வக்ப் சொத்துக்கள் என்பது, அந்தக்காலத்தில் பள்ளிவாசலுக்கு நிரந்தர வருவாயை பெற்றுத்தர வேண்டும், அதன் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு அந்த வக்ப் வருமானம் மூலம் பல தரப்பப்பட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நம்முடைய நாட்டை ஆண்ட முஸ்லிம் மன்னர்களும், செல்வம் படைத்த தன வந்தர்களும், பல ஏக்கர் கணக்கில் நிலங்களை அந்தந்த பகுதி பள்ளிவாசல்களுக்கு அன்பளிப்பாக வக்ப் செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால், இன்றைக்கு பள்ளிவாசலை நிர்வகிக்கக்கூடியவர்கள், மக்கள் நம்மை இந்த நிர்வாகப்பொறுப்பை நாம் சிறந்த முறையில் பள்ளிவாசலையும் அதன் வக்ப் சொத்துக்களையும் முறையாக நிர்வகாம் செய்வோம் என்றுதான் நம்மை முத்தவல்லியாக, தலைவராக, செயலாளராக தேர்வு செய்திருக்கின்றனர். இந்த சொத்துக்கள் யாவும் நாம் பொறுப்பில் இருக்கும் வரை நம்மிடம் அமானிதமான சொத்துக்களாக இவை இருக்கும் இதில் நாம் முறை கேடான முறையில் நடந்து கொண்டால் நாளை மறுமையில் பொறுப்பாளர்கள் என்ற முறையில் இறைவன் நம்மிடம் விசாரணை செய்யும் போது இதன் காரணமாக மிகவும் கடுமையான தண்டணைக்கு ஆளாக நேரிடும் என்ற இறையச்சம் சிறிதும் இல்லாதவர்களாக வக்ப் சொத்துக்களை தங்கள் பெயரில் அல்லது தங்களது பினாமி பெயரில் தங்களது உறவினர் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது, வக்ப் சொத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டால் அதையும் மிக குறைந்த வாடகைக்கு ஏலம் விட்டு தங்கள் பெயரில் அல்லது உறவினர்கள் பெயரில் எடுத்துக்கொண்டு பிறகு வேறு நபர்களுக்கு அதிக வாடகைக்கு உள் வாடகை என்ற பெயரில் வாடகைக்கு விட்டு தாங்களே வாடகையை வாங்கிக்கொள்வது அந்த சிறிதளவு வாடகையைக்கூட பள்ளிவாசலுக்கு கொடுக்காமல் பல ஆயிரக்கணக்கில் வாடகைபாக்கி வைத்திருப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருப்பதை காணும்போது மிகவும் வேதனையாக இருப்பது உண்மை.
இதே போல் பள்ளிவாசல் நிலங்களை குத்தகை என்ற பெயரில் சிறிதளவு தொகையை கொடுத்துவிட்டு நிலத்தை காலி செய்யாமல் காலங்காலமாக தங்களது சொந்த நிலம் போல் அனுபவித்து வரும் மற்றுமத சகோதரர்களும் அதற்கு துணை போகும் நிர்வாகிகளும் மனம் திருந்தி வக்ப் நிலங்களை திரும்ப ஒப்படைக்க முன் வர வேண்டும்.
இதே இந்த நிர்வாகிகளின் சொந்த நிலமாகவோ, கடையாகவோ இருந்தால் இது போல் குறைந்த வாடகைக்கோ, குறைந்த குத்தகைக்கோ விடுவார்களா? என்பதையும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அதற்காக கணக்கில்லாமல் செலவு செய்து தம்முடைய நிலத்தை மீட்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு ''சிவன் சொத்து குல நாசம்'' என்ற நம்பிக்கை. அதாவது கடவுளான சிவனுக்கு உண்டான சொத்தை தவறான முறையில் அனுபவித்தால் தன்னுடைய குலமே நாசமாகி விடும் என்று நம்புகிறார்கள். இதனால், சிவன் கோவில் திருநீறைக்கூட பயந்துதான் தொடுவார்கள். கோயில் சொத்தை எந்த வகையிலும் அபகரிக்கக் கூடாது என்பது பொது நோக்கம். இதில் பெருமாள் சிறந்த நகைகள், ஆடை ஆபரணங்கள் அணிபவர். சிவன், புலித்தோல் ஆடையுடன் சாதாரணமாகக் காட்சியளிப்பவர். மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவது தவறு. அதிலும் இல்லாதவர்கள் ஏழைகளின் பொருட்களுக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய தவறு என்பதை உணர்த்துவதற்காகவே, சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லிவைத்தார்கள்.இது அவர்களின் நம்பிக்கை.
அது போல் நாம் வைத்திருக்கக்கூடிய வக்ப் சொத்தும் கடவுளுக்கு சொந்தமானது அதை நாம் தவறான முறையில் அனுபவித்தால் நம்முடைய குலமும் நாசமாகி விடும் என்ற அடிப்படையில் திரும்ப ஒப்படைக்க முன் வர வேண்டும்.
இஸ்லாத்தை ஏற்றிருக்கக்கூடிய பள்ளிவாசலின் நிர்வாகிகள் நாளை மறுமையில் இறைவன் ஒவ்வொறுவரின் பொறுப்புக்கள் பற்றியும் விசாரிப்பான் அந்நாளில் நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்ச உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டபோது கிருஸ்துவர்களுக்காக ஆங்காங்கே நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளனர் அந்த நிலங்களை முறையாக பயன் படுத்தி ஆங்கங்கே பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் முறையாக நிறுவிய காரணத்தினால் இன்றைக்கு இந்த சமுதாயம் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதிற்கு சாட்சி அவர்கள் இட ஒதுக்கீட்டை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்ததே!!
இதேபோல் முறையாக வக்ப் நிலத்தையும் பயன் படுத்தியிருந்தால் தமிழகமெங்கும் நம்முடைய சமுதாயத்திற்கென்று பல பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும், மருத்துவக்கல்லூரிகளும் கிடைத்திருக்கும் நாம் ஆட்சியாளர்களிடம் நமக்காக தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய அவல நிலையும் இருந்திருக்காது.
இந்த அடிப்படையில் சேலம் ஜாமியா மஸ்ஜிதிற்காக முகலாய மன்னர் திப்பு சுல்தான் அவர்கள் ஏராளமான நிலங்களை வக்ப் செய்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த நிலங்கலெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது.
அந்த நிலங்களைப்பற்றிய விபரங்கள்.
சேலம் ஜாமியா மஸ்ஜித் அதனை சுற்றியுள்ள பகுதிகள் திப்பு சுல்தான் கொடுத்தது.
ஒரிஜினல் டைட்டில் டீட் நெ. 587 / 7-10-1862 பள்ளிவாசலை சுற்றியுள்ள நிலங்களின் மொத்த பரப்பளவு 4 ஏக்கர் 24 சென்ட் இதில் பள்ளிவாசல் உள்பட TS. No.909 வரிசை கடைகள் 55 உள்ளது. இந்த 55 கடைகளின் மொத்த வாடகை பாக்கி 31-01-2011 வரை ரூ. 6,22,390/- எனத்தெரிகிறது. திப்புசுல்தான் வணிக வளாகம் இதில் 33 கடைகள் உள்ளது. 31-01-2011 வரை ரூ. 2,28,950/- வாடகை பாக்கி உள்ளது என தெரிகிறது. பள்ளிவாசலின் பின் புறம் ஏறக்குறைய 210 ஓட்டு வீடுகள் உள்ளது. இவற்றிற்கும் வீட்டு வாடகை முறையாக வசூலிக்கப்படுவதில்லை எனத்தெரிகிறது.
அரிசிப்பாளையம் முல்லாக்காடு திப்பு சுல்தான் கொடுத்தது.
ஒரிஜினல் டைட்டில் டீட் நெ.633 / 3-10-1862 இந்த நிலத்தின் மொத்தப்பரப்பளவு 6 ஏக்கர் 92 சென்ட் என பைலாகி (file) உள்ளது. ஆனால் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட் 6 ஏக்கர் எனவும், இதில் 328 வில்லை வீடுகள் உள்ளது எனவும் கூறுகிறது. இதற்கு போகும் வழி 4 ரோடு to சத்திரம் ரோடு, நகர கூட்டுறவு வங்கி எதிரில் விஜய் சித்த வைத்தியசாலையின் ஒட்டிய கடைகளில் அதன் பின்புற வரிசையில் உள்ள வில்லை வீடுகள், தமிழ் நாடு வே பிரிட்ஜ், அம்மன் மெடிக்கல் குறுக்கு ரோடு வரை சதுர வடிவ நிலம். பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் வாழ்கின்றனர். ஏறக்குறைய 500 வீடுகளுக்கும் குறையாமல் இருக்கும். வாடகை முறையாக வசூலிப்பது இல்லை.
பொன்னம்மாப்பேட்டை
திப்பு நகர்(அண்ணாநகர்) திப்புசுல்தான் கொடுத்த ஒரிஜினல் டைட்டில் டீட் நெ.397 / 3-10-1862. இந்த நிலத்தின் மொத்த பரப்பளவு 19 ஏக்கர் 11 சென்ட். ரயில்வே நிர்வாகம் 1950-ல் தனது தேவைக்காக 9 ஏக்கர் 34 சென்ட் நிலத்தை ரூ. 10,562/- கொடுத்து நிலத்தை பெற்றுக்கொண்டது. மீதியுள்ள நிலம் 9 ஏக்கர் 77 சென்ட் ரயில்வே பாதையின் இரு புறத்திலும் உள்ளது.
திப்பு நகர்(அண்ணாநகர்) போகும் வழி பொன்னம்மாப்பேட்டை ரயில் வே கேட்டை தாண்டி சிறிது தொலைவில் ஒருபகுதி நிலம் திப்பு நகர்.
மஹபூப் சுபஹானி தர்கா அதனை சுற்றியுள்ள கடைகள், ஓட்டு வீடுகள் ஏறக்குறைய 1000 வரை உள்ளது. முஸ்லிம்கள் முன்பகுதியிலும், முஸ்லிம் அல்லாதவர்கள் பின் பகுதியிலும் வாழ்கின்றனர். பெரும்பாலும் வாடகை வசூலிப்பதே இல்லை எனக்கூறப்படுகிறது.
மற்றொரு பாதி நிலம் பொன்னம்மாப்பேட்டை கேட் to வீராணம் வழியில் ரயில்வே கேட்டிலிருந்து சற்று தொலைவில் வலது புறமுள்ள சரவணா மருத்துவமனையை தாண்டி அண்ணா நகர், பாரதி சிமென்ட், லட்சுமி எலக்ட்ரானிக்ஸ் அதிலிருந்து 4 முதல் 5 தெருக்கள் தாண்டி மருத்துவமனை தாண்டி சதுர வடிவில் நிலம், இதில் ஏறக்குறைய 600 வீடுகள் இருக்கும் இங்கு முஸ்லிம் அல்லாதவர்கள் நல்ல வசதியுடன் வாழ்கின்றனர். இவர்களிடம் சரியாக வாடகை வசூலிப்பது கிடையாது என கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 160 வாடகை குடிசைகள் என்றும், மற்றவை ஆக்கிரமிப்பு என்றும் ஜாமியா மஸ்ஜித் போர்ட் கூறுகிறது.
கன்னங்குறிச்சிM.பாளப்பட்டி, மன்னார்பாளையம்.
ஒரிஜினல் டைட்டில் டீட் நெ. 913 / 7-5-1864. திப்பு சுல்தான் கொடுத்தது.
கன்னங்குறிச்சி மிட்டா பாளப்பட்டி கிராமம் நிலத்தின் அளவு 36 ஏக்கர் 59 சென்ட். ஆனால், ஜாமியா மஸ்ஜித் போர்ட் நிலத்தின் அளவு 34 ஏக்கர் 84 என்று கூறுகிறது.
இந்நிலத்திற்கு போகும் வழி பொன்னம்மாப்பேட்டை கேட் to வீராணம் ரோட்டில் மன்னார்பாளையம் பிரிவு ரோடு அங்கிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் சென்றால் மன்னார்பாளையம் கிராமம். அங்கு வித்யா ப்ரீதம் பள்ளிக்கு அருகே இரண்டு நிலங்கள். மன்னார்பாளையம் to கன்னங்குறிச்சி சாலையில் இரண்டு நிலங்கள் உள்ளன.
இந்த நிலத்தின் குத்தகை விபரம்.
1. கன்னங்குறிச்சி 1 ஏக்கர் 59 சென்ட் ஆண்டு கேட்பு 31-3-2011 முடிய ரூ.230/-
(இரு நூற்றி முப்பது) குத்தகை தாரர் சி.சுப்பிரமணி.
2. மிட்டா பாளப்பட்டி 6 ஏக்கர் 10 சென்ட் ஆண்டு கேட்பு 31-3-2011 முடிய
ரூ 2600/- (இரண்டாயிரத்து அறுநூறு) குத்தகைதாரர் கே.வி.அண்ணாமலை.
3. மிட்டா பாளப்பட்டி 5 ஏக்கர் 30 சென்ட் ஆண்டு கேட்பு 31-3-2011 முடிய
ரூ 1500/- (ஆயிரத்து ஐநூறு) குத்தகைதாரர் எஸ்.பொன்னுசாமி.
4. மன்னார்பாளையம் 21 ஏக்கர் 89 சென்ட் ஆண்டு கேட்பு 31-3-2011 முடிய
ரூ 8010/- (எட்டாயிரத்து பத்து) குத்தகைதாரர் ஆர்.பெரியசாமி.
ஜாமியா மஸ்ஜித் ட்ரஸ்ட் போர்டில் 2009-2010 ஆண்டு அறிக்கையில் நில குத்தகை வரவு ரூ 75,520/- (எழுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி இருபது) எனக்கூறுகிறது.
சின்னதிருப்பதி
(பைலாவில்) குமாரசாமிப்பட்டி கிராமம் ச.நெ.145, 159, 222, நம்பர்கள் கொண்ட நஞ்சை புஞ்ஞை 6 ஏக்கர் 18 சென்ட் என்று உள்ளது.
ஜாமியா மஸ்ஜித் ட்ரஸ்ட் போர்டு 5 ஏக்கர் 19 சென்ட் என்று கூறுகிறது.
போகும் வழி அஸ்தம்பட்டி ரவுண்டாணா to சின்னதிருப்பதி ரோட்டில், சின்னதிருப்பதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி எதிரில் சந்திரா கார்டன் 1 to 4 தெரு அதனை சுற்றியுள்ள சதுர வடிவில் உள்ள நிலத்தில் இருக்கும் பங்களாக்கள் அனைத்தும் வக்பு சொத்து. இந்த நிலம் ஆக்கிரமிப்பு என ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட் கூறுகிறது.
பள்ளபட்டி ஈத்கா, ஈத்கா மைதானம் செல்லும் வழி
லீ பஜார் to 3 ரோடு செல்லும் வழியில் பொன்னி வே பிரிட்ஜ் எதிரே உள்ள சின்ன ரோடு இந்த ரோடும் வக்பு சொத்துதான். ரோட்டின் கடைசியில் ஈத்கா வரும். இந்த நிலத்தின் மொத்த பரப்பளவு 11 ஏக்கர் 56 சென்ட் அனத்தும் ஆக்கிரமிப்புக்கள். வீடுகள், ஜவ்வரிசி குடோன்கள், பருப்பு குடோன்கள், எண்ணை குடோன்கள் ஆகியவைகள் உள்ளன. இதன் விபரத்தை ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட் கொடுப்பதே இல்லை.
நியூ சினிமா தியேட்டர்
திருச்சி மெயின் ரோட்டில் நியூ சினிமா தியேட்டர் அருகில் ஜவுளிகடை பஸ் ஸ்டாப் இரு புறமும் உள்ள நிலங்கள் வக்பு சொத்து. உச்ச நீதி மன்றத்தில் மேல் பாகத்தை வென்றும் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்டால் வேலி கூட அமைக்க முடிய வில்லை. கீழ் பாகத்திற்கு வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலத்திற்குதான் ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட் நிறைய பணம் செலவழித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போது இது வக்பு வாரியத்தின் சொத்து எனத்தெரிகிறது.
அமானி வளையக்காரனூர்
(பைலாவில்) அமானி வளையக்காரனூர் கிராமத்தில் ச.நெ. 62, 63, நஞ்சை புஞ்ஞை நிலங்கள் 17 ஏக்கர் உள்ளதாக இருக்கிறது. இதன் விபரம் தெரியவில்லை.
மரவனேரி
0.4712.5 ச.மீ ஆக்கிரமிப்பு என்று ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட் கூறுகிறது.
இவ்வளவு சொத்துக்கள் உள்ள ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட், வரவு ரூ 16,67,361/- (பதினாறு லட்சத்து அறுபத்திஏழாயிரத்து முன்னூற்றி அறுபத்தி ஒன்று) என்றும், செலவு ரூ 16,00,032/- (பதினாறு லட்சத்து முப்பத்தி இரண்டு) என்றும் 2009-2010 ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.
(குறிப்பு:- இந்த நிலங்களைப்பற்றிய தகவல்கள் ''சேலம் ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்பு குழு'' என்ற பெயரில் சேலத்தைச்சார்ந்த ஒரு சில சகோதரர்கள் தங்கள் பெயர், தொடர்பு எண்கள் உள்பட, இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின்'' மூலம் பெறப்பட்ட தகவல்கள் என குறிப்பிட்டு துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில் இருந்து எடுக்கப்பட்டது).
இனி வரும் காலங்களிலாவது பள்ளிவாசலை நிர்வகிக்கக்கூடியவர்களை தேர்வு செய்யும் போது உண்மையிலேயே இவர்கள் இறையச்சத்துடன் நடந்து கொள்வார்கள் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையுடையவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக சமுதாயத்தை நாங்களே சீர்திருத்தம் செய்பவர்கள், நாங்களும் தவ்ஹீத்வாதிகள்தான் என்று கூறி அரசியலில் புகுந்து வாரியப்பதவி வாங்கி இருந்த கொஞ்ச நஞ்ச வக்ப் நிலங்களையும் தாரைவார்த்துக்கொடுத்த சமுதாய துரோகிகளை இனம் கண்டு பதவிகளுக்கு வராமல் தடுத்தால் இருக்கும் நிலங்களையாவது கப்பாற்றிக்கொள்ளலாம்.
(நாம் நட்பு ரீதியில் ஒருசில கிராம நிர்வாக அலுவலர்களிடம் இந்த நிலங்களைப்பற்றி கேட்ட போது இதில் உள்ள பல ஏக்கர் நிலங்களை விலைக்கு விற்று விட்டதாக தகவல் கூறினர்.)
இழந்த நிலங்களை மீட்க அந்தந்த பகுதிகளில் உள்ள தீரமிக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் இதற்கான கூலியை இறைவன் கண்டிப்பாக இதற்காக பாடுபட்டவர்களுக்கு வழங்குவான்.
அ.அப்துல் வஹாப்,சேலம். செல்: 99423 49566
No comments:
Post a Comment