islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மாபெரும் தீர்ப்பு.....? மோடியின் ஆட்சியில் நடந்த கோரமான கொலைகள்..

சர்தார்புரா கூட்டுக் கொலை..!
     2002 பிப்ரவரி திங்கள் 28 ஆம் நாள் குஜராத் மேஹன்ஷா மாவட்டத்தில் மோடியின் நேரடிப் பார்வையின் கீழ் முஸ்லிம்களைத் துருவி, துருவி தேடி கொலை செய்யும் குரூரம் தொடங்கியது.
     அதே மேஹன்ஷா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்தான் சர்தார்புரா. இங்கே முஸ்லிம்கள் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் தான். குறிப்பிட்டுச் சொன்னால், 65 முஸ்லிம் குடும்பங்கள் தாம் வாழ்ந்து கொண்டிருந்தன.
     இந்த 65 குடும்பங்களையும் கொலை செய்வதற்கு தனியானதொரு திட்டத்தை வைத்திருந்தார்கள் சங்கப் பரிவாரத்தினர்.
     இதற்கான திட்டத்தை முன்னமே வகுத்து வைத்திருந்தனர். உண்மையைச் சொன்னால் பல நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டவை அதற்கான சாட்சியங்கள் இதோ.
திட்டமிட்ட கொலைகள்: சாட்சியங்கள்
     jail_pho_3701999 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் வெளிவந்த 'கம்யூனலிசம் கோம்பாட்' என்ற பத்திரிக்கையில் ஒரு இனப்படுகொலைக்கு, குஜராத் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பதை அதன் ஆசிரியர் 'டீஸ்டா செட்டெல்வாட்' எழுதி இருந்தார். அஃது ஒரு கள ஆய்வு.
     குஜராத் - இல் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என அந்தக் கள ஆய்வில், குறிப்பிட்டிருந்தார்.
 இத்தனையுமிருந்தும் மத்திய அரசோ மாநில அரசோ அதைக் கண்டு கொள்ளவில்லை.
     2001 ஆம் ஆண்டு, அதாவது குஜராத் இனப்படுகொலைகள் நடப்பதற்கு சரியாக, ஓராண்டுக்கு முன்னர், தான் 1999 இல் ஏழுதிய கட்டுரையையும் - கள ஆய்வையும் சுட்டிக் காட்டி முஸ்லிம்களை இனப்படு கொலை செய்ய நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் என்னுடைய எச்சரிக்கையை மாநில அரசோ, மத்திய அரசோ கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். இனியாவது என்னுடைய எச்சரிக்கையை, ஏற்றுக் கொண்டு நடக்கப் போகின்ற இனப்படுகொலையை தடுங்கள் என உரக்க முழக்க மிட்டார்.
     ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
     இந்தப் பின்னனியில் தான் 'சர்தார்புரா' படுகொலைகளைப் பார்த்திட வேண்டும்.
10 நாட்களுக்கு முன்னர் போட்டத் திட்டம்.
     சர்தார்புரா படுகொலைகள் 2002 மார்ச்சு திங்கள் 1 ஆம் நாள்தான் நடைபெற்றன.
     இதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் (பிப்ரவரி 20ஆம் நாள்) சந்தார்புராவில் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த தலைவர்கள் தொண்டர்கள் ஆகியோரின் கூட்டம் ஒன்று காலையில் நடந்தது. மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை ஏவிவிடும் அனல்பறக்கும், பேச்சுக்கள் இடம் பெற்றன.
     அடுத்த நாள் முதலே முஸ்லிம்களைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களும் வந்திறங்கின. அங்கே இருந்த மக்களுக்குப் பகிர்ந்து தரப் பட்டன.
Source : Teesta setalvad interview in fl dec 16,2011, (TH:10-11-2011).
     வாசகர்கள் இங்கே ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளெல்லாம் கோத்ராவில் ரயில் நிலையத்தில் வைத்து சபர்மதி எஸ்பிரசின் இரண்டு ரயில் பெட்டிகள் எரிக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற ஏற்பாடுகள். இது நாம் காலாகாலமாகக் கூறிவரும் உண்மையாகிய, குஜராத் கலவரங்கள் நீண்ட நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டவை என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. இதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
     சர்தார்புராவில் நடந்தனவற்றிற்கு வருவோம். சர்தார்புராவில் முஸ்லிம்கள் கூட்டாகக் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் பஷீரா பீவி என்ற முஸ்லிம் பெண்மணி அருகிலிருந்த மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்கிடச் செல்கின்றாள். அவளுக்கு பொருள்கள் விற்பனை செய்த வியாபாரி "எல்லாப் பொருள்களையும் இன்றே தின்றுவிடுங்கள் நாளைக்கு உங்களால் தின்ன முடியாது" என்று கூறி இருக்கின்றார்.
Source : Front line: December 16,2011P.29.
கொலைகளின் கோரம்:
     2002 பிப்ரவரி 28 ஆம் நாள், காலை 9 மணிக்கெல்லாம் இந்துக்கள் பலர் ஒன்று குழுமினார்கள்.
     muslim_death_370இதில் உள்ளூரிலுள்ள இந்துக்களும் உண்டு, வெளியூர்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்துக்களும் உண்டு. இவர்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து முஸ்லிம்கள், ஹரிஜனங்கள், ராவல்ஸ் ஆகியோருக்கு சொந்தமான பெட்டிகளையும், இதர கடைகளையும் தாக்கவும், தகர்க்கவும், தீயிட்டுக் கொளுத்தவும் செய்தார்கள்.
     உடனேயே காவல்துறைக்குத் தகவல்கள் பறந்தன. காவல்துறைவேன் வந்தது. காப்பாற்றப் பட்டோம் என்றே நினைத்தார்கள் பாதிப்பிற்கு உள்ளான முஸ்லிம்கள், ஹரிஜனங்கள், ராவல்கள் ஆகியோர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் எதிராக காவல்துறையின் கண்முன்னால் இந்த அநியாயங்கள் தொடர்ந்தன. சற்று நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு காவல் துறையின் ஊர்திகள் பறந்துவிட்டன. அதன் பின்னரும் கடை எரிப்புகள் தொடர்ந்தன.    
     மறுநாள் காலையும் இந்துக்கள் ஆயுதங்களுடன் குழுமினர். எரிக்க வேண்டியதையெல்லாம் எரித்த பின்னர், இந்துக்கள் ஏன் கூடுகின்றார்கள்? என்ற வினாவிற்கு விடைதேடிய முஸ்லிம்கள், இவர்கள் நம்மை அழிக்கத்தான் ஒன்று கூடுகின்றார்கள் என்பதை உணர்ந்து காவல்துறை தலைமைக்கண்காணிப்பாளர் ஏ. ஜெஹலாட் - வரை தகவல்களைத் தந்தார்கள். அத்தோடு முந்தைய நாள் தங்கள் உடைமைகளையெல்லாம் அழித்ததையும் முறைப்படி பதிவு செய்தார்கள்.
     மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளருக்குச் செய்திகள் பறந்தவுடன் அவர் இரண்டு காவல்துறை ஆய்வாளர்களை அனுப்பி வைத்தார். இரண்டு காவல்துறை ஆய்வாளர்களும் குழுமி இருந்த இந்துத் தீவிரவாதிகளைக் கலைந்து போகச் சொல்லவில்லை. குவித்து வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிட வில்லை. மாறாக அமைதி பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக கூறினார்கள்.
     காவல்துறை தலைமைக்கண்காணிப்பாளர் தனது ஆய்வாளர்களிடம் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆய்வாளர்கள், சாக்குப் போக்குகளைப் பதிலாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
     மாலை நான்கு மணிக்கு Peace committe meet அமைதி குழுவின் கூட்டம் என்றெல்லாம் காவல்துறை ஆய்வாளர்கள் புருடாவிட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கு மாதங்களாக மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த சர்தார்புராவுக்கு அன்று மாலை காவல் துறையின் வருகையால் மின் இணைப்புக் கிடைத்தது.
     நான்கு மணிக்கு அமைதிக் குழு கூட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் முஸ்லிம்கள் ,ஹரிஜன்கள், ராவல் வகுப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்தார்கள்.
     அதாவது முந்தைய நாள் பொருளாதார இழப்புகளுக்கு ஆளானவர்கள் அனைவரும் வந்தார்கள். ஆனால் இழப்புகளை ஏற்படுத்திய பட்டேல் இனத்தைச் சார்ந்தவர்களும், பிரஜாபதி இனத்தைச் சா£ந்தவர்களும் வரவில்லை.
     கிராம நாட்டாமை (சர்பஞ்ச்) பட்டேல் இனத்தைச் சார்ந்தவர் வந்தார். வந்தவர் வேறுபட்டேல் இனத்தைச் சார்ந்தவர் எவரும் வரவில்லை என்பதை கண்டு கொண்டார். பிரஜாபதி இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் அமைதி குழுவுக்கு வரவில்லை என்பதையும் கண்டார். அதனால் அங்கே இருந்த காவல்துறை ஆய்வாளர் தப்பித்துச் சென்றிட நிலைப்பட்டார். காரணம் கேட்டபோது, இதோ வந்து விடுகின்றேன். எல்லா பட்டேல்களையும் அழைத்துவருகின்றேன் எனக் கூறி சென்றுவிட்டார்.
     பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் வராததால் அமைதி குழு கூட்டம் நடைபெறவில்லை. இதனால் தங்களைப் பேரழிவு பீடிக்கும் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே காவல்துறை கண்காணிபா£ளருக்குச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
ஊரைவிட்டு வெளியே செல்லும் வழிகள் அடைப்பு:
     இதனிடையே ஊரிலிருந்து வெளியே செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஊரிலுள்ள முஸ்லிம்களும், ஹரிஜனங்களும், ராவல்களும் பீதிவயப்பட்டார்கள்.
     அந்த மொத்த சர்தார்புராவிலும் ஒரே ஒரு வீடுதான் பெரிய வீடு. அதன் பெயர் 'ஷேஹ்வாஸ்'. இதனை ஊரிலுள்ளவர்கள் சாதாரணமாகவே "பக்கா ஹவுஸ்" முழுமையான வீடு என்றுதான் அழைப்பார்கள். அந்த வீட்டை நோக்கி எல்லோரும் சென்றார்கள். வீட்டில் 33 குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்.
     பட்டேல்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு தாக்கிட தயாரானார்கள். ஒரு பெரிய 'ஒயரையும்' இரும்புத் தடியையும் இணைத்து மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அறையில் போட்டார்கள் மின்சாரம் தாக்கி முஸ்லிம்கள் கருகினார்கள்.
     முஸ்லிம்கள் எல்லாம் மின்சாரம் பாய்ச்சித்தான் கொலை செய்யப்பட்டார்கள் என்றுதான் அன்றைக்கு வெளியான பத்திரிகைகள் எல்லாம் எழுதின. ஆனால் இன்றோ எரித்துக் கொலை செய்யப்பட்டார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி விடுகின்றார்கள்.
     எரித்தும் கொலை செய்யப்பட்டார்கள் என்பது உண்மைதான் மின்சாரம் பாய்ச்சப்பட்ட இரும்புத் தடியை உள்ளே செலுத்தியபின், இன்னும் உள்ளவர்களைக் கொலை செய்ய ஒன்றாக ஒட்டு மொத்தமாக வீட்டைக் கொளுத்திவிட்டார்கள். அந்த வீட்டை மட்டுமல்ல முஸ்லிம்களுக்குச் சொந்தமான எல்லா வீட்டையுந்தான் கொளுத்திவிட்டார்கள். இரவு இரண்டு மணிக்குப்பின் மாவட்ட தலைமைக் கண்காணிப்பாளர் வந்தார்.
     வீட்டினுள் ஒரு தாயின் கையிலிருந்து தெறித்த ஒரு குழந்தை குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது அதை மருத்துவமனையில் சேர்த்தார். சிலபேர் அங்கே இருந்த 'கபர்ஸ்தானம்' - என்ற இறந்தமுஸ்லிம்களைப் புதைக்கும் புதைகுழியில் பதுங்கிக் கொண்டார்கள். இவர்களையும் மீட்டார்
Source : Crime against Humanity. Vol. I an Enquiry into The Carnage in Gurat. List of incidents and Evidences : by Concerned Citizens Tribunali Gujrat:2002
உயிர் பிழைத்தவர்களின் நிலை:
     இதில் உயிர் பிழைத்தவர்கள் சாத்நகர் என்னுமிடத்தில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். இன்னும் குஜராத் அரசு இவர்களை எப்படி யெல்லாம் அல்லல்களுக்கு ஆளாக்கிட வேண்டுமோ அப்படியெல்லாம் ஆளாக்கி வருகின்றது.
     நீங்கள் ஏன் ஊருக்குத் திரும்பவில்லை என்று கேட்டால் அந்த மக்கள், எங்களவர்களைக் கொலை செய்த பலர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் எங்கள் இரத்தத்திற்காக காத்துக் கிடக்கின்றார்கள். காவல் துறையும் அவர்களின் கைகளில் இருக்கின்றது என்று கூறுகின்றார்கள்.
     பத்தாண்டுகள் ஆகிவிட்டன. நாங்கள் பட்டினியைப் போக்கிட பக்கத்து கழனிகளில் ரூபாய் 50 க்கு வேலை செய்கின்றோம். அதைக் கொண்டே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியதுள்ளது என அழுது புலம்புகின்றார்கள்.
     அத்தோடு எங்களை அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை, முஸ்லிம் அமைப்புகளும் கண்டு கொள்ள வில்லை. நாங்கள் 'மெஹர் கோத்தாரி' என்ற மனித நேயர் கட்டித்தந்த ஒற்றை அறை வீடுகளில் தாம் வாழ்ந்து வருகின்றோம்.
     இங்கு ஒரே ஒரு பள்ளிக் கூடந்தான் இருக்கின்றது. அதில் எட்டாம் வகுப்பு வரை தான் இருக்கின்றது. இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
     உயிருக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மக்களின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்புப் படை ஏற்றுக் கொண்டுள்ளது. காரணம் நரேந்திர மோடியின் பாதுகாப்பின் கீழ் அவர்களை விட்டால், ஒரே இரவில் அதம் பண்ணிவிட்டுப் போய்விடுவார்.
 The Hindu: 4Nov: 10,2011:FL: 16,2011
தலித்கள் அல்ல:     
     பொதுவாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களும் இந்த பிரச்சாரத்திற்குப் பலியாகி விட்டார்களோ என எண்ணிடும் அளவிற்கு அந்தப் பிரச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது.
     அது 2002 குஜராத் இனப்படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்கள் தலித்கள் தாம் என்ற பிரச்சாரமே. இதை வைத்துக்கொண்டு சிலர் நம்மிடம் "நீங்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லி முஸ்லிம்களாக மாற்றி இருந்தால் குஜராத் இனப்படுகொலையிலிருந்து தப்பித்து இருக்கலாம்" என்று பேசுகின்றார்கள்.
     இஃது தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையே பகையை வளர்க்க திட்டமிட்டுச் செய்யப்படும் பிரச்சாரம். காரணம்.
     நாம் மேலே தந்த தகவல்களைக் கவனியுங்கள். சர்தார்புராவில் பிப்ரவரி 28, 2002 அன்று முஸ்லிம்களின் கடைகளையும் ஹரிஜனங்களின் கடைகளையும் அதாவது தலித்களின் கடைகளையும் ஒன்று போலவே அழித்திருக்கின்றார்கள்.
     ஆகவே தாக்குதலுக்கும் பொருளாதார அழிவுகளுக்கும் ஆளாகி நின்றிருக்கின்றார்கள் தலித்கள் - ஹரிஜனங்கள். ஆகவே அவர்களே முஸ்லிம்களைத் தாக்கினார்கள் என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்பதை இதிலிருந்து உணரலாம். இதனை இன்னும் தெளிவுபடுத்தும் விதமாக கொலைகளைச் செய்தவர்கள். பட்டேல்களும், பிரஜாபதிகளும் தான் என்பதும் எல்லோராலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் அமைப்புகள்:
     2002 குஜராத் இனப்படுகொலைகள் நடந்து முடிந்தவுடன் நாடெங்கிலுமுள்ள முஸ்லிம் அமைப்புகள் நிவாரண நிதிகளை வசூலித்தன. குஜராத்தில் நிவாரணங்களைச் செய்து கொண்டிருந்த அமைப்புகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறின.
     ஆனால் இப்போது சர்தார்புரா - தீர்ப்பிற்குப் பின் பாதிக்கப்பட்டவர்கள் தந்திருக்கும் தகவல்கள், அந்த நிவாரணங்கள் அந்த மக்களுக்குச் செல்லவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே தடைகள் எங்கே வந்தன? இதில் குஜராத் கொடுங்கோலன் மோடிக்குப் பங்குண்டா? என்பனவற்றை ஆய்வுக்குட்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் சென்றடைந்திட ஆவன செய்திட வேண்டும்.
வழக்கும் தீர்ப்பும்:
     சர்தார்புராவில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து 28 முதல்தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. அவற்றை விசாரிக்கத் துவங்கிய காவல்துறையினர் தாக்கியவர்கள் யாரென்று தெரியாது. கும்பல் தாக்கியது, கும்பல் தாக்கியது என்றே புலன் விசாரணையில் மழுப்பினார்கள்.
     உயிரிழந்ததொரு குற்றப்பத்திரிகையே குஜராத் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
     அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி விசாரணையில் கிஞ்சிற்றும் கவனம் செலுத்தவில்லை மிகுந்த அச்சத்தோடு சாட்சியம் சொல்ல வந்த முஸ்லிம்களையும் அலட்சியம் செய்தார்.
     இதனால் இந்த வழக்கை குஜராத் நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடாது. குஜராத் -க்கு வெளியேயுள்ள நீதிமன்றங்களிலே தான் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் டீஸ்டா செட்டல்வாட் முதலானோர்.
     முன்னாள் குஜராத் காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார், டீஸ்டா செட்டல்வாட் போன்ற சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளினால் 2003 இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளையும் விசாரணைகளையும் நிறுத்திவைத்தது.
     மோடி இந்த வழக்குகள் எந்த நீதி மன்றத்திலும் நடந்திடக் கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். அதனால் நீதிமன்றங்களை எப்படியெல்லாம் குழப்பலாமோ அப்படியெல்லாம் குழப்பினார்.
     2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்தது. அதன் தலைவராக ஆர்.கே. இராகவன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நமது சி.பி.ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையில் இயக்குனராகப் பணியாற்றியவர். ஒருபெரும் குழப்பம் என்னவெனில் இவர் இந்துத்துவ சிந்தனையில் அழுத்தமான பிடிப்புள்ளவர்.
     குஜராத்தில் நடந்த (2002) இனப்படுகொலைக்கும், மோடிக்கும் நேரடியாகச் சம்மந்த முண்டு என்பதற்கான ஆவணங்கள் இவருடைய கைகளில் சிக்கியபோதெல்லாம் அவற்றைச் சிதைத்தார்.
மோடியைக் காப்பாற்றிய விசாரணை:
     குஜராத் - திலுள்ள குல்பர்க் சொசைட்டி கூட்டுக் கொலையில் இஹ்ஷான் ஜாபரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்டார். அவருடன் இன்னும் 90 நபர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
     இந்த வழக்கில், ஒரு பெரும் போரைத் தொடுத்து வருகின்றார் இஹ்ஷான் ஜாபரியின் மனைவி சபியா ஜாபரி. முன்னாள் குஜராத் உளவுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் அவர்கள் மோடி 2002, 27 பிப்ரவரி இரவில் தன் வீட்டில் நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்களின் மீது காட்டிட அனுமதியுங்கள் என்று கூறியதாகச் சொன்னார்.
     இதற்கான அடுக்கடுக்கான ஆவணங்களை உச்ச நீதி மன்றத்திடம் டீஸ்டா செட்டல்வாட் போன்றவர்கள் தந்தபின்பும் அவற்றையெல்லாம் புறந்தள்ளினார் இந்த ஆர்.கே. இராகவன்.
     இவரிடந்தான் இந்த சர்தார்புரா கூட்டுக் கொலையையும் விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
     இதில், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மீது கொலைக்கான சான்று இருந்தது என்பதை நிரூபிக்க தந்த ஆவணங்களை அப்படியே இருட்டடிப்புச் செய்தார்.
ஆர்.கே. இராகவனின் பித்தலாட்டம்.   
     சர்தார்புரா படுகொலைகள் நடப்பதற்கு 10 நாள்களுக்கு முன்னரே இந்துத் தீவிரவாதிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது என்பதையும், ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக் கப்பட்டன என்பதையும், இன்றே சாப்பிட்டுக் கொள்ளுங்கள், என்று ஒரு கடைக்காரன் பஷீரா பீவி இடம் சொன்னதையும் நாம் மேலே பதிவு செய்திருக்கின்றோம். இவையெல்லாம். சர்தார்புரா படுகொலைகள் ஒரு பயங்கர திட்டத்தன் கீழ் தான் நடந்திருக்கின்றன என்பதைத் தான் நிரூபிக்கும்
     இதனால் சர்தார்புரா கூட்டுக் கொலையில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது இந்திய தண்டணை சட்டம் 120பியும் நிரூபணமாகும். இந்திய தண்டணைச் சட்டம் 120 பி நிரூபிக்கப்படுமேயானால் கூட்டுக் கொலைகளைச் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்கிட வேண்டும்.
     இந்த மரண தண்டனையிலிருந்து அத்தனைக் இந்துத்தீவிரவாதிகளையும் காப்பாற்றிவிட்டார் ஆர்.கே. இராகவன். இதனை டீஸ்டா செட்டல்வாட் மெத்த வருத்தத்துடன் சுட்டிக் காட்டியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 'தி இந்து' பத்திரிகையும் தனது தலையங்கத்தில் நாசூக்காக சுட்டிக் காட்டி இருக்கின்றது.
     குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் 76 பேர். தண்டனை பெற்றவர்கள் 31 பேர், 42பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் மைனர் என்பதால் அதற்குரிய நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றது, இரண்டு பேர் சந்தேகத்தின் பலன் வழங்கப் பெற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
     நீதிபதியே இந்தக் கொலைகள் திடீரென வந்தக் கோபத்தில் நடந்தவை எனக் கூறியுள்ளார். உண்மை அதுவல்ல சர்தார்புரா கொலைகள் ஒரு பெரும் சதியின் நிறைவேற்றம்.
     இதனை மேல் முறையீடுகள் மூலம் நாம் நீதி மன்றங்களில் நிரூபிப்போம் என சூளுரைத்துள்ளார் டீஸ்டா செட்டல்வாட். 42 பேர் விடுதலை செய்யப்பட்டதை இந்து பத்திரிகை தனது நவம்பர் 11,2011 தலையங்கத்தில் இப்படிக் கூறுகின்றது. However in ablow to the feeling of the victims. The Court Has Acquitted 42 of Them. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பேரிடியாக 42 பேரை நீதிமன்றம் விடுவித்து விட்டது. 11-11-2011 The HINDU.
     ஆனால் பத்திரிகைகள் எல்லாம் இதுதான் இந்திய வரலாற்றில் வகுப்புவாத கொலையில் மிகவும் அதிகமானோர் தண்டிக்கப்பட்ட வழக்கு எனப்பாராட்டுகின்றனர்.இதன் மூலம் நீதி கிடைத்துவிட்டது என எல்லோரையும் சமாதானப்படுத்திட முயற்சிகள் நடக்கின்றன.
     இல்லை! இஃதோர் நீண்டபோர் அதில் அந்த மக்கள் - சர்தார்புராவிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் கொலையில் ஈடுபட்ட பலர் இன்னும் சுதந்திரமாகச் சற்றிக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் எங்கள் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றார்கள் எனக் கூறியவற்றிலிருந்து, குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
     2002 மார்சு 1 இல் சர்தார்புராவிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இல்லங்களில் குடி அமர்த்தப்படாத வரை நியாயம் கிடைத்ததாக எடுத்துக் கொள்ள இயலாது.
     அதுவரை எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் துணை நிற்போம்.
சாவுமுகத்திலும் முஸ்லிம்களின் வீரம்:
     சர்தார்புரா கூட்டுப் படுகொலையில் குற்றவாளிகளைத் தண்டிக்க மிகவும் அத்யாவசியமாகத் தேவைப்படுவது கண்ணால் கண்டவர்களின் சாட்சியம்.
     இதை உயிர் பிழைத்த முஸ்லிம்கள் தாம் செய்திட வேண்டும் என்ற நிலை. சாட்சியம் சொன்னால் உங்களுக்கு மரணம் நிச்சயம் எனச் சுற்றிச் சுற்றி வந்தார்கள் மோடியின் அடியாட்கள்.
     அத்தனையையும் எதிர்கொண்டு, அஞ்சாமல் சாட்சியம் சொல்லி மோடியின் அடியாட்களுக்கே தண்டனைப் பெற்றுத் தந்துள்ளனர் சர்தார்புராவில் உயிரைத் தக்க வைத்துக் கொண்ட முஸ்லிம்கள் - அவர்களைப் பாராட்டுவோம் இந்த வழக்கில் சாட்சியம் சொல்லிட வந்தவர்கள் பட்ட கஷ்டங்களைக் கூர்ந்து கவனித்து இந்து பத்திரிகை அதையும் தனது 11-11-2011 தலையங்கத்தில் சுட்டிக் காட்டுகின்றது இப்படி.
     அதாவது 17 வது சட்ட ஆணையம் சொன்ன சாட்சியம் சொல்பவர்களைப் பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமாக ஆக்கிட வேண்டும். அதை மத்திய அரசு சில இனம்புரியாத காரணங்களுக்காக கிடப்பில் போட்டுள்ளது.
           'தி இந்து' 11-11-2011 தலையங்கம்.     

1 comment:

  1. 1xbet korean - legalbet.co.kr
    › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sport › indian › sports 메리트 카지노 쿠폰 › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports 1xbet › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sport › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › deccasino indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports › indian › sports ›

    ReplyDelete