islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உமர் அப்துல்லா சர்ச்சைக்குரிய கருத்தை கூறினாரா?


                                 
சாந்தன்,பேரறிவாளன்,முருகன் ஆகிய மூவரும் இந்தியப்பிரதமராக இருந்த மக்களின் செல்வாக்கைப்பெற்ற ராஜீவ் காந்தி அவர்களை மனித வெடிகுண்டால் கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டணை பெற்ற குற்றவாளிகள்.


இவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும்,பல்வேறு அமைப்புக்களைச்சார்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த வேளையில் கடந்த செவ்வாய்க்கிழமை (30-08-2011) தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தமிழக மக்களின் உணர்வுக்காக தாம் வலியுறுத்துவதாக முன்மொழிந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு மாநிலத்தில் ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 
இத்தீர்மாணத்திற்கு காரணம் இவர்கள் இந்துக்கள் என்பதனால் அல்ல.இவர்கள் ''தமிழர்''கள் என்பதால்.

தமிழக சட்டப்பேரவை தீர்மானம் குறித்து, ''ட்வீட்டர்'' என்ற சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ''நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது இருப்பதைப் போல பா ஜ கவினர் அமைதியாக இருப்பார்களா?'' என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தப் பிரச்சினையை வைத்து உமர் அப்துல்லா அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகக் குற்றம் சாட்டியது. அதற்காக, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு என்ன தவறாக கூறிவிட்டார்?

சாந்தன்,பேரறிவாளன்,முருகன் மூவரும் இந்துக்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், அவர்கள் ''தமிழர்''கள் என்ற அடிப்படையில் தமிழக சட்டசபையில் எப்படி தீர்மாணம் நிறைவேற்றினார்களோ?. அப்சல் குரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இல்லாமல் காஷ்மீரைச்சார்ந்தவர் அந்த அடிப்படையில் ''காஷ்மீரி''.

அந்த அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ''நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது இருப்பதைப் போல பா ஜ கவினர் அமைதியாக இருப்பார்களா?'' என்று அவர் தெரிவித்த கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா ஜ க கூறுவது அவர்களின் ''காவிசிந்தனை''யையும், ஓட்டு வேட்டையையும் தோலுரித்து காட்டுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்; பார்லி., வளாக தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை முதலில் தூக்கில் போட வேண்டும் மற்ற விஷயங்களை பிறகு பேசலாம் என்கிறார்.

அப்சல் குரு தொடர்பான எந்த தீர்மானம் ஆனாலும் பா.ஜ., எதிர்க்கும் என காஷ்மீர் மாநில பா.ஜ., தலைவர் மன்ஹாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவன் ஒரு சதிகாரன், குற்றம் புரிந்துள்ளான் என்பது கோர்ட் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்கிறார்.

அப்சல் குரு குற்றவாளியா?

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவருடைய மனைவி அனுப்பிய கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார்.

ஆனால், பல ஆண்டுகளாக அந்த மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் எந்த முடிவும் எடுக்காததால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வந்தன.

மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார்.

அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீஸ் சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீஸ் தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போய் நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாட்டுக்கு காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டுகிறது, பாரதிய ஜனதா.

பாபர் மஸ்ஜிதை இடித்த உண்மை குற்றவாளிகள்!!

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை சதிகாரர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில அப்பாவிகள்தான் மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர்.

மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ''லிபரான் கமிசன்'' அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை.

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.
பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர்.

சட்டத்தின் முன் உண்மை குற்றவாளிகளாக நிற்கும் அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்களை தூக்கில் போடச்சொல்லி யார் போராடுவது? 

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கில் போடுமாறு இந்துமதவெறியர்கள் உள்ளிட்ட ‘தேசபக்தர்கள்’ அடிக்கடி கூப்பாடு போடுகின்றனர். அப்சல் குருவைத் தூக்கில் போட்டால்தான் பா.ஜ.க மற்றும் அன்றைய அரசாங்க சதிகள் மறைக்கப்படும் என்பதால் அவர்களும் ஊடகங்களும் இதை வலியுறுத்துகின்றனர். அப்சல்குருவைத் தண்டிக்க போதிய முகாந்திரங்கள் இல்லையென்றாலும் தேசத்தின் பொதுப்புத்தியை கணக்கில் கொண்டு இந்த தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அப்சல் குரு குற்றவாளி இல்லை என்று தெரிந்த பின்னரும் ''பொதுபுத்தியை'' கணக்கில் கொண்டு இந்து மக்களின் ஓட்டுக்காக காங்கிரஸார் மற்றும் பா ஜ க அவரை குற்றவாளியாக்கியிருக்கின்றனர். 2006-லேயே சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையிலும் -
அப்சல் குருவைத் தூக்கில் போடாமல் மத்தியகாங்கிரஸ் அரசு இன்னமும் தாமதப்படுத்த என்ன காரணம் என்று ''விக்கி லீக்ஸ்'' ஒரு சில காரணங்களை வெளியிட்டுள்ளது -

அப்சல் குருவை தூக்கில் போட்டால் காஷ்மீரில்  காங்கிரஸ்  அரசுக்கு
பல தொந்திரவுகள் ஏற்படும் – எனவே அவனுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு பரிந்துரை செய்தாராம்
அப்போதைய காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.

அதே போல், அடுத்து உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வரவிருப்பதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் கணிசமான ஓட்டுக்கள இழக்க நேரிடும் என்றும் சோனியா காந்தி எண்ணினாராம்.

தூக்கு தண்டனையை ரத்து செய்து,மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட கோப்பை ஜனாதிபதிக்கு  அனுப்பலாம் என்றால் -
அப்போதைய ஜனாதிபதியான அப்துல் கலாம் பரிந்துரையை நிராகரித்து, தண்டனையை நிறைவேற்ற உத்திரவிட்டு விட்டால் என்ன செய்வது என்கிற பயமும் சோனியா காந்திக்கு இருந்ததாம்.

இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக்கண்டு பிடிக்கப்பட்ட பார்முலா தானாம் “கிடப்பில் போடுவது”. அப்போது தூக்கிப் போட்டது தான் இன்னும் “கிடப்பில்” இருக்கிறதாம் !

இவ்வாறு விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஓட்டு அரசியல்” நம் நாட்டில் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது  என்பது நமக்கு தெரிகிறதோ இல்லையோ - அரசியல் வாதிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் கங்கிரஸும், பா ஜ க வும் மக்களிடம் ஓட்டுப்பொறுக்க முஸ்லிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றன.

சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை பெற்றவர்களை காப்பாற்ற ஒரு மாநிலத்தில் அந்த மாநிலத்தைச்சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தீர்மாணம் போட்டால் அதை பாராட்டுவார்களாம், நீதிமன்றமே ஒருவரை குற்றவாளி இல்லை, எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி தூக்கு தண்டனை விதித்தவரை காப்பாற்ற எங்கள் மாநில சட்டமன்றத்தில் தீர்மாணம் போட்டால் சும்மா இருப்பார்களா? என்று தன்னுடைய ''ட்வீட்டர்'' இணையதளத்தில் எழுதியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூக்குரலிடும் கோட்டான்களை மக்கள் இனம் கண்டு புறக்கனிக்கவேண்டும்.

இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலிருந்தும் இதேபோன்ற கோரிக்கை வந்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு டெல்லியில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தேவிந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்.

இச்சூழலில் பாஜகவின் தோழமை கட்சியும் பீகாரை ஆளும் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “ உமர் அப்துல்லா சொல்வது சரியே. காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் இது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக கூறினார். ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கரிப்பட்டவர்கள் தூக்கிலிட்டே ஆக வேண்டும் என்று கூறும் பாஜக ஏன்? ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதோ அல்லது தேவேந்தர் பால்சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாஜகவின் இன்னொரு கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தள் கூறிய போதோ எதிர்த்திருக்க வேண்டும்.

அப்போது எதிர்க்காமல் அப்சல் குருவுக்கு மட்டும் எதிர்ப்பது பாரபட்சமானது என்றும் திவாரி கூறினார். தேவேந்தர் பால்சிங் புல்லர் 1991ல் பஞ்சாப் போலீஸ் ஜெனரல் சுமேத் சிங் சைனி மற்றும் 1993-ல் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பிட்டா ஆகியோரின் உயிரை பறிக்க முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும் அவரின் கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்விரு தாக்குதலிலும் வேறு பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் வரலாறு.

அ.அப்துல் வஹாப், சேலம்

No comments:

Post a Comment