சென்ற ஆண்டு வடஇந்தியா முழுவதிலும் கடும் குளிர் நிலவியதும், பனிமூட்டத்தால் ரயில்சேவை பாதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று. ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு இத்தகைய தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருப்பதற்காகப் பாராட்டலாம்.

இந்தப் பட்ஜெட்டில் சுகி கிரஹ திட்டம் ஒன்றை அமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது, ரயில்பாதையோரமாகக் குடிசைபோட்டு குடியிருக்கும் ஏழை மக்களுக்கு வீடுகட்டித் தரும் திட்டம். இதற்கான செலவு, வீட்டின் அளவு குறித்து எந்த விவரங்களும் இல்லை என்றாலும்கூட, 10,000 வீடுகள் முன்னோட்டமாகக் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் மும்பை உள்ளிட்ட வட இந்திய ரயில்நிலையங்களுடன், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி ரயில்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடைபெறும் என்று தெரியாமல், இந்தத் திட்டம் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டுக்கு என்ற அளவில் ஓமலூர்- மேட்டூர் அணைக்குப் பாதை இரட்டிப்புத் திட்டம், சேலம்- காரைக்கால் (பெரம்பலூர், மயிலாடுதுறை வழியாக) ரயில்பாதைக்கு ஆய்வுசெய்தல், மதுரை- சென்னை துரந்தோ ரயில் சேவை, தருமபுரி-பெங்களூர் பயணிகள் ரயில் ஆகியவை தவிர, சொல்லிக்கொள்ளும்படியாக ஏதுமில்லை.

ரயில்வேயில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டங்களுக்கு இதுவரை 85 மனுக்கள் வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்வே உருவாக்கியுள்ள "வணிகம் சார்ந்த திட்டங்கள் இவை' என்றும் "நிதிஆதாரப் பங்குகளைக் கூட்டு நிறுவனத்துக்கு ரயில்வே வழங்கும்' என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் தனியார்-ரயில்வே கூட்டுத்திட்டத்தின் முழு விவரத்தையும் மக்களவை உறுப்பினர்கள் கேட்டுப் பெற வேண்டும்.

அமைச்சர் பட்டியலிட்டுள்ள 8 திட்டங்களில், "தனியார் சரக்கு முனையம்', "சிறப்பு சரக்கு ரயில் இயக்குவோர்', "விவசாயி ரயில்' (காய்கறி போன்றவற்றை குளிர்பதன சரக்குப்பெட்டிகளில் கொண்டுவருதல்) போன்றவையும் இடம்பெற்றுள்ளன. சரக்குப் போக்குவரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் நிலையில், சரக்குப் போக்குவரத்தில் தனியாரை நுழைப்பது ரயில்வே துறைக்கு நல்லதல்ல. 2010-11-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை சரக்குப் போக்குவரத்தில் ரூ. 39,696 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைக் காட்டிலும் ரூ. 2000 கோடி அதிகம்.

அமைச்சர் குறிப்பிடும் இந்தத் திட்டத்தின் முழுவிவரம் என்ன என்பதை இப்போதே கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், ஸ்பெக்ட்ரம்போல, இஸ்ரோ-தேவாஸ் ஒப்பந்தம்போல பிறகு தெரியவந்து கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை!

source;dinamani

No comments:

Post a Comment