இளைஞர்கள் மத்தியில் லண்டனில் புதுவித பேஷன் பரவி வருகிறது. முதுகில் ஓட்டை போட்டு தொங்கவிடப்படும் வளையத்தில் ஷூ லேஸ் கட்டுவது போல ரிப்பன் கட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு டாக்டர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் முழுக்க அருவருப்பான, ஆக்ரோஷமான படங்களை பச்சை குத்திக் கொள்வது, ஆங்காங்கே குட்டி குட்டி வளையங்களை குத்திக் கொள்வது, நாக்கில் "ரிங்" போட்டுக் கொள்வது என நவநாகரிக உலகை பதம் பார்க்கும் இளைஞர்களின் கலாச்சார எல்லை விரிந்து கொண்டே போகிறது. பேஷன் உலகில் அதிநவீன கலாசார சீரழிவு கண்டுபிடிப்புகள் பெருகி வருகின்றன.
லண்டன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் அத்தகைய அபரிமிதமான லேட்டஸ்ட் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் போதிய இடைவெளி விட்டு முதுகின் இரண்டு பக்கத்திலும் வளையங்களை குத்திக் கொள்வது.
பின்னர் அந்த வளையங்களில் ஷூ லேஸ் கட்டுவது போல கலர் ரிப்பன்களை குறுக்கே கட்டிக் கொள்வது. இதற்கான பீஸ் - 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஒரு மணி நேரத்துக்கு முதுகில் வலி பின்னியெடுக்கும். அதற்கு பிறகு பேஷன் தூள் கிளப்பும். காதில், மூக்கில் குத்துவது போல் அல்லாமல் இது தற்காலிகமானது தான்.
வளையங்களை எடுத்து விட்டால் ஓரிரு வாரங்களில் அந்த இடத்தில் தோல் மூடி விடுகிறது. சிறியளவில் வடு மட்டும் இருக்கிறது என்கிறார்கள் ஸ்டைல் விரும்பிகள்.
இந்த பேஷனை சிரமேற்கொண்டு தொழிலாக செய்து வரும் லண்டனை சேர்ந்த லாரா ஹன்ட் கூறியதாவது: தொண்டை, இடுப்பு என விரும்பும் இடங்களில் இந்த ரிப்பன் அலங்காரத்தை செய்து கொள்ளலாம். ஊசியால் குத்தி வளையத்தை பொருத்தும் போது வலி இருக்கும். இருந்தாலும் இந்த பேஷனை பலர் விரும்பி செய்து கொள்கிறார்கள். மேற்பகுதி தோலிலேயே குத்துவதால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இருக்காது.
வழக்கம் போல் இந்த ஆபத்தான தோல் பேஷனை எச்சரித்துள்ள டாக்டர்கள்,"ஊசியால் குத்தி உடம்பை புண்ணாக்குவது என்பது எளிதான விடயம் அல்ல. தோலில் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்" என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment